அய்யா வைகுண்டர் இதிகாசம்-38 மருங்கூர் ,சுசீந்திரம் 1

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-38

மருங்கூர் ,சுசீந்திரம் 1

திரும்பும் வழி நெடுக வெண் மேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்து சென்று கொண்டிருந்தன.அவை மனதின் ஆழத்தில் சென்று விழுவது போல இருந்தது.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வடிவம் .தொடர்சியாக அவற்றைப் பார்ப்பது கடுமையாக இருந்தது.கொஞ்சம் பார்க்காமலிருந்து விட்டு விட்டு மீண்டும் பார்த்தான்.வெளி என்பது விடுதலை.வெளியில் வாவெனென அழைப்பு விடுப்பதும் போலும் அசைவுகள்.அவை மகா மண்டலத்தின் அசைவுகள் போல எதையோ நீந்திக் கடக்கின்றன.வரும் வழியெல்லாம் அவை நீந்துகின்றன.நீரிலும் நீந்து கின்றன.பழையாற்றின் கரையில் வந்து சேருகையில் உச்சி.நண்பகல்.பழையாற்றுக்குள் அவை நீந்திக் கொண்டிருந்தன.

கற்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.ஒருவர் வழியில் தான் கல்வி உருவாகும் என்றில்லை.சிதறியும் உருவாகலாம்.குரு சிலருக்கு சிதறிய நிலையில் அமைகிறார்.எந்தெந்த வடிவங்களிலெல்லாமோ வந்து நம்மை அடைகிறார்.குரு ஒருவரே என்றில்லை,பலரால் இணைந்து ஒரு குருவாக ஆகவும் கூடும்.ஏக குருவாகத் திகள்பவர் சிதறியும் இருக்க முடியாதா என்ன ? ஏழைகளுக்கு அவர் ஒரே இடத்தில் அமைய முடியுமா ? அலைந்து அலைந்தே தெரிந்து கொள்ளவேண்டும்.தெளிவின் மடியில் தவழத் தொடங்குகையில் அவர் நிலைத்த குருவாக காட்சி தரவும் கூடும்.ஆனால் கற்பவனுக்கு எவர் கைவிட்டாலும் குரு கைவிடுவதில்லை.வழி
நடத்துவார்.பாதை சுருக்கமாக இல்லாதிருப்பதே சிறந்தது.தேடுவது கடினமானதாக இருந்தால் பாதையும் கடினமாகும்.மூளை சிதறித் தெறிக்கும்.இதோ இருக்கிறது அதோ இருக்கிறது என்று சமாதானம் சொல்லி குரு அழைத்துக் கொண்டே இருப்பார்.முருகனும் குரு தானே ?

போற்றியைக் கண்டபிறகு மனம் சிறிது சமாதானம் பெறுவது போலும் இருந்தது.எங்கேயே நமக்கு சரியாகவே இழுத்து வந்திருக்கிறது.தற்செயல்கள் மிகவும் அபூர்வமானவை.அவற்றை சம்பாதிக்க சம்பாதிக்க தித்திப்பு அதிகரிக்கும்.போற்றியாக இருப்பதே முருகன் தானோ என முத்து உள்ளத்துள் நினைத்து ,கணத்தில் அந்த எண்ணத்தை தன்னிடம் மறுத்துக் கொண்டான்.

அரிக்கு எந்த தொந்தரவும் இடரும் இன்றி திரும்பி வருவது திகைப்பாக இருந்தது.அந்த மடிப்புப் பாறைகளின் உச்சியிருந்து எப்போது வேண்டுமானாலும் தூக்கி வீசப்படுவோம் எங்கிற எண்ணமே இருந்தது.அப்படி நடக்கவும் வாய்ப்புண்டு.கம்மாளர் ஜோதிடர் அதிர்ந்து வந்து கூவி பெருஞ்சத்தத்துடன் நிற்கையில் அப்படி நடக்கும் என எதிர்பார்த்தான். நடக்கவில்லை.உள் நுழையும் போதே கூட்டம் இல்லை என்பதில் ஒரு அசட்டுத் துணிச்சல் அரிக்கு இருந்தது.

அரி ஒருமுறை சுசீந்திரத்தில் மாட்டிக் கொண்டு சித்திரவதைப் பட்டிருக்கிறான்.சுசீந்திரத்தில் பிராமண அதிகாரமே நிலைபெற்றிருந்தது.மன்னர் களுக்கு மிகவும் குறைந்த அதிகாரமே இருந்தது.ராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் பிராமண அதிகாரத்தை அவர் திறம்பட ஒடுக்கினார்.என்றாலும் வெள்ளாளர்கள் அதனை மீண்டும் புதிப்பித்துக் கொள்ள துணை செய்தார்கள்.பிராமணர்கள் கைவிட்ட அதிகாரத்தை வெள்ளாளர்கள் தங்கள் கைகளுக்கு பிராமணர்கள் சார்பில் வைத்துக் கொண்டார்கள்.அது பிராமணர்கள் கொண்டிருந்த அதிகாரத்தை விடவும் மோசமாக இருந்தது.வெள்ளாளர்களிடம் சிறிய படைகள் உண்டு.ஊர்ச் சண்டியர்களால் உருவாக்கப்பட்ட படைகள்.பூமி பாதுகாப்பு ,ஊர் நிர்காகம் என்ற பெயர்களில் இயங்கிய சட்டம்பி இயக்கங்கள் அவை.நெறிகள் அற்றவை.சாதி நலம் மட்டுமே
நோக்கமாகக் கொண்டவை. நாடார்களின் எழுச்சிக்குப் பின்னரே அவை பின்வாங்கி ஒடுங்கின.சாதிய படைகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக அமைந்த படை அது.

