அய்யா வைகுண்டர் இதிகாசம் -33 பண்டிதர் வீடு

 அய்யா வைகுண்டர் இதிகாசம் -33

பண்டிதர் வீடு

முதல் நாளில் பண்டிதர் வீட்டுக்குச் செல்கையில் ஏற்பட்டப் பரவச உணர்வு முத்துவுக்கு நினைவுக்கு வந்தது.சாஸ்தான் கோயில் விளையிலிருந்து தெற்கு தாமரைக் குளத்திற்கு கரும்பாட்டூர் வழியே சென்றான்.நிறைய பாதைகள் உண்டு.குறுக்கே ஒத்தையடிப் பாதைகளாக நிறைய உண்டு.கரும்பாட்டூர் வழியே செல்வது எளிதானது.தெளிவான பாதைக் கொண்டது.புவியூர் செல்லும் வழியில் ஏறி வளைந்து வளைந்து சென்று பத்திரகாளியம்மன் பீடத்திற்கு முன்னதாகவே அரியின் விளை வரும்.விளைக்குள் அவர்கள் குடில் போட்டிருந்தார்கள்.பனையோலையால் வேயப்பட்ட குடில்.அரியின் தகப்பனார் நிறைந்த சம்சாரி.அரி எப்போதும் முன்கூட்டியே காத்திருப்பான்.இருவருமாக பண்டிதரின் வீடு அடைவார்கள் .பத்திரகாளியம்மன் பீடத்திற்கு பின்பக்கமாகச் செல்லுகிற ஒற்றையடிப் பாதையில் வடக்குப் பக்கமாகச் சென்றால் விஸ்தாரமான தோப்பு வரும்.விளையின் மத்தியில் பண்டிதரின் வீடு அமைந்திருந்தது.

முற்றத்தில் மாமரம் ஒன்று கிளை விட்டு களம் முழுதும் படர்ந்திருந்தது.தெற்குப் பக்கமாக சிறிய வைக்கோல் போர்.வைக்கோல் போர் இருந்த பக்கமாக கோழிகள் நிறைய தீனி எடுத்து நின்றன.முன்பக்கக் கிணற்றில் பண்டிதரின் மனைவி ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தார்.ஒன்றிரண்டு வேலையாட்கள் அங்கேயிங்கே என நின்று கொண்டிருந்தார்கள்.நிலைபெற்ற குடும்பம் என்பது தெரிந்தது.பண்டிதரின் பெயரை அந்த சுற்று வட்டாரமே நன்கறியும்.குழந்தைகளுக்கு பெயர் வைத்து விடுவார்.அதிகம் பெயர்களே அப்போது யாருக்கும் தெரியாது.பல ஊர்களில் பெயர்கள் முக்கியமாக இருந்ததுமில்லை.பண்டிதர் சூட்டுகிற பெயர்கள் தொந்தரவு அதனால் ஏற்படாவண்ணமும்,அதே நேரத்தில் வடிவுடனும் இருந்தன.அவரால் பெயர் சூட்டப்படுதல் என்பது சமூக கௌரவமாக இருந்தது


வெள்ளை வேட்டி,வெள்ளையில் ஒரு தலைமுண்டு அணிந்திருந்தார்.அந்த வட்டாரத்தில் அப்படி நேர்த்தியாக யாரும் உடையணிவது கிடையாது.அகஸ்தீஸ்வரம் மிகவும் பக்கத்தில் இருந்தது. அது தறியும் நெசவும் உள்ள ஊர்.வரிசையாக குடிசைகளின் முன்பாக பசைமுறுக்கிய பருத்தி நூல் காய வைத்திருப்பார்கள்.புளுங்கல் வாசம் வீசிய வண்ணமாக இருக்கும்.அகஸ்தீஸ்வரம் சுற்றி பருத்தி விவசாயம் இருந்தது.அது நீரில்லாத பொட்டல் தன்மை கொண்ட ஊர்.அந்த ஊரில் வெள்ளை உடுப்பு பலர் அணிந்திருந்தார்கள் .பக்கத்து ஊரான .சந்தையடியில் சிறிய சந்தைக்கு இந்த உடுப்புகளும் வருவது உண்டு.தறியிருந்த குடிசைகளில் உள்ளோர் அழுக்காடைகளையே உடுத்தினார்கள்.புதிய நாகரிகம் பெற்ற ஊராக இருந்தமையால் உடுப்புக்கு அங்கே முக்கியத்துவம் இருந்தது.வெள்ளை வேட்டியும் தலைமுண்டும் இருந்தால் சொந்த சாதிக்குள்ளேயே அவர்கள் மேற்குடி.

தறிக் கூண்டுக்குள் ஆணோ பெண்ணோ மாட்டிக் கொண்டால் வாழ்க்கை முழுவதுமே ஒரே ஒரு நாள் மட்டும் வாழ்ந்தது போல அடங்கி விடும்.உள்ளே சென்று பின்னர் அவரே உள்தாள்பாள் இட்டுக்கொள்வதைப் போல.தறிக்குள் இருப்போரை வெளியில் காண்பதே கடினம்.தறிக் கூண்டுகள் இருளால் ஆனவை .வெளியேறவே முடியாத இருளாகும் அது.தப்பிக்கவே முடியாத இருள்.அந்த இருளை ஏற்றுக் கொண்டால் சோறு போடும்.ஆனால் அந்த இருள் பிறகு அதனைப் போன்ற மற்றொரு குழிக்குள் செல்வதற்கு மட்டுமே வழி விடும்.பிறிதொன்றையும் அனுமதியாது.சாமி சென்று அவர்களைப் பார்க்க வேண்டுமாயினும் கூட தறிக் கூண்டுக்குள் சென்றே காண வேண்டி வரும்.

