அய்யா வைகுண்டர் இதிகாசம் -27 முடிசூடும் பெருமாள் - 2

அய்யா வைகுண்டர் இதிகாசம் -27

முடிசூடும் பெருமாள் - 2



கோனார் விளை விளிம்பில் வரும் போதே ,துரைப்பாண்டி நாடாருடன் பயக்க வருவதை வெயிலாள் கண்டு விட்டாள்.சிறிய விபரீதம் ஒன்று முளைத்திருக்கிறது என்பது அவள் உணர்வுக்கு எட்டியது.

அவிய வேற இல்ல

எதுவென்றாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான் என்பது வெயிலாளுக்கு உறுத்தியது.

பச்ச களிமண்ணு போல புள்ளைக விளையாட முடிவுல்ல...என்ன ராச்சியமோ தெரியல்ல.நீகம்புல போறானுக வாறானுக என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.எவ்வளவு தைரியத்தை மனசுக்கு வரவளைத்தாலும் அது சரிந்து கீழே விழுந்து நொறுங்குவது போலிருந்தது.தவறு செய்து குற்ற உணர்ச்சி தூண்டப்படுவது போல இருந்தது.தவறே செய்யத் துணியாதவர்களில் குற்றபோதத்தைத் தூண்டுவதில் அடைகிற வெற்றியே அநீதியால் அரசாள்பவர்களின் அதிகாரமாக இருக்கிறது.

பொன்னு பெரும்பாலும் மக்களிடம் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் முகவர்கள் பற்றிய பேச்சு வந்தாலே பதறினார்கள். தாங்களே தவறுதான் என்று நினைத்தார்கள்.குற்றபோதத்திற்கு இலக்கானார்கள்.அரசபடைகள் என்றால் மயங்கி விழுந்தார்கள்.

லே கேண பயக்களா
நானோ நீயோ கொலை செய்யல ...எவந் தலையும் வெட்டப் போறதில்ல.வெட்டுனதும் இல்ல,பின்ன எதுக்குல பயப்படுறிய ..கொன்னு புடுவானோ...கொல்லட்டு...அதுக்கு மேல என்ன புடுங்க முடியும் ? எத்தன பேர கொல்ல முடியும்.லே அவனுக்கும் அனந்த பத்பனாபன் தாம்ப்ல ..அதே அனந்த பத்பனாபன் தான் உனக்கும்.காடு வெட்டி திருத்தி களனி உண்டாக்குனாத்தான் உனக்கும் சோறு அவனுக்கும் சோறு.கொல பாதகம் செஞ்சவனப் போல பயறாத .பயந்தாதான் நா கடிக்கும்,கடிச்சிகிடும்.இல்லங்கி கடிக்காது.

அவன் பல்லக்குலலா போறானு ரோசன பண்ணாத... நீ உண்டாக்கு நீயும் பல்லக்குல போலாம்ல.உண்டாக்குல முதல்ல.களவாங்கிறத காட்டிலும் உண்டாக்குறது லேசுதான் . ஆனா பல்லக்குல போனாலும் வயித்துக்கு சோறுதாம்ப்ல திங்கணும் பாத்துக்க

பொன்னு பேசி கிடைக்கிற வார்த்தைகள் இவை மட்டும்தான்.இவற்றை தினமும் அவர் யார் யாரிடமோ இதையே தான் சொன்னார்.நீ எந்த தப்பும் செய்யல நடுங்காத ,நெளியாத ,குறுகாத ,பணிவோட இரு,ஆனா பயப்படாத..

இதனை இத்தனை ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் பிறரிடம் சொல்லி எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள் .கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.ஆனாலும் துரைப்பாண்டியைக் கண்டதும் தடுமாற்றமாக இருந்தது.அது ஒருவிதமான அநீதி உருவாக்கும் தடுமாற்றம்.எளிதில் போகாது.வெயிலாள் போல பயமற்றவள் ஒரு குலத்தில் உதித்த பிறகும் எளிதில் போகாது..ஆறு தலைமுறைக்கும் மேல் ஆகும் .இந்த அசிங்கமான நெளிவு உடலை விட்டு அகல.அதுவும் பயமற்ற ஒருத்தி முதலில் குலத்தில் தோன்றவேண்டும்.அதன் பிறகு ஆறு தலைமுறை.இல்லையெனின் கணக்கே சொல்வதற்கில்லை.பிறப்பது வேறு.ஒரு குலத்தில் தோன்றுவது என்பது வேறு.பிறப்பவர்கள் எல்லோரும் தோன்றுபவர்கள் இல்லை.முன்சாமிகள் ஒவ்வொருவரும் விட்டுச் சென்ற இடங்களிலிருந்தே புதியவர்கள் தோற்றம் பெறுகிறார்கள்.

