அய்யா வைகுண்டர் இதிகாசம் -26 முடிசூடும் பெருமாள் - 1

அய்யா வைகுண்டர் இதிகாசம் -26

முடிசூடும் பெருமாள் - 1


குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளின் விளையாட்டென்பது மகிழ்ச்சியின் கோஜம்.மனிதனின் தன்னிச்சையான வெளிப்பாடுகளில் மிகவும் உன்னதமானது ஒன்று உண்டெனில் அது இதுவே .குழந்தை விளையாட்டு.வினோதமான தீவிரம் அது.

வெயிலாள் குடிலின் முற்றத்திலிருந்து விளையாடத் தொடங்குவார்கள்.அடுத்து கோனார் விளை தாண்டுவார்கள்.சிறுவர் விளையாட்டுகளில் முதல் இடம் கண்ணாமூச்சி விளையாட்டிற்கே.விளையாடி ஆடி பக்கத்து கிராமங்களுக்குள் நுழைந்து விடுவார்கள்.அங்கே யாருடைய குரல்களாவது எச்சரிக்கும்.யார் நீங்க ...எங்க வந்திருக்கிய,யாருக்க மக்க..

அப்போதுதான் குழந்தைகளுக்கு ஊர் கடந்திருக்கும் போதம் உண்டாகும்.பெரிய பிள்ளைகளுக்கு கபடி,சிங்கா முள் என பல விளையாட்டுகள் உண்டு.சிங்கா முள்ளும் ஊர் கடந்து செல்லும் விளையாட்டே.கடந்து சென்ற பின்னரே போதம் உருவாகும்.பெரியவர்களுக்கு உள்ள விளையாட்டுகளுக்கு களிகள் என்று பெயர்.பெரியவர்களின் களிகள் அனைத்துமே சூதாட்டத் தன்மை கொண்டவை.

முடிசூடும்பெருமாள் அனைத்து விளையாட்டுகளில் இருந்தும் பின்தங்கும் குழந்தையாக இருந்தான்.ஆர்வமற்ற குழந்தை ;விளையாட்டில் பின் தங்குவது போல பின் தங்கினான்.அவனை திரு நாமமே பாதி வழி எடுத்துச் சுமக்க வேண்டியிருக்கும்.ஆனால் விட்டுவிட்டுக் கிளம்பினால் அதற்கும் சம்மதிப்பதில்லை.அழுது அடம்பிடிப்பான்.இவனயும் கூட்டிற்று போங்க பிள்ளையளா ...என்பாள் வெயிலாள்.விளையாட்டு தொடங்கியது போலத்தான் இருக்கும்,நெடுந்தூரம் கடந்திருப்பார்கள்.தேடிச் செல்ல முடியாது.எந்த திசையில் சென்றிருப்பார்கள் என்றே சொல்லமுடியாது.

எந்த பக்கம் போவது ,எந்த திக்கில் நுழைவது என்று எல்லாவற்றையும் விளையாட்டுதான் தீர்மானிக்குமே அன்றி ஆடுபவர்கள் தீர்மானிப்பதில்லை.எத்தனை மணி நேரம் ஆடுவது என்பதை களைப்பு தீர்மானிக்கும்.களைப்பு அதிகமானதும் ஒருபிள்ளை அடுத்த பிள்ளை மீது பராது சொல்லத் தொடங்கும்.ஒவ்வொன்றும் கசக்கும்.சற்றே அதிக சண்டைவரும்.பசியெடுக்கும் .கலைந்து செல்வார்கள்.ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் உறவு சற்றே அறுந்து பிரிந்து செல்வார்கள் குழந்தைகள் என்பதே சரி.ஆரம்பத்தில் கேட்கும் அசுர ஒலிகள்,விளையாட்டு தீவிரம் பிடிக்கையில் சன்னமாகும்.குறையும்.களைத்துப் போன பிறகு வாக்குவாதங்களின் மெலிதான ஒலிகள் மட்டுமே வரும்.ஆரம்பத்தில் வரும் அசுர ஒலிகள் கேட்டு ...இங்கன தாம் ஆடுகிறார்கள் என நினைப்போம்.ஆனால் தாண்டி கடந்து போயிருப்பார்கள்.எப்படி தப்பி போனாலும் வடக்கே பூலாங்குளம் தாண்டிச் செல்வதில்லை.அதற்கப்பால் வடக்குத் தாமரை குளம் வந்து விடும்.எப்படிப் பார்த்தாலும் சொந்த சாதி கிராமங்களை குழந்தைகள் கடப்பது கிடையாது.அப்படி ஒரு நிலை உருவானாலும் பெரியவர்கள் எச்சரித்து தடுத்து " யாருடைய மகபா நீ...யாருக்க பய நீ என விசாரித்து திருப்பி விடுவார்கள்.மறு நாள் பெற்றோருக்கும் தகவல் சொல்லுவார்கள்.

