அய்யா வைகுண்டர் இதிகாசம்-39

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-39


ஏன் இந்த இடுக்கு முறிக்குள் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறோம் ? எந்த விதி நம்மை இங்கு கொண்டு வந்து பூட்டியிருக்கிறது ? அப்படி நாம் என்ன தவறு செய்துவிட்டோம் என்று கேள்விகள் மூளையை பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தன.தப்பிச் செல்லவே இயலாதவாறு அறை அமைந்திருந்தது.இரண்டொரு நாட்கள் பூட்டபட்டால் புத்தி பேதலித்து விடும்.எதற்காக அடைத்து வைத்திருக்கிறார்கள் ? என்ன செய்வார்கள் ? என்ன செய்யப் போகிறார்கள் ? உணர்ச்சிகள் கொந்தளித்த வண்ணம் இருந்தன.காலையில் வந்து அடைபட்டவன் நேரம் மெதுவாக கணம் கணமாக நகர்ந்து கொண்டிருந்தது.முதலில் இன்னும் சிறிது நேரத்தில் விட்டு விடுவார்கள் என்று தோன்றிக் கொண்டிருந்தது.சமயம் ஆக ஆக அந்த நம்பிக்கை பொய்த்தது.எச்சரித்து அனுப்பி விடுவார்களாயின் எதிர்த்து வாய் திறக்காமல் சென்று விடவேண்டும்.அம்மை தடையாக இருக்கிறது பொறுத்துப் போ ...என்றுகூட சொன்னாள்.வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

மதியம் வரையில் அப்படியே இருந்து விட்டான் அரி.ஆனால் அது மத்தியானம் தானா என்பது விளங்கவில்லை.வெறும் யூகமே.பசிக்கவில்லை.ஆனால் உடல் முழுதும் வதக்கினால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது.ஒருவகையான இயலாமை தரும் எரிச்சல்.என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் வேறு என்ன செய்வது என்று மனம் யோசித்தடங்குமுன்பே,எங்கேனும் வெட்டி முறித்து வெளியில் செல்ல ஏதேனும் துளை உண்டாக்கிவிட முடியாதா என்று முயற்சிக்கும்.அப்படி முயற்சி செய்து கொண்டிருக்கையில் வந்து விட்டார்கள் என்றால் அதற்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்குமே என்று தோன்றும்.

அந்த அறைக்குள் கொண்டு தள்ளப்படுபவர்கள் அனைவருக்குமே திருடர்கள் என்பதே பெயர்.அதேசமயத்தில் அவர்கள் திருடர்களாக இருக்கமாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.பாருங்களாம் பெருவிழா பாத்து வந்திருக்காம் பாருங்க என்பது போல பேசிக் கொள்வார்கள்.அந்த அறைக்குள் ஒருவர் பூட்டப்பட்டுவிட்டாலே அந்த ஊரே அந்த செய்தியை அறிந்து விடுவார்கள்.ஏகதேசம் அது பொது அறை போன்றதே.அங்கு நடைபெறும் தீமை அனைவருக்கும் உடன்பாடானதே.அந்த அறையில் கொலைகளும் நடைபெறும்.பதிலுக்கு கொலை நிகழாது என்பது உறுதியானால் கொலை செய்வார்கள்.மறுதாக்குதல் ஏற்படாதிருந்தால் கொளுத்துவார்கள்.அதனை அறிவதற்கே கால தாமதம்.ஊரே கூடி அணில்பிள்ளைகளின் வாலில் தீவைத்து விளையாடுவதற்கு நிகரானது இந்த விளையாட்டு.திகில் ,சாகஸம்,பரிவுணர்ச்சி,ஆங்காரம் ,ரகசியம்,வன்மம் எல்லாம் கூடித் திளைப்பது.மொத்த ஊரின் ஏற்பிலிருந்து ஒரு சில சண்டிகள் ஆடும் கூட்டுக் களி இது.