உனக்க சாமி ;சாமி வந்தது போலல்லா பேசுகாரு.எங்கிருந்து படிச்சாவ இவிய..என்னா வாயிட்டி..நம்மள பத்பனாபசாமிக்க மக்கேங்காரு.விடுவாவுளாட்டி.பாத்து நடந்துக்க என்கிற பக்கத்திலும் அணுக்கத்திலும் ; அவுக சரியாகத் தான் சொல்லுதாவ ...உங்களுக்குதான் விளங்குதில்ல என்பாள் பதிலுக்கு வெயிலாள்.ஆனால் இப்போது அவளுக்கு அவிய இருந்திருந்தா கொள்ளாமே என்றிருந்தது.

பகல் உச்சி.வேலிகள் சும்மா பேருக்குத்தான் வைக்கப்பட்டிருந்தன.துரைபாண்டி பல தடவைகள் இந்த வாசல்படிக்கு வந்திருக்கான்.கொஞ்சம் பம்முவான்.சாடை பேசுவான்.அவன் வயசுக்கும் பேச்சுக்கும் தொடர்பே இருக்காது.முப்பதுக்குள் இருக்கும் ஆனால் சாடை பேச்சுக்கு அறுபது வயது சொல்லலாம்.அவன் அதிகம் பணிந்தால் பயம் வரும்.அது நமக்கு விடப்படுகிற ரகசிய எச்சரிக்கை.நா உங்களுக்கு சாதகமாத்தானே இருப்பேன் என்றால் உங்களை காட்டிக் கொடுத்து விடுவேன் என்று அர்த்தம் .அவன் உடலே நரிதந்திரத்தால் சாமர்த்தியம் பெற்றிருந்தது.துரைபாண்டி வந்தால் கொடிய விஷம் காண்பது போல .மக்கள் தங்களிடம் உள்ளவற்றில் மேனியை எடுத்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்.அவர்கள் எடுத்து வைப்பதைக் கண்டும் காணாதவன் போல சாடை பொட்டால் அவனுக்கு இன்னும் நிறையவில்லை என்று அர்த்தம். உடன் வரும் கைதடிகளை வாங்கலே என்றால் முடிந்தது போதும் என்று பொருள்.அப்படி ஆவதற்குள் கொண்டு நீட்டிய பொருட்களால் கடவம் நிறைந்து விடும்.இன்னும் எழும்பாதவர்களிடம் கொடூரமாக நடப்பான்.எழும்பியவர்களிடம் பம்முவான்.ஆனால் இரண்டும் ஒன்றுதான்.நடத்தையின் இருவகை

கிழக்கு வடக்காக கோனார் விளை தொடங்குவதில் இருந்தே நடந்து உருவான தடம் இருந்தது.வேலிகளை மண்கூட்டி எழுப்பி அதில் கள்ளிகளை எழுப்பியிருந்தார் கோனார்.கோனாருக்கு அரச வேலை.அதனால் பொன்னுவே அவர் விளையையும் கவனித்துக் கொண்டார்.எசலைகள் ,திருகள்ளிக்கள் என வகைவகையான கள்ளிகளே வேலியமைக்க பயன்பட்டன.எழுப்பிய மண் மேடுகளில் அவை நின்று கொண்டிருக்கும்.ஓரத்தில் உள்ள மண் மேடு தொடர்ந்து நடந்து குலைந்து கிடந்தது.அதிலிருந்த ஒற்றையடிப் பாதைத் தடம் வளைந்து வளைந்து வெயிலாள் முற்றத்தை அடைந்தது.தடத்தின் ஓரங்களில் பச்சைப் புற்கள்.அதில் அனேகம் மூலிகைகள்.

துரைப்பாண்டியுடன் வந்தவர்கள் கோனார் விளைக்கு உள்ளே நுழையவில்லை.துரைபாண்டி பிள்ளைகளுடன் ஒற்றயடி பாதையில் நடந்து முற்றத்தில் வந்து நின்றான்.

அக்காகிட்ட பயினி குடிச்சி எத்தன நாளாச்சு...அக்கா கருப்பட்டிக்கு எல்லோரும் அலந்து கிடக்காவ ...
என்று அவன் சொல்வது கேட்டு ஒருபதிலும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள் வெயிலாள்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"