அந்தக்காலத்தில் மாற்று ஆடைகள் கிடைக்கும்.வண்ணாத்தியிடம் இருந்து மாற்று ஆடைகள் பெற்று உடுத்திவிட்டுத் திருப்பித் தரலாம்.பெரும்பாலும் அதற்கு அவசியம் ஏற்படாமலே பலருக்கு வாழ்வு முடிந்து விடும்.வண்ணாத்தியிடம் சென்று மாற்று ஆடைகள் ,உடுப்புகள் வாங்கி அணிபவர்களையே பிறர் செல்வந்தர்களைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.பெண் பார்க்கச் செல்கையில் ,பெண்ணைக் கைபிடிக்கச் செல்கையில் வண்ணாத்தியே மாற்று கொண்டு வருவாள்.தேவைப்படுவோர் எடுத்து கட்டிக் கொண்டு திருப்பித் தரலாம்.எல்லா உடுப்புகளுமே முண்டுகள் தான்.வண்ணாத்தி சம்சாரிகளின் உடுப்புகளையே மாற்றுடுப்புகளாகக் கொடுப்பாள்.அதில் புகார் ஒன்றும் வராது.மாற்றுக்கு நிகர் நெல்.ஒவ்வொரு அறுவடையின் போதும் கொடுப்பார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு வண்ணாத்திக் குடும்பம் உண்டு.அவர்களுக்கு ஊர் வேலைகள் பல உண்டு.பிறப்பு ,இறப்பு,பெண் கைபிடித்தல் என வைபவங்களில் வண்ணாத்தி வந்து மாற்று விரிப்பாள்.

மாமரத்தின் ஒரு கிளை பண்டிதரின் வீட்டின் முகப்பு ஓடு வரையில் சென்றது.அதன் நுனிபாகம் வெட்டப்பட்டிருந்தது.வெட்டப்பட்ட இடத்தைச் சுற்றி குத்தாக தளிர்கள் முளைத்திருந்தன.ஒரு அணில் வேகமாகச் சென்று திரும்பி வர மற்றொரு அணில் அதனைப் பின்தொடர்ந்தது சுற்றி வந்தது.இப்படியாக இரண்டு அணிகளும் நிறைய நேரமாக விளையாடிக் கொண்டிருந்தன.

அணில்கள் மீது நமக்கு ஏன் பரிவு உண்டாகுறது ? ஏதோ ஒன்று அவற்றை சாதாரணத்தில் இருந்து அசாதாரணமாக்குகிறது பார்த்தாயா ? என்று முத்து அரியை வினவினான்.

ராமர் அணில் என்பதுதான் காரணம் என்றான் அரி.

இல்லை.அதனை விட்டுற்று பார்த்தாலும் பரிவுதான் வருது

அது நம்மை அண்டி வாழவும் இல்லை.என்றாலும் பரிவு வருது

எலிமீது ஏற்படவே இல்லை

ஆனா பாரு முத்து மனுஷ எலியையுந் தின்னுறான்.அணியையும் தின்னுரா.எதையும் விடுவதில்ல

ஆமா பசிச்சா மிருகம் தன் கையையும் துண்ணுரும் என்றான் முத்து.

நல்லா பேசிறியளேபா ..என்றபடி பண்டிதர் வாசலில் படியிறங்கினார் பண்டிதர்.

இப்போது விடைபெற்று படியிறங்கும் போதும் இரண்டு அணிகள் அது போலவே விளையாடிக் கொண்டிருந்தன.காட்சிகளைக் காண்பதே ஒரு பிரத்யேக மன நிலைதான் என்று முத்துவுக்குத் தோன்றியது.எல்லோரும் வருகிறார்கள்,போகிறார்கள் காட்சிகள் யாரோ ஒருவருக்குத்தான் அமைகிறது.

முத்துவுக்கு அப்பா எப்படியேனும் பண்டிதரைப் பார்த்து விடுவார் என்று மனதில் தோன்றியபடியே இருந்தது.ஒருவேளை அண்ணனையேனும் அவர் பண்டிதரிடம் நிறுத்தச் சொல்லக்கூடும் என நினைத்திருந்தான்.ஆனால் அவரே நேரில் வந்து விட்டார்.வெயிலாள் தருகிற பழங்கள்,கூப்பனி ,கற்கண்டு ,கருப்பட்டி எல்லாம் முதல் தரமானதை அம்மா பண்டிதருக்குக் கொடுத்து விடுவாள்.அவளுக்கு தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியிருக்கலாம் என்றாலும் அம்மாவின் இளைய தம்பி கோழிக்கோடு மாடன் இதனை விரும்ப மாட்டார் என்று நினைத்தான்.அப்பாவுக்கு தான் தோற்றுவிடுவேனோ எங்கிற பயம் காரணமாக இருக்கும்.ஆனால் தாய் மாமனான் கொழிக்கோட்டு மாடன் தன்னை வெறுத்தார் என்பது முத்துவுக்கு மிகவும் தெளிவாக இருந்தது.

கண்ணீர் திரண்டு வந்து தொண்டையை அடைத்தது.அரிக்கு அவ்வளவாக வலி இல்லையோ ? என்று முத்து நினைத்தான்.ஆனால் அதனை அவனிடம் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை என விட்டு விட்டான்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"