அய்யா வைகுண்டர் இதிகாசம் -32 பண்டிதர் விடைகொடுத்தல்

அய்யா வைகுண்டர் இதிகாசம் -32

பண்டிதர் விடைகொடுத்தல்


ஒன்றை மறுத்தல் என்பது அதனை மதிக்காமை அல்ல.அதன் அடுத்த காலத்தை உருவாக்க விளைதல்,உள்ளவற்றை மதிக்கத் தவறுவது மறுத்தல் அல்ல.ஒன்றை மறுத்தல் என்பது அந்த ஒன்றைக் கடக்க முற்படுதல்.கடத்தல்.எனவே கடக்க முற்படுகையில் மறுக்கும் ஒன்று நம்முடன் தொக்கி நிற்கிறது.எனவே அதனை மதிக்கத் தவறுவோமாயின் இரண்டு பிழைகளை மேற்கொள்கிறோம்.முதலில் அதனுடனான நமது தொடர்பை இழக்கிறோம்.தொடர்பை இழந்தால் அதனை மறுக்கவேண்டியதில்லை.இரண்டாவதாக எதனை மறுக்கிறோமோ அதனை மதிக்கத் தவறுதல் மூலமாக அதனைக் கடக்கமுடியாமலாகிறோம்.ஏனெனில் நாம் மறுக்க முயல்வது வேறு ஒரு காலத்தை, மேலே ஏறி வந்த காலத்தை .அது முன்னதை விடவும் முக்கியமானது.அடுத்ததை விடவும் இன்றியமையாதது.

ராமாவதாரம் முக்கியம் அதனினும் முக்கியம் தொடங்கிய இடம்.மச்சாவதாரம்.கிருஷ்ணாவதாரம் அழகு.முன்னதில் விட்ட தொடர்ச்சி.ஒரு அர்த்தத்தில் இருந்து அல்லாது பிறிதொரு அர்த்தம் உண்டாவதில்லை.

பண்டிதர் காலை வகுப்பில் பேசிக் கொண்டிருந்தார்.அரியும் முத்துவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிற குழந்தைகளுக்கு வேறு வேறு வேலைகள் பணிக்கப்பட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

காலத்தை உருவாக்கவில்லை எனில் அது அப்படியே உறைந்து போய் கிடக்கும்.பல யுகங்கள் ஆனாலும் அப்படியே கிடக்கும்.இரவு, கரிய அழுக்காடை அனைவரையும் மூழ்கடிப்பது போல தினமும் சூழ்ந்து ,அனைவரும் இப்படி தேங்கிக் கிடக்கிறார்கள் பாருங்கள் என பகலில் வெளிச்சம் வீசி காட்டித் தரும்.வேறு எதுவும் நடக்காது.நாம் செய்ய வேண்டியதெல்லாம் பாவனைகளின்றி புதிய காலத்தை படைப்பதுதான்.பழைய பண்டிதர்கள் அத்துணை பேரும் செய்தது இதனையே.முதலில் நாம் அவர்களின் படைப்புகளிலேயே இருந்தோம்.பின்னர் பூமியில் பிறந்தோம்.அன்னைக்கும் தந்தைக்கும் பிறந்ததாகச் சொல்லிக் கொள்வதெல்லாம் நம்முடைய ஆசை.இப்படித்தான் என வரையறுக்கும் ஆசை.ஒருவகையில் அது உண்மையென்றே கொண்டாலும் கூட அதற்கு முன்னரே மூலமான உண்மை இருக்கிறது.

