அய்யா வைகுண்டர் இதிகாசம்-36

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-36


புலரிக்கு முன்பாகவே முளிப்பு தட்டி விட்டது.தூங்கினோமா இல்லையா என யூகித்துப் பார்த்தான் முத்து.கனவு உடலில் வலித்தது.உடல் நிலை கடினமாக இருந்தாலும் மூளைக்குள் சுள்ளென்று ஏதோ எரிவது போல இருந்தது.அது எங்கேனும் என்னை இழுத்துச் சென்று காட்டு என்பது போல .கொல்லைக்குச் சென்று கோரி வைக்கப்பட்ட மண்பானைத் தண்ணீரில் குளித்தான்.குளிக்காதவரையில் உள்ளுக்குள் சுள்ளென்று எரிவது அணையாது.குளித்து முடித்த பின்னர் அந்த எரிச்சல் உணர்ச்சி மூளை விட்டு கண்களில் நின்றது.

அரியின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.அதுவொருவித வேகநடை.அதில் வேறு யாரோ நடந்து செல்வதைப் போன்ற வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான்.ஜனங்கள் நடமாடத் தொடங்க இன்னும் இரண்டு நாழிகை ஆகும்.விடிந்து உதயத்திற்கும் முன்பாக வெளிச்சம் தோன்றுகையில் அவர்கள் நடமாடத் தொடங்குவார்கள்.காடு திருத்தச் செல்பவர்களுக்கு காலை வேளையே மிகவும் உவக்கும்.வெயில் வெளியேறச் சொல்லும் முன்பாகவே நினைத்ததில் பாதி வேலையை முடித்திருப்பார்கள்.அப்புறம் மீதி வேலைகள் அங்கன இங்கன நின்னு கத பேசி அந்திவரை ஆகும்.அவர்கள் இன்னும் எழும்பியிருக்கவில்லை.செல்லும் இடமெங்கும் நாய்கள் களைத்துக் குரைத்தன.குரைப்பதும் படுத்துக் கொள்வதுமாக சில நாய்க்குரைப்புகள்.அவற்றின் குரைப்புகள் வீறிட்டு எழவில்லை.அவற்றுக்கு புலரிக்கு முன்பு இந்த நேரத்தில் செல்பவர்களை வேகமாக கடுமையுடன் குரைக்க ஏலாது.அவை அந்த வேகநடையின் விசித்திரம் மீது குரைத்தடங்கின.வேகநடையில் கொந்தளிப்பின் சலனம் இருந்தது.

அரியின் அம்மை வெளியில் வந்து பார்த்தாள்.பாம்படம் வடிந்து தொங்கியது.பாம்படம் அணிந்த பெண்கள் பிறரிடம் அச்சமற்றிருந்தனர்.அவர்கள் புதிய தலைமுறைப் பெண்டிர்.அரியின் அம்மையும் அவ்வாறே இருந்தார்.இந்த காலைக்கு முந்தைய இருளில் ஒரு பையன் தேடி வந்து நிற்பதை அவள் ஆச்சரியம் கொள்ளவில்லை.திகைப்படையவில்லை.வர வேண்டாதவன் ஒருவன் வந்து நிற்கிறான் எனவும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை.

அரி இன்னும் முளிக்லியே புள்ளோ என்றாள்.பின்னர் உள் நோக்கி சென்றவள் லே முத்து வந்திருக்காம்புல என்றாள்

அரிக்குத் திகைப்பாக இருந்தது .இந்த நேரத்தில் அவன் வருவதில்லை என்பதால் ஏற்பட்ட திகைப்பு அது.அரி புதிதாக ஏதேனும் ஆசிரியரிடம் பாடம் படிக்கும் பொருட்டே வந்திருக்கக் கூடும்,என நினைத்தான்

என்ன? என்றான் அரி

வா..எங்கயாச்சும் போவோம் என்றான் முத்து

ம்..எங்கயாச்சும்னா...

வழக்கம் போல இல்லாத்த எங்கயாச்சும்.ஒரு இடத்திலேயே இருக்கக் கூடாது.எங்கயாச்சும் போணும் வரணும்.இங்க நாம பாக்க நாலு ஊருக்கு மத்தியில என்ன இருக்கு ? இருக்குறது பாத்தாச்சே
...

எங்க

மருங்கூர் போலாம்.தூர வழிதான் என்னாலும் எனக்கு வழி தெரியும் .விசாரிச்சு வச்சுருகேங்