ஊருக்குள் நுழைபவர்களை தொடந்து சென்று தீக்கிரையாக்குதல்,இரவுகளில் குடில்களைக் கொளுத்துதல் ,எதிரிகளை முடமாக்குதல் போன்ற காரியங்களை அவர்கள் செய்தார்கள்.அபூர்வமாக கொலை செய்தார்கள்.வெள்ளாளப் படைகள் மிரட்டி அடிபணிய வைப்பதில் சமர்த்தர்கள்.அவர்களுக்கு இருந்த அரச தொடர்புகளை அவர்கள் அசுர வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.கூலி வேலைகளுக்கு வந்த வேலையாட்களை இழிவு செய்வதிலும் ,தரம்தாழ்த்துவதிலும் வெள்ளாளர்கள் அக்கால கில்லிகள்.இவற்றையே வேலைக்கு நிற்கும் சாம்பவர்களுக்கு பிற்காலங்களில் நிலம் கொண்ட நாடார்கள் செய்தார்கள்.அப்படி செய்வது இழிவு என்றே கருதபடாத இழிவு அது.சிறுமை செய்தல் .வெள்ளாளர்கள் கொஞ்சம் மீறுபவர்களை க் கட்டி வைத்து வெற்றிலை எச்சிலால் முகத்தில் காறி உமிழ்வார்கள்.நாடார்கள் இதனைச் செய்வதில்லை.பிற்காலங்களில் இப்படி செய்ய முடியாத காலம் ஒன்றும் உருவாகிவிட்டது.

அரி தெற்குத் தாமரைக் குளத்தில் இருந்து கிளம்பி சூரங்குடி வரை செல்ல வேண்டியிருந்தது.சூரங்குடியில் பிற்காலத்தில் வெள்ளைச் சாமியார் என்று அறியப்பட்ட அனந்தகுட்டி மகன் நாராயண வடிவு வாழ்ந்து வந்தார்.பெரிய தன வந்தர்.சூரங்குடி முதற்கொண்டு உசர விளை வரையில் சொத்துகள் அவருக்கு இருந்தன.ஆன்மீகத்தில் பெருத்த ஈடுபாடு.சைவம் வைணவம் இரண்டிலும் புலமை .அரியைக் காட்டிலும் வயதிலும் மூத்தவர்.அவரைக் காண அரி புறப்பட்ட தினத்தில் சுசீந்திரத்தில் பெருவிழா.தெருக்கள் திரைகட்டி மறிக்கபட்டிருந்தன.அரிக்கு தெரு வழியாக சாஸ்தாங்கோயில் பாதைக்கு பறக்கை வந்து குறுக்குப் பாகமாக ஈத்தாமொழி வந்தால் வழி சுருக்கம்.ஆனால் அதற்கு இரண்டு வெள்ளாளர் கிராமங்களைக் கடக்க வேண்டும்.பறக்கையில் என்றாலும் ஊருக்குள் நுழையாமல் சாம்பவர்,பரவர் கிராமங்கள் வழி நுழைந்து சென்று விடமுடியும்.கிளம்பும் போதே வெள்ளாங்குடி வழியே போகாண்டாம் என்று சொல்லியனுப்புவார்கள்.அரி சுசீந்திரத்தில் படைகளிடம் பிடிபட்டுக் கொண்டான்.

அவர்கள் முதலில் தெருமுனையில் இருந்த ஒரு இடிந்த ஓட்டு வீட்டுக்குள் ஒரு அறையில் அடைத்துவிட்டு போய்விட்டார்கள்.ஒளியற்ற இடுக்கு அறை.கதவிடுக்குகள் ,ஜன்னல் ஓரங்கள் வழியே வெளி வெளிச்சம் கசிந்தது.எலிகள் தரையில் ஏராளம் பொந்துகளைத் துளையிட்ட அடையாளங்கள் இருந்தன.நெறியற்ற செயல்களுக்குரிய இடுக்கு அது என்பது மட்டும் தெளிவாக அரிக்கு விளங்கியது.வழக்கமாக இத்தகைய வீடுகளில் திறந்த மர அளிகள் ஏதுமில்லை.சிறுனீரின் கழிவு நாற்றம்.பெரும்பாலும் அந்த முடுக்கு அறை நாலுகெட்டிற்கு வெளியில் இருந்த சமையல் கூடமாக இருந்திருக்க வேண்டும்.அது இப்போது நொறுங்கிக் கிடக்கிறது.இந்த சண்டிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"