அய்யா வைகுண்டர் இதிகாசம் -30 உடையாள் பிறப்பு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -30

உடையாள் பிறப்பு 



வெயிலாள் பெற்றெடுத்த மூன்றாவது குழந்தை உடையாள்.புவியூரிலிருந்து காக்காச்சியும் அன்று வந்திருந்தாள்.காக்காச்சி பொன்னு மாடனின் சகோதரி.பரதேவதைக்கு அப்போது பதினாறு திகைந்திருந்தது.முத்துவுக்கு பரதேவதை சொந்த மாமி மகள். வெயிலாள் அம்மை ஆளனுப்பி காக்காச்சியை  வரவழைத்திருந்தார்.காக்காச்சியும் வெயிலாளும் சொந்ததையும் தாண்டி நண்பர்கள் போல பழகுபவர்கள்.இரண்டு மூன்று தினங்களாக அவளும் பரதேவதையும் இங்கே இருந்தார்கள்.வெயிலாள் குடில் எத்தனைபேருகென்றாலும்  சிரமம் அறியாமல் இடம் கொடுத்தது. ஆட்கள் வந்தால் அதிகம் உண்ட வயிறுபோல விரியும்.வந்தவர்களால் சுருங்காது.யாருடைய தனித்தன்மையிலும் அது பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.தோட்டம் ,விளை உள்ள எல்லா குடிசைகளுக்கும் அப்போது இந்தத் தன்மை இருந்தது.பகல் விளைகளில் பாதியும், வேலைகளில் பாதியும் என மிகவும் குறைந்திருக்கும்.இரவு மிகவும் நீளமானது.அந்தியில் இருந்தே இரவுதான்.வெயில் சாய்ந்தாலே இரவு தொடங்கி விடும்.ஏழு ஏழரைக்கு இரவு ஊண்.எட்டுமணிக்கெல்லாம் மொத்த கிராமமும் இரவு மூடி  உறங்கும்.இந்த மணிக் கணக்கு அப்போது இல்லை.அந்தியில் இருந்து எவ்வளவு நேரம்,எவ்வளவு நாழி என்பதே கணக்கு.உடையாள் பிறக்கும் போது முத்துக்குட்டிக்கு ஆறு வயது.

பூயூர்காரி வந்த தினத்தன்றே இவரு பாத்துச் சொன்னது, தனக்குப் பிடிக்கவில்லை என்று பேச்செடுத்தாள்.பரதேவதைக்கு  திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.மூக்குபீறி நாடான் பனையேறப் போகையில் பாண்டியில் ஒரு பையனை அவளுக்குத் தோது பார்த்திருந்தார்.ஆரல்வாய்மொழி தாண்டிச் சென்றாலே இங்குள்ளவர்களுக்குப் பாண்டிதான்.பையன் ஊரல்வாய்மொழியில் இருந்தான்.நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பாண்டிக்கு போவதும் திரும்புவதும் என இருந்த மூக்குப்பீறிக்குப் பையனைப் பிடித்துப் போயிற்று.

பனையேற்றுகாரன் கைவிடமாட்டாமுட்டி என்று அழுத்தி சொல்லிக் கொண்டே இருந்தார்.

வெயிலா செல்லு...பாண்டில பிள்ளையக் குடுத்தா ..பிள்ளைய காணணுமுண்ணா நானும் இவருக்கக்கூட பாண்டிக்குதாம் போணும்.வெயிலு குத்தற விழும் பாத்துக்க அந்த ஊருல..ஊருபோல இருக்காத ஊரு.ஒதுங்க நிழல் கிடையாது.அக்கினி வெயில் .நாக்கு வெளிய தள்ளிரும் பாத்துக்க

அங்கதான்னு ஒத்த காலுல நிக்காரு.அங்க உள்ள இசக்கியம்மையளுவளே வெயில் தாங்காம இந்தப் பக்கம் வாறாளுவ..இவரு அங்க போக நிக்காரு..

செரி ,அவ புள்ள என்ன செல்லுதா என்று கேட்டாள் வெயிலாள்

என்ன கேக்குத ...அவளுக்கு என்ன தெரியும் பச்ச மண்ணு.நாம எங்க தூக்கிப் போடுதமோ அங்க கெடக்கும்.அதான விதி

மூக்குபீறிகிட்ட நா பேசட்டா

பேச முடியுமா ? பேசுனா கேக்குற ஆளா ? விடியால  போயிரும்.அந்தில நாற வாய்.மனுசபய கிட்டயே போவ ஆவாது.நானும் பிள்ளையும் தூர நின்னுகிடுவோம்.குரங்கு மாதி பேசும்,கூரையக் கொளுத்துற புத்தி

செரி இவுக சென்னாலோ ...