ரொம்ப நேரக் காத்திருப்புக்குப் பின்னர் அரிக்கு வீட்டு நினைவுகள் வந்து வந்து திரும்பின.அவர்கள் யார் ஒருவருக்கு இந்த தகவல் தெரிந்து விடுமாயினும் ஊர் திரண்டு வந்து விடுவார்கள்.பத்துபேர் வருவார்களே ஆயின் இவர்கள் மொத்த ஊர் திரண்டாலும் போராது.அந்த தற்காப்புணர்ச்சி, வெள்ளம் புகுந்து ஊரை அழிப்பதற்கு நிகரானது.செய்தி அறிந்தால் தன்னிச்சையாக வந்து திரண்டு கொண்டேயிருப்பார்கள்.பொடி நடையாக வருபவர்கள்,ஓட்டத்தில் வந்து சேர்பவர்கள், பக்கத்து பக்கத்து ஊர்களிலிருந்து கேள்விப்பட்டு வருபவர்கள் என வந்து கொண்டிருப்பார்கள்.பின்னர் அது அடங்க இரண்டு மூன்று நாட்கள் ஆகும்.நம்முடைய பிள்ளைகள் சிறைபட்டிருக்கிறார்கள் என்பதைப் போல ஆவேசம் எழும்பும் வேறு ஒரு காரியமும் கிடையாது.ஒரு நேர கஞ்சிக்கு உத்தரவாதம் கொண்டவன் எவனானாலும் திருடுவதில்லை.கொள்ளையர்கள் வேறுவகை.அவர்களை இவர்களால் மணியாட்டக் கூட முடியாது.இவர்களின் நோக்கமும் அதுவல்ல.பழிசுமத்துவதற்கு ஒரு காறணம் வேண்டும்.களித்து விளையாட வேண்டும்.பின்னணியற்றவர்களிடம் உச்சம் வரையில் களிக்கலாம்.தணிந்த சாதிக்காரர்களிடம் களித்து விளையாடலாம்.

மதியத்துக்கு மேல் அரிக்கு இவர்கள் எப்படியும் அந்தியில் கருக்கலில் தான் வருவார்கள் என்று மனதில் உறுதியாகப் பட்டது.அதற்குள் எதையேனும் உடைத்தோ துளையிட்டோ வெளியேறி விட வேண்டும் என்கிற வெறி அடிமனதில் உருவாயிற்று.காலையில் ஒளிபீறிட்ட இடங்கள் இப்போது அடைத்திருந்தன.அவை வந்த ஒளியின் அளவுள்ள இருள் உருளைகள் அடைத்தது போலிருந்தது.மேற்குப் பக்கமாக வந்த சிறு ஒளியில் முதலில் கைவைத்து அடைத்தான்.பின்னர் திறந்தான்.மரத் தால் ஆன அடுபங்கரை சன்னல் அது.வெளிபக்கத்தில் இருந்து குறுக்கே மரத்தாள் போடப்பட்டிருந்தது.ஆனால் அந்தபக்கத்தில் இப்பொது அறையோ கூரைகளோ இல்லை என்பதை அவர்கள் அறைக்குள் பூட்டி அடைக்குமுன்னரே கவனித்தது போல நினைவு.அந்த ஒளிக்கு மேலே கைவைத்தான்.சற்றே இற்று நொறுங்கிய சன்னல் சட்டம்,இவன் அழுத்தன் தருவதர்கு முன்னரே அது கையில் பொடிந்து கீழே மறிந்தது.

முதலில் வந்த வெளிச்சமும் காற்றும் தேனுணர்ச்சி தந்தன.அந்த ஒளிவழியே சுசீந்திரம் கோபுரம் தோன்றியது.சுதைச் சிற்பங்கள் அடுக்கபட்ட எழு அடுக்குகள் கொண்ட கோபுரம்.ஓ ...அப்படியானால் இதுதான் தாணுமாலயனின் சிறைக் கூடாரமா ? அது இவ்வளவு இடுக்கானதுதானா ? இல்லை இது தாணுமாலையனின் அகமாக இருக்குமோ? அப்படியானால் கருவறையில் இருப்பது என்ன ? இந்த அகத்தின் மறுபக்கமா ? எப்படியிருந்தாலும் இது தாணுமாலயனின் அகமாக இருக்கக் கூடாது என்று தன்னுள் நினைத்துக் கொண்டான்.என்றாலும் அப்படித் தோன்றிய கணத்தில் இருந்த மெய்மையும் மெய்மைதானன்றோ ?

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"