அய்யா வைகுண்டர் இதிகாசம்-45 மருந்துவாழ் மலை 4

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-45

மருந்துவாழ் மலை 4


மருந்துவாழ் மலையில் இடையர்களின் மறிகள் கூட்டமாக இருப்பதில்லை.சிதறி மேயும்.ஆங்காங்கே இஷ்டம் போல நின்றுகொண்டிருக்கும்.இடையர்கள் கவனிப்பில் இருப்பது போலவே தோன்றுவதில்லை.தன்னிச்சையாக மேயும் போது அவற்றுக்கு தனி மிடுக்கு உண்டாகிறது.கண்கானிப்பில் இருந்து வெளியேறியதும் அவற்றுக்கு காட்டின் நிறம் உண்டாகிறது.ஒரு கணத்தில் கண்காணிப்பிற்கு வெளியில் வந்ததும் சுயேட்சையான மிருக சாயல்.எப்படி இது உண்டாகிறது என்று தெரியவில்லை.உண்டாகிறது அவ்வளவுதான்.மீண்டும் இடையர்களின் கண்காணிப்பில் மலையிறங்கும் போது பழைய மந்தைத் தன்மை உருவாக்கிவிடும்.முட்டி உடல் ஒடுக்கி நெரித்து பிதுங்கி அவர்கள் சொல்பேச்சில் நடந்து செல்லும்.இப்படி நடந்து செல்லும் ஆடுகளும் மலையில் தன்னிச்சையாக நின்று கொண்டிருந்த மறிகளும் ஒன்றேதான்,ஆனால் ஒன்றல்ல

தென்னைகள் அபூர்வமாக வரத் தொடங்கியிருந்தன.வசதியானவர்களும்,தைரியமானவர்களும் முதலில் பாசன வயல் ஓரங்களில் வைத்தார்கள்.தென்னைக்கும் பின்னைக்கும் வரி அதிகம்.திருத்திய காடுகளில் சிலர் தென்னம்பிள்ளை நடவு செய்தார்கள்.தென்னைப் பாத்திகளுக்கு ஆட்டாம்புளுக்கை போலஅசல் உரம் வேறில்லை. சாணியுரத்திற்கு இரண்டாவது இடமே.ஆறுமாததிற்கு ஒருமுறை கிடை போடுபவன் அறுவடை கண் நிறையக் காண்பான்.இடையர்கள் அதன் நிமித்தமாக கிழக்கிலிருந்து வந்து சேர்ந்தார்கள்.இடையர்கள் தவிர்த்து நாடார்களில் ஒரு சிறு பிரிவினரும் கிடை போட்டார்கள்.நாடார் கிடையாடுகள் உள்ளூர்வாசிகள்.தோல் மினுக்கம் அதிகம்.தனித்து இரண்டையுமே அடையாளம் காணலாம்.நாடார் கிடைகளில் வெள்ளாடுகளும் அதிகம் நிற்கும்.கிழக்கிலிருந்து வருபவர்களின் கிடைகள் செம்மறிகளால் ஆனவை.திரி கொம்புகள் நிறைந்தவை.செங்கிடாகாரனுக்கு செம்மறிகளே இஷ்டம்.வாய்க்காத போது வேண்டுமானால் கருங்கிடா கொடுக்கலாம்.

இடையர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களே,அவர்கள் மறிகளைக் கொண்டு நடப்பதால் அவர்கள் செல்வந்தர்கள் என்பது நம் கண்ணில் நிலைப்பதில்லை.முன்னூற்றுக்கும் மேற்பட்ட மறிகளை மேய்த்துத் திரிந்தால் அவன் அதிபதி.கால் நடைகளில் பனை போன்றவை ஆடுகள்.அவை கைவிடுவதே இல்லை.பெருகிக் கொண்டேயிருக்கும்.வற்றாது.நதி வற்றினாலும் மறி வற்றாது.இடையர்களின் நாய்கள் புலிகள்.கன்னி,கோம்பை ,,அலும்பு வகை நாய்களில் ருசி தேர்ந்தவர்கள் அவர்கள்.ஒரு கிடையை மறித்தால் அந்த நாய்கள் செத்தால் மட்டுமே திருட முடியும்.அந்த நாய்களின் வெறிகடி ஆழம் வரையில் பதியும்.இடையர்களின் நாய்கள் கடித்த புண்கள் எளிதில் ஆறுவதில்லை.பெரும்பாலும் சங்குதான்.சாவுக்கு துணிபவனே இடையர் மறிகளின் ருசி அறிய முடியும்.அப்படி துணிந்து ருசி அறியும் செங்கிடாக் காரர்களும் உண்டு.

இடையர்களின் சமையல் வினோதமான காட்டு சமையல் அது.கொதி கூடுதல் உண்டாக்குவது.இடையர்களின் காட்டு சமையல் தவறி உண்டவள் இருந்து கொடுத்து விடுவாள் என்று சொல்வார்கள்.பிராந்து பட்டு பிறகு காட்டிலேயே அலையத் தொடங்கி விடுவாள்.ஊட்டில் இருப்பு கொள்ளாது,நில்லாது.ஆனால் யாரையும் வழி நடைக்கு அழைத்து செல்லும் பழக்கம் இடையர்களுக்கில்லை.அது வாழ்விற்கே குந்தகம் ஆகிவிடும்.செங்கிடாகாரர்களால் வழிப்பறி செய்யப்பட்டு துரத்தப்பட்டு விடுவார்கள்.செங்கிடாகாரர்கள் இருபத்தியொரு வாதைகளில் ஒரு பீடத்தில் அகல் ஏற்பவர்கள்.சிவ மூலம்.அத்துமீறுபவர்களை வழிபறி செய்து அகற்றுவது இவர்கள் வேலை.

செங்கிடாகாரர்களைப் பார்ப்பது கடினம்.ஆனால் இடையர்கள் காண்பார்கள்.இடையர்களின் காட்டுப் பந்திகளில் இவர்கள் விருந்துண்ணலாம்.இருவருக்குள்ளும் தோழமை உண்டு.இடயர்கள் இவர்களைக் காட்டித்தருவதில்லை.இவர்கள் வேட்டை அடித்ததை இடையர்களிடம் தந்து சமையல் செய்வதும் உண்டு.செங்கிடாகாரர்கள் நாய்ப்பூட்டு வசியம் கற்றவர்கள்.

இடையர்கள் சமையலுக்கு வைத்திருக்கும் பாத்திரங்கள் குயவர்கள் ரசனையில் செய்து படைப்பவை.இடையர்கள் குசவர்களிடம் இருந்து வாங்கிச் செல்வார்கள்.இடையர்கள் பணிவது கிடையாது,பணிவது போல பாசாங்கு செய்வார்கள்.கட்டளை இடுபவர்கள் ,இவர்களின் பணிவு கண்டு கட்டளையை நிறைவேற்றுவார்கள் என கற்பனையில் திரும்பியதும்,கட்டளைகள் அவர்கள் கால்களில் நசுங்கும்.

சின்னச் சின்ன பாத்திரங்கள்,சிரட்டை அம்மி.மிளகு நசுக்க,பெரும்பாலும் மசால் நசிக்கி இடுவதுதான்.ஆனால் கைப்பக்குவம் அலாதி.ருசியை சமையலில் கொண்டுவருவதற்கென்றே படைக்கபட்ட கைகள் அவை.மீன் கறி வைத்தால் தேவுக்களுக்கு மணக்கும்.ஆனால் ஒரு பொல்லாத குணம் ஆகாதவர்களுக்கு சோற்றில் விஷம் வைப்பதும் உண்டு.

மருந்துவாழ் மலை வாழ் முனிகளுக்கு அவர்கள் அன்னமிட்டார்கள்,அபூர்வமான சில சமயங்களின் விடம் இட்டார்கள்.சில முனிகள் தொல்லை உண்டாக்குவதில் அவ்வளவு சாமர்த்தியம் நிறைந்தவை.

[ தொடரும் ]


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"