வழக்குல்லா உண்டாகும் ,அங்கயுஞ் செல்லிட்டியானு வரும்.இப்பாவாச்சும் இங்கன போயி வந்து இருக்கேன்.புறவு அணஞ்சு போகுமுல்லா ?எப்படியோ இருக்கு வெயிலா ..அந்த வெயில்ல நானும் புள்ளையும் ஜீவிச்சு கிடப்போமா தெரியல்ல.

அடுத்து அடுத்து பனம்பாயில் படுத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.பக்கத்தில் இருவரின் குழந்தைகளும் உறங்கி கொண்டிருந்தார்கள்.

எந்த சொந்தம் ஊரு தாண்டி வரும் ? யாருக்கும் தெரியாம எம்பிள்ளை பகலும் இல்ல ராவும் இல்லாத பொட்டல்ல என்ன பாடுபடப் போறாளோ ? என்று சொல்லும்போது அவள் கண்களில் கண்ணீர் திரண்டு பாய் நனைவதை வெயிலாள் உணர்ந்தாள்.

வாய இப்படி வைக்காத ஒண்ணு நடக்குறதுக்கு முந்தியே இப்படி பேசப்புடாது.பேசினா பேசினது அப்படியே கூட வந்து நிக்கும்.நாக்கு வைக்கிறது நடந்திரும் பாத்துக்க,பாத்து நாக்கு வைக்கணும்.ஒண்ணும் வராது.உறங்கு

ராவும் பகலும் பழக நாலு நாள் போதும் காக்காச்சி.புறவு நீ அங்க தான் புடிச்சிருக்கு இது ஒரு நாடாண்ணு செல்லுவா..கேக்கலயாக்கும் இப்படிலாம்.உறங்கு நடக்குறது நல்லதா நடக்கட்டு என்று வெயிலாள் கொஞ்சம் சினத்து,ஒலிபெருக்கிச் சொன்னாள்.ஆனால் அவள் மனதிலும் சிறிய கலக்கம் உண்டாகியிருந்தது

திருமணம் பெரிய சடங்காக அப்போது இல்லை.சொக்காரர்களுக்கு சோறு போட வேண்டும்.அதுவும் இந்த உறவு அவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான்.திருமண சாட்சிகளாக .சொக்காரர்களைப் பகைக்க வேண்டியது வரும் என்பதால் பந்தம் நின்று கொண்டிருக்கும்.முறியாது.அதையும் மீறி முறிவதும் உண்டு.திருமணங்கள் எவ்வளவு சடங்குகளோடு இருக்கிறதோ அவ்வளவுக்கு அதற்கு அதிகபலம்.சடங்கு பெரிதாகும் தோறும் தாண்டுவது கடினமாகும்.எளிமையாக இருந்தால் யாரேனும் ஒருவர் பிடித்துத் தள்ளினால் போதும் விழுந்துவிடும்.ஒரு சொல் போதும் தடுக்கி விழும்.அடுத்த நற்சொல்லில் எழும்பி விடும் என்பது உண்மைதான்.ஆனால் ஒரு சொல் விழுந்து முளைப்பதற்குள்,அடுத்த நற்சொல் வந்து நிற்க வேண்டும்.இல்லாது போனால் அணை கட்ட முடியாது.அவ்வளவு பக்கத்தில் உள்ள உறவு.அந்த காலத்தில் இருவருக்குமான கற்பு மட்டுமே கவசமாக இருந்தது.இதனை உணர்ந்து இருவருமே கட்டியாக இருந்தார்கள்.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் சொக்காரர்களைப் பகைத்துக் கொள்வது என்பது கடுமையான காரியம்.போகிற இடமெங்கும் அவர்கள் வந்து நிற்பார்கள்.தாண்டி வைக்கவோ தாண்டிப் போய்விடவோ எளிதில் முடியாது.ஆண் பெண் உறவு முறிபட கடுமையான காரணங்கள் அப்போது தேவை.பெண் கடுமையான உடல்வியாதியில் துன்புற்றாலேயொழிய பிற காரணங்கள் சொக்காரர்களால் மன்னிக்க முடியாதவை.எளிமையான திருமணங்கள் இதனாலும் நிலைத்தன.சொக்காரர்கள் என்பவர்கள் அப்பா வழியில் அப்பாவின் அண்ணன் தம்பிகள்,அவர்கள் ஆண்பிள்ளைகள்,அப்பாவின் சித்தப்பா,மூத்தப்பா ஆகியோரின் ஆண்மக்கள் ஆகியோர் அடங்கிய முதல் சொந்தங்களைக் குறிப்பது.

வெளியே பெண் கொடுப்பதில் எல்லோருமே பயந்தார்கள்.தயங்கினார்கள்.ஒரு நடையில் வந்து செல்லும் இடமாகப் பார்த்தார்கள்.

உடையாள் பிறந்து ஏழுகளித்த பிறகே காக்காக்ச்சியும் பரதேவதையும் புவியூர் திரும்பினார்கள். விதி ஒரு ஓரத்தில் நின்று சிரித்துக் கொண்டிருந்தது.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"