அப்போதெல்லாம் சுற்று வட்டார கிராமப்பகுதியில் உள்ள அனைவரையுமே அனைவருக்கும் நேரில் தெரியும்.பெயர் தெரியும்.இன்னாருக்க சித்திய அங்க கெட்டி குடுத்துருகுல்லா ..அவளுக்க கொழுந்தன் பய இவன் அப்படித்தானடெ என்பார்கள்.எல்லாசமூகங்களும் இப்படியான நெருங்கிய குழுக்களாகவே இருந்தார்கள்.இதில் அரசாங்க முகவர்களாக இருக்கும் குடும்பத்தாருக்கு ஒரு மேட்டின்மைப் பண்பும் மேலதிகாரத் தன்மையும் இருந்தன.அரச பயத்தை மூலதனமாகக் கொண்டு,மக்களை அடக்கி ஆண்டார்கள்.பறித்தார்கள்.ஆட்டுவித்தார்கள்.சுய சாதிமக்களிடமும் அட்டூழியம் செய்தார்கள்.வரியை அதிகபடியாக வசூலித்தார்கள்.இவர்களை அரசாங்கத்திற்கு பராது சொல்வதும் எளிமையான காரியம் இல்லை.அரசை நெருங்கும் பாதையெங்கும் இப்படியான நூறுபேர் இருந்தார்கள்.நூறுபேரையும் கடந்து சென்று கண்டாலும் நம்முடைய தரப்பு பலகீனமானதாகவும் அவர்களின் தரப்பு நூறு மடங்கு பலம் அதிகம் கொண்டதாகவும் இருக்கும்.சென்ற காரியம் பிழையாகிப் போவதற்கான வாய்ப்பே அதிகம்.நியாயம் ,நீதி இவையெல்லாம் பொதுவானதாக ஏற்படுத்தப்படவில்லை.சாதி அடிப்படையிலான நீதிமுறையே அன்று இருந்தது.

தாழ்ந்த சாதியினர் நாடார் ,ஈழவர்,புலையர்,தோல் வணியன்,பறையன்,கம்மாளன்,தீயன் இத்தனையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு சாதிகள் தீண்டத்தகாதோராகக் கருதப்பட்டனர்.அவரவர் சாதிகளில் இருந்தே அரச முகவர்கள் இருந்தார்கள்.ஒரு சாதியில் குறிப்பிட்ட பகுதிகான முகவரே வரியை பிரித்து அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.உயர் சாதியினர்,உயர் வகுப்பார் ஆகியோரிடம் பிரிக்கப்பட்ட வரிகளைக் காட்டிலும் பல மடங்கு வரி,தீண்டத்தகாதோரிடம் வலிந்து பிடுங்கிக் கொள்ளப்பட்டன.சின்னச் சின்ன கலகங்களின் போது மட்டுமே நாயர்படைகளோ ,அரசபடைகளோ வந்து திரும்பின.திருவிதாகூர் அரசுக்கு வெள்ளையர் தொடர்பு ஏற்படுவது வரையில் முறையான படைகள் இருக்கவில்லை.ஊர் சண்டியர்களே படைகள்.படையெடுப்பு என்பதும் அதுவரையில் ஊர்திரண்டு அடிப்பதுதானே அன்றி பெரும்படையெடுப்புகள் இல்லை.அதனால் எல்லா ஒடுக்கபட்ட சாதிகளிடத்தும் சுயசாதி சண்டிகளே அதிகாரம் மிக்கவர்களாக இருந்து ஒடுக்குமுறையை அமல் படுத்தினார்கள்.திருவிதாங்கூர் அரசு பேரரசு அல்ல.ஊர் சண்டிகளை நம்பி ஆட்சிசெய்த சிறு குழு அரசு அது.

திரு நாமம் கிளம்புபோதே லே தம்பி ,இட மறுச்சு வரச் சொல்லப்படாது கேட்டியா ? என்பான்.

