அய்யா வைகுண்டர் இதிகாசம்-43 மருந்துவாழ் மலை 2

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-43

மருந்துவாழ் மலை 2


அரியும் ,முத்துவும் மலையடிவாரத்தில் அமர்ந்திருந்தார்கள்.பொய்கையில் கரையேறினால் ஆலமரப்பந்தல்.அதன் கீழே அமர்ந்திருந்தார்கள்.அது அவர்களுடைய வழக்கமான இடமும் கூட.

அந்த ஆலமரம் முதலில் பூமி துளைத்த இடத்தின் அடையாளம் இல்லை.மலையின் தாள்வாரத்தை ஒருபக்கமாக பந்தலிட்டு மூடியவாறு அது நின்றுகொண்டிருக்கிறது.ஒரு யுகமாக அது நின்று கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.இப்பொத்து நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து ,முதல் முளைக்கு காலம் அங்குமிங்குமாக அசைவதே அதன் மொழி.அது திரும்பத் திரும்ப பேச விரும்பும் மொழி.அது இங்கிருப்பது போலவே அதன் முதன்முளை வரையில் பரவியிருப்பது.நாம் அதனைத் தொடும்போது அது ஆதி முளை வரையில் அதிரும்.ஒரு தொடுகை எவ்வளவு காலம் வரையில் சேருகிறது ? ஆச்சரியம்தான்.ஒரு சிங்கத்தின் பிடரியில் கைவத்தால் அதன் ஆதி பிடரி அதிராமல் இருக்க முடியுமா? முடியாது.உறவு என்பது இதுதானே? ஒன்றைத் தொடுகையில் அதன் ஆதி வடிவு நம்மை உணரும்.அது தொடுகையால் சாந்தமடையவில்லையெனில் உறவற்ற தொடுகையாக அது வீணாகும் இல்லையா ? ஒவ்வொன்றுமே இங்கு இருப்பது போலவே இன்மையிலும் இருப்பவை.ஒன்றின் இன்மை எது என்பதை அறியாதவரையில் நாம் அதனை அறிந்தோமில்லை.

அறிந்ததும் அறிந்தது நம்முள் அடங்குகிறது.அதன் பேய்கூச்சலும் பேரிரைச்சலும் அமைதி பெறுகிறது.ஆனால் ஒரு விஷயம் அறிந்ததை சரியாக அறிந்தோமா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?ஆலம் விழுதுகள் சடைமுடிதானே? முதல் முளை நோக்கியே அவை இருக்கின்றன.எல்லாவற்றிலும் இந்த சடைமுடி உண்டு.அது ஆதி நோக்கி நீண்டிருக்கிறது.அனைத்தும் ஆல் போல சடைமுடி தரித்திருப்பதைக் காணாமல் ஒன்றுமே அகப்படாது.பாம்பின் விடம் எங்கிருக்கிறது? அது எங்கோ இன்மையின் தொலைவிலிருந்து வருகிறது.தொலைவில் இருக்கிறது.ஒரு பாம்பால் திமிறி கொத்தப்படும் போது எவ்வளவு காலத்தொலைவிலிருந்து நாம் கொத்தப்படுகிறோம் ?அப்படியானால் இன்றில் ஏதுமில்லை.அனைத்தும் இன்மையில் இருக்கின்றன.எதுவும் போகாது.சிதறினால் ஒருங்கும்.ஒருங்கியது சிதறலாம்.நமக்குள்ளிருக்கும் இன்மையை எடுத்து வெளியேற்றவே இயலாது.அது மறைபொருளாக ஒவ்வொன்றிலும் இருப்பது, அழிவதில்லை.அப்படியானால் ஒவ்வொன்றிலும் அழியாப் பொருள் ஒன்று இருக்கிறதா இல்லையா ? நாம் உறவு கொள்ள வேண்டியது ஒவ்வொன்றிலும் உள்ள அழியாப்பொருளுடனா ? இல்லை அழியும் சடத்துடனா ?ஆனால் வாழ்க்கை இரண்டிற்கும் இருக்கிறது.ஒன்றின் பொருட்டு ஒன்றை ஏற்பவனால் துண்டித்து செல்வது சாத்தியமில்லை.சடம் காலத்தில் இருபதால் அதுவே அகல்.தீபம்.அதை அலட்சியம் செய்யாதிருந்தால் இன்மையை அதிலிருந்து சென்று சேர்ந்து விடுகிறோம்.

அறிந்த பின்னரும் அமைதியில்லை எனில் நாம் அறிந்ததில் முழுமை இல்லை என்று பொருள்.அறிந்ததாக நமக்குள் ஒரு அர்த்தமேற்றி வைத்திருக்கிறோமே அன்றி அறியவில்லை.அறிவது என்பதற்கு அதன் நுட்பத்தோடு சேர்த்து ஏற்பது என்பது பொருள்.ஏற்றால் சிதைவில்லை.ஏற்காதது சிதறும்.தாