அய்யா வைகுண்டர் இதிகாசம் -34

 அய்யா வைகுண்டர் இதிகாசம் -34


முத்து இரண்டு தினங்களாக பனியால் அவதியுற்றுக் கிடந்தான்.வெயிலாள் பத்து போடுவாள்.பனி விலகும் வரையில் போட்டு கொண்டேயிருப்பாள்.

பொதுவாக சொந்த பந்தங்களில் பனி என்றாலே ஏதேனும் எச்சிக் கோளாறாக இருக்கும் என்கிற நம்பிக்கையே அப்போது இருந்து வந்தது.வெயிலாள் வீட்டில் அப்படிப் பார்ப்பதில்லை.

அம்மா போடும் பத்துத் துணியிலிருந்து தண்ணீர் இறங்கி முத்துவின் பனம்பாய் அடியில் நனைந்து ஒழுகும்.அந்த அசௌகரியம் பனியை விட கடுமையாக இருந்தது.அணில்கள் துடித்து குரல் எழுப்பியவாறிருந்தன.முற்றத்தில் மட்டுமல்லாது,பக்கவாட்டிலும் மேற்குப் பக்கமிருந்தும் அந்த ஒலி வந்தது.மேற்கே காக்காச்சி தோப்பில் இவ்வளவு அணிகளா என்று தோன்றும் அளவுக்கு சத்தம்.இப்படி ஒருபோதும் உணர்ந்ததில்லை.அந்த ஒலிகள் ஏன் இதயத் துடிப்புடன் இணைந்து வலி உண்டாக்கவேண்டும் ?

உடல் சோர்வுறும் போது நாம் அடையும் பிரபஞ்சம் வேறுவிதமானது.அதுவும் உடல் சோர்ந்த பிரபஞ்சமே.மனம் குன்றி நரம்பு உள் இழுத்தால் பிரபஞ்சமும் உள் இழுத்துக் கொள்ளும்.இது வேறு பத்து துணி ஈரம் படுக்கை முழுவதும் என்றாகி ,படுக்கையையும் அடிகொரு தரம் மாற்றுமாறு சொல்லிக் கொண்டேயிருந்தான் முத்து.வடக்கிலிருந்த பாயை எடுத்து வெளியில் காய வைத்து விட்டு தெற்காக பாயை விரிப்பாள்.மீண்டும் அது போல தெற்கிலிருக்கும் பாயை காயவைத்து விட்டு வடக்கில் படுக்கை போடுவாள்.எந்த வேலையையும் இதன் பொருட்டு தள்ளிவைக்க முடியாது.எதையும் குறை வைக்கவும் முடியாது.இத்தகைய சந்தர்ப்பங்களில் உண்மையாகவே மாடு போல அதிலும் செக்கு சுற்றும் மாடுபோல வெயிலாள் மாறி விடுவாள்.

தங்கை உடையாள் சுக்கில் கருப்பட்டி காய்த்து முத்துவிடம் நீட்டினாள்.அவனுக்கு அப்போது அந்த நீர் இறங்குகையில் ஆசுவாசமாக இருந்தது.வலியுணர்ச்சியின் மீது ஆசுவாஸம் கிட்டுவது எவ்வளவு ஆனந்தம் என்பது போல நினைத்துக் கொண்டான் முத்து.

உடல் நலிவுறுகையில் எவ்வளவு எண்ணங்கள் திரண்டு வந்து கொண்டேயிருக்கின்றன ? நிமிர்ந்தால் இவையனைத்துமே புழுதி போல போய்விடும் இல்லையா? இவ்வளவு எண்ணங்கள் அடுக்கடுக்காக வருவது பயமாக இருக்கிறது.ஒன்று துண்டிக்கபட்டதும் அடுத்து பொங்கி வரும் அலைபோல அடுத்து அடுத்து அலைகள்.இந்த எண்ணங்கள் உயர்ந்து மீண்டும் மீண்டும் பயத்தையே ஏற்படுத்துகின்றன.என்ன பயம் ? உண்மையில் பயத்திற்குக் கால்கள் இல்லை.எதன் மீதேனும் அது தலைகீழாக நின்று கொள்கிறது.அது சரியாக நிற்குமெனில் இவ்வளவு பயம் ஏற்படாது.அது தலைகீழாக நிற்கும் விதமே அதனை தாங்கி நிலை நிறுத்துகிறது.

இந்த மக்களிடம் பயம் எங்கிருந்தெல்லாமோ வந்தடைகிறது.பயத்தைத் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறார்கள்.வதந்திகள் மூலம் வருவது போலவே உண்மைகள் வழியாகவும் வருகிறது.உண்மைக்கும் பொய்க்கும் உள்ள இடைவெளி வழியாகவும் வருகிறது.பலசமயங்களில் பொய்யின் தோளில் கைபோட்டபடி நிலமெங்கும் வந்து சேருகிறது.இப்படி வந்து சேருகிற பயம் அகலுமா ?ஒருவர் உடல் நலக் குறை அடைந்தால் மரணித்து விடுவாரோ என்று பயம் ஏற்படுகிறது.இது பொய்யொன்றும் இல்லை.அப்படி ஆகி காணாமற்போனவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் ?வசதியின்மைக்கும் நோய்க்கும் ஒரே முகம்.பயம் அதன் பொது குணம்.எல்லோருமே இங்கே பயப்படுகிறார்கள்.அம்மா பயப்படுகிறாள்.அப்பா வேறுவிதத்தில் பயப்படுகிறார்.அண்ணன் பயப்படுகிறான்.பயமே இல்லை என்று இங்கே ஒருவன் ஏற்படுத்துகிற தோற்றத்தின் அடியிலும் பயம் ஒளிந்திருக்கிறது.பயமல்லாததென்று இங்கே ஒன்றுமில்லை.ஒண்டி வாழும் மிருகங்களும் பயம்கொண்டிருக்கின்றன.எங்கிருந்தோ பெறுகிற பயத்தை மனிதன்,மக்கள் எல்லாவற்றின் மீதும் தெளிக்கிறார்கள்.பிரதிபலிக்கிறார்கள்.ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்துகிறார்கள் .அது அனைவரின் ஊடாகவும் ஊரும் பாம்பென நெளிகிறது.இப்படியே பயந்து கொண்டிருந்தால் சுருங்கிச் சுருங்கி ஊர்வன இனமாக மாறினாலும் வியப்பில்லை.

நீ பயப்படுவதில் தாம்மா பனி வலிமை ஆகுது என்றான் வெயிலாளை நோக்கி முத்து

என்னையா பேசுத ...நீ பறக்கிறதுக்குத்தானே என்னோட நோவு..நா புலம்புனா அந்த தீமை விலகி வழி விடும் பாத்துக்கோ..என்னைய எதுத்துலா அது உங்கிட்ட நிக்குவு..விரட்டிக்கிட்டிருக்கேன் பாத்துக்க ..

அதுக்குத் தெரியும் இனி இங்கன அண்டபுடாதுன்னு,மனுசப்பய அத்தன பேரோட வலிக்கும் பின்னால நிக்கிறது அதுதாம்பூ

உனக்கு என்ன அய்யா ஆச்சு? செல்லு என் தங்கமே..

சரிதாம்ம ...நா குழம்பிட்டேன்.நீ சரியாதா சொல்லுதா..நீ விரட்டி விடுறப்ப அது உள்ள இருந்து வேரோட இழுக்கிற வலி இதுபோல..

சில தினங்களாக அணில் தன்னை நெருங்குவதை உணர்ந்து கொண்டே இருந்தான்.ஆரம்பத்தில் அது பண்டிதரால் உருவானது ,அவர் உருவாக்கிய காட்சியிலிருந்து தனக்குள் எழுந்தது என நினைத்துக் கொண்டிருந்தான்.ஒரு காட்சியை நம்முள் ஒருவர் எழுப்பிய பிறகே அது எழுகிறது.தானாக எழுவதில்லை.எழுந்தது எதுவும் பிறகு ஒய்வதில்லை.அணில் துடி தன் இதயத்தை அடித்து நொறுக்குவது நிற்க வேண்டுமானால் பண்டிதரிடம் தான் முழுதுமாக விலக வேண்டும்.இப்போது அவர் உடம்பில் தன் மேனி ஒட்டி நிற்கிறது.ஒன்றோடு ஒன்றாக .இழுபடும் ஒலி இந்த அணில் துடியாக வலிக்கிறது.அணிலை கையில் எடுத்துக் கொண்டு வலியை கீழிறக்க வேண்டும் எப்படி என்பது தெரியவில்லை என நினைத்துக் கொண்டான் முத்து

அப்புச்சி அங்க போனது தப்புதேங் கண்ணு.அதுக்கு என்ன தெரியும் ?நல்லது நினச்சி நெருப்புல விழும்.கபடம் கிடையாது

மாவுக் கருப்பட்டி கொடுத்து நல்ல புலவர்ட்ட அனுப்புகேங் எழும்பு என்றாள் வெயிலாள்.

ஈரம் படிய படுத்திருப்பது மரணத்திற்கு செல்லுகிற குறுக்கு வழி.உடலில் வந்த பாடு நாளையேனும் நீங்கினால் நல்லது என்றிருந்தது முத்துவுக்கு.

வெயிலாள் குரல் அதை நோக்கித் திருப்புகிறது என்று முத்து நினைத்தான்.

வெயிலாள் கறுப்பு உயரம்.அப்பாவுக்கு நிகரான வளத்தி.சில சமயங்களில் பார்க்க சாமி போல தோன்றுவாள்.அப்படி பலமுறை அம்மா என்பதைத் தாண்டி அவளில் சாமி கண்டிருக்கிறான்.இன்றுகேட்டது சாமியுட குரல்

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"