நான் இதுகாறும் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து சொல்ல விளைந்த செய்தி இது மட்டும்தான்.மூலம் உங்களுக்கு முன்னர் இருக்கிறது.நீங்கள் அது இருப்பதை உணர்ந்தால் அது உங்களுக்குள் வந்து பாய்கிறது.உணர்பவன் வரும் வரையில் அது காத்திருக்கிறது.உணர்பவன் இல்லாதவிடத்தே அது மௌனமாகிறது.உறைகிறது. நீங்கள் உங்களுக்குள் அது உறைய அனுமதிக்காதீர்கள்.என்று பண்டிதர் அரியையும்,முத்துவையும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

நான் கணக்கும்,எழுத்தும் படிப்பித்தது இதற்காகத்தான்.கணக்கும் ,எழுத்தும் நான் சொல்லித்தர வேண்டிய சொல்லுக்கு சாக்குப்போக்கு அவ்வளவே.இதனைக் கேட்கும் திறனுள்ள ஒருவனையெனும் கண்ணால் கண்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான்.உங்கள் இருவரையும் ஒருவருக்கு இருவராகப் பார்த்துவிட்டேன்.ஏகதேசம் என்னுடைய பணி நிறைவடைந்ததாகக் கருதுகிறேன்.நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிவை இன்னும் ஏராளமாக உள்ளன.அவை என்னிடமில்லை.என்னிடம் உங்களுக்கு தர இருந்தது ஒரேயொரு சொல் மட்டுமே.அதற்காக காத்திருந்தேன்.தந்துவிட்டேன்.

நீங்கள் நாளை முதல் வரவேண்டாம் என்பது போல ஒலிக்கிறது பண்டிதரே...என்றான் முத்து.

அப்படித்தான் சொல்கிறேன்.உங்களிடம் என் பணி முடிந்து விட்டது.உங்களைக் கண்டு சேர்க்க என்னிடம் தரபட்ட பொருளைத் தந்துவிட்டேன் இல்லையா ?

இருக்கலாம்.ஆனால் பகிரமாக அந்த சொல்லுக்கு இணையான ஒன்றை உங்கள் பாதங்களில் நாங்கள் சேர்க்க வேண்டும் இல்லையா ? அதையும் நீங்கள் காணத்தானே வேண்டும் இல்லையா ?எனவே நீங்கள் உங்களை இப்போது எங்களிடமிருந்து துண்டித்துக் கொள்ளக் கூடாது என்றான் முத்து.

இல்லை கண்மணிகளே..எப்போது நானுங்களுக்கு எனது சொல்லை தந்து விட்டேனோ பிறகு உங்களில் நான் தொடர்கிறேன் என்பதே அர்த்தம்.துணை வருகிறேன் என்பதே பொருள்.ஆனால் இதில் ஒரு துண்டிப்பும் இருக்கிறது.நேற்று பொன்னுதான் எனக்கு இதனை உணர்த்தியவர்.மறைமுகமாக உங்களில் எனக்கு இன்பம் இருக்கிறது.என்னுடைய வார்த்தைகளுக்கு முதன்முதலாகப் பொருந்திக் கண்ட கண்கள் உங்களுடையவை.கேட்கும் விதத்திலிருந்து தோன்றிய சொல்லை உங்கள் முன் படைத்தேன். உங்கள் கண்களில் நின்றே நானுங்களுக்குத் தர வேண்டிய வார்த்தைகள் எழும்பி மேலே வந்தன.வெறுமனே அவை என்னிடம் பொங்கியெழுவதை உணர்ந்தேன்.அது எனக்குப் பேரின்பமாக இருந்தது. நான் தரவேண்டியவற்றைத் தந்த பின்னரும்,அந்த இன்பத்திற்காக உங்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறேனோ என்னும் எண்ணம் எனக்குள் முளைத்து விட்டது.எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதனினும் அதிகம் உங்களுக்குத் தெரியும்.உங்களின் குரு வேறெங்கோ இருக்கிறார்.அவர் உங்களுக்காக காத்துக் கொண்டுமிருக்கிறார்.அதற்கு இடையில் என்னுடைய சுய நலங்களுக்காக உங்களை இங்கே நான் நிறுத்தி வைக்கக் கூடாது.அது பாபம்.எனக்கு உகந்ததல்ல.பரம்பொருளே உங்கள் குருவாக வருவார்.இனி நீங்கள் தேட வேண்டியது கூட இல்லை.வருவார்.நிச்சயிக்கப்பட்டது நிறைவேறும்.

முத்துவும் அரியும் பண்டிதரின் கால்களில் விழுந்து வணங்கி கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"