முடிசூடும் பெருமாளிடமிருந்து ம்ம்ம் என்று ஒலிவரும்.அவனுக்கு அப்போது ஐந்து வயது திகைந்திருந்தது.

வெயிலாள் சற்று நேரத்திலேயே இவர்களைத் தேடத் தொடங்கி விடுவாள்.சத்தம் போட்டு லேய்ய் ...எங்கல போனிய ..என்பாள்.வெயிலாளின் அந்த சப்தம் போல பிற பெண்கள் சப்தமிடுவதில்லை.அவளுடைய சப்தம் விடுதலை பெற்றவளின் சப்தம் போன்றிருக்கும்.அவளுடைய நாதத்தில் பயம் இல்லை.மூச்சில் சந்தேகமில்லை.இரைச்சலில் கோபமில்லை.அப்படியான சப்தம் அங்கே முதன் முதலாக வெயிலாளின் வடிவிலேயே கேட்டது.மாநிறமான வடிவில் கேட்டது.பிற பெண்களின் நாதத்தில் உதித்ததெல்லாம் பாதுகாப்பின்மையின் நீர்வளையங்களை ஒத்த அலறல் ஒலிகளே.

அன்று முடிசூடும் பெருமாளும் திரு நாமமும் பெரிதும் பின் தங்கினார்கள்.கடந்து கடந்து முகிலன் குடியிருப்பு ஊருக்கு அருகில் நின்று அழுதுக் கொண்டிருந்தார்கள்.தம்பியால் அடியெடுத்து வைக்க முடியவில்லை.திரு நாமம் பயந்து போயிருந்தான்.அவனுக்கு அழுகை அழுகையாக வந்ததே தவிர இங்கிருந்து எப்படி செல்வது என்பது விட்டுப் போயிற்று.

லேய் எங்கல வந்திய..
யாரப் பாக்க வந்திய ..
யாருக்க மக்கல நீங்க ...என்கிற குரல் அருகாமையில் கேட்டது சுற்றிலும் பனைகள்.உயர்ந்தவை .வடலிப் பனைகள்.பனங்கிழங்கு மேடுகள் இப்படி இருந்தது.மேலேறி ஒதுங்கிய தேரி நிலம்.

மனித ஒலி கேட்டதும் திரு நாமத்திற்கு கொஞ்சம் தைரியம் வந்தது.அவனுக்கு இடம் விட்டுப் போனதைக் காட்டிலும் அம்மை அடிப்பாள் என்கிற பயமே அதிகமாக இருந்தது.அந்த பயமே அவனுக்குத் திவங்கி நின்ற இடத்தை கண்மறைத்தது.

குரல் வந்த திசையைப் பார்த்தான்.நான்கு பெரியவர்கள் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.இனி சென்று சேர்ந்து விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு வந்தது.காற்று இதத்துடன் வீசுவதை அப்போதே கவனித்தான்.

வந்தவர்களில் மூவர் களி வைத்திருந்தார்கள்.அவன் பூமி பாதுகாவலர்கள் அவ்வாறு களி கொண்டு வருவதைக் கண்டிருக்கிறான்.அவர்களில் களியில்லாமல் வந்தவர் முகிலங்குடியிருப்பு துரைப்பாண்டி நாடார்.அரச முகவர்.

உங்க ஊடு எங்கல் இருக்கு என்றார் துரைபாண்டி

சாஸ்தாங்கோயில் விள என்றான் திரு நாமம்

அப்பன் பேரு என்னல ..
பொன்னு நாடாங்க்

ஓ...பொன்னு நாடாம்பிள்ளயளா
அவன் முசுடுல்லா ,எங்கள கண்டா அவனுக்கு அரியண்டமா வருமே..சரி

உங்களுக்கு பேரு என்னனு போட்டிருக்கு...
நா திரு நா ...இவன் முடிசூடும் பெருமா

ராசாக்க பேருல்லா வச்சுருக்காம் ராசா..
என்றான் துரைப்பாண்டியுடன் வந்த களி வைத்திருந்தவர்களில் ஒருவன்.

வாங்கல ஊட்டுல கொண்டு விடுதே
நடங்க என்றார் துரைப்பாண்டி

பிள்ளைகள் இருவரும் மணற்தேரி மேலே ஏறி திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.

துரைப்பாண்டியும் உடன் வந்தவர்களும் ஊர்கதைகள் பேசி உடன் வரத் தொடங்கினார்கள்.

[ தொடரும் ]


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"