அம்மை அவலும் கருப்பட்டியும் எடுத்துக் கொடுத்தாள்.எடுத்துக் கொண்டு ஈத்தங்காடு கடந்து செல்கையில் விடிந்திருந்தது.நாலா புறமும் வற்றாத குளங்கள்.வெள்ளம்.இங்கே ஒருவன் பிறந்து இந்த மடியில் விழுவதே அதிசயம்தான்.பச்சையின் மடி இது.இளம் பச்சை ,இருள் பச்சை ,ரத்தப் பச்சை இப்படி.சுற்றிச் சுற்றிப் பச்சை.வெள்ளம் நிறைந்த நீரோட்டம். நிறைவு தோன்றும் விருட்சங்கள்.புன்னைகளில் சூரியக் கதிர்கள்.பழையாற்றின் கரை ஒரு ஓரமாக தெற்கில் மணக்குடி நோக்கியும் மேற்கில் மலைகளை நோக்கியும் வளைந்து வளைந்து படுத்திருக்கிறது.சதா சிணுக்கம்.வெள்ளத்தின் ஒலி சிணுங்குவது போலும் கேட்டுக் கொண்டிருந்தது.ஒடும் வெள்ளத்தின் ஒலி கேட்கும் பூமியில் பிறப்பவன் எவ்வளவு அனுகூலமானவனாக இருக்க வேண்டும்.? ஆனால் அவ்வாறு இல்லை.ஏன்? பச்சை பச்சையாக வயல்கள்.தொலைவு வரையில் பச்சை அலை.ஆனால் அது பயத்தின் அலை போல ஜனங்கள் உணருகிறார்கள்.பயம் அகன்ற பிறகே இந்த பச்சை அவர்களுக்கு பயன்படும்.உள்ளத்தில் இறங்கும்.இயற்கையோடு இருக்கும் மனிதனுக்குள் இயற்கை ஒட்டுவதில்லை.அவன் மரமாகவோ மிருகமாகவோ இருந்து விடுகிறான்.அது வெளியில் நிற்கிறது.தனித்திருக்கிறது.இணைப்பில்லை .வேறு எதுவெதுவெல்லாமோ வந்து அதனை மறைத்து விடுகிறது.இந்த பச்சையும் வெள்ளத்தின் சிணுங்கலும் இனி என் உள்ளத்தில் அகலாது உறையும்.இந்த இனிய காலைக்கே என்னை உள்ளிருந்து எதுவோ உந்தியிருக்கிறது.

அரி ..இந்த பச்சை உன்ன என்ன செய்கிறது ? என்று கேட்டான் முத்து

நீ எதற்கு கேட்கிறாய் என்று சரியாக எனக்கு உணரத் தெரியவில்லை.நாம் நம்முடைய வரம்புகளைக் கடந்து செல்கிறோமோ என்று கவலை உண்டாகிறது என்றான் பதிலுக்கு அரி.நாம் கடந்து கொண்டிருக்கும் இடங்கள் முன்னோர்கள் கடக்க விரும்பாதவை.மரணத்தை உண்டுபண்ணுபவை...

பாதி விஷயங்கள் உண்மை.நீ நினைப்பவற்றில் பாதி அர்த்தம் உண்மை.பாதி அர்த்தம் அதற்கு வெளியில் இருக்கிறது.பகையில் பாதி கற்பனை.ஒடுங்குவதில் பாதி பழக்கம்.ஒடுக்கியவனுக்கும் பழக்கம்;ஒடுங்கியிருப்பவனுக்கும் பழக்கம.கற்பனையிலேயே அது பெரிதாக இருக்கிறது.நடைமுறையில் நினைப்பதிலிருந்து சிறியதுதான் அது.அணுகினால் அது அவ்வளவு பெரிதில்லை என்று தெரிந்துவிடும்.சுய லாபங்களுக்காக பராமரிக்கபடும் பகைகளுக்கே வாழ் நாள் அதிகம்.எனெனில் சுய நலம் அதனை வடியவிடாமல் சோறு போட்டுக் கொண்டேயிருக்கும்.சந்தேகத்தில் சிறு கடுகளவே உண்மை.மீதம் பெருக்கிக் கொள்வது.வஞ்சம் ,பழியுணர்ச்சி,இருப்பு கட்டுவது,அறிவதற்கு முன்னரே முந்துவது என ஆரம்ப உணர்வுகளுக்கு நீடித்த வாழ்வளித்தால் மனம் அழியும்,அதனால் குலம் அழியும்.நாம் இப்போது எல்லாபாதைகளையும் பயத்தால் மூடி வைத்திருக்கிறோம்.அனைத்தையும் உள்ளுக்குள் முதலில் திறக்க வேண்டும்.பின்னர் அது வெளியிலும் திறந்து விடும்.

ஒரு சிறு பகுதியில் சுற்றிச் சுற்றி வருகிறோம்.வெளியேறுவதில்லை. நாலு மையிலுக்கு அப்பால் உள்ள எதுவும் நமக்குத் தெரிவதில்லை. நாம் மனதைச் சுற்றி நாலுபக்கமும் நாலு மைலுக்குள் சுருக்கி வைத்திருக்கிறோம்.சுருக்கி வைத்தால் மனம் சுருங்கப் பழகி விடும்.நிமிராது.ஒரு சுருக்குப் பை அளவிற்குச் சுருங்கி விடும்.நாள் பட சுருங்கியிருக்கிறது என்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாது.

நம்முடைய ஜனங்கள் உடலை தானமாக நிலத்திற்கு வழங்குகிறார்கள். நிலத்தில் முறையம் வைத்திருக்கிறார்கள்.சரண் கொண்டிருக்கிறார்கள்.அது அவர்களைக் காக்கிறது.அது சிறந்ததே நிலத்தில் வீழ்ந்தால் அது கைகொண்டு முந்தோன்றி எழுப்பும் சந்தேகமே வேண்டாம்.சோறு கொடுக்கும்.அதன் பிறகு ?

அரி... நீ புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் எளிமையானது.நாமிங்கே சுருங்க வரவில்லை.அனைவரையும் ஒரு மலர் போல விரிக்க வந்திருக்கிறோம்.விரிய வந்திருக்கிறோம்.பச்சை ,நீலம்,இருள் ,ஒளியெல்லாம் காண வந்திருக்கிறோம்.எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவுக்கு.காணாத பச்சை காணப்படாது போகும்.காணாத நீலம் காணப்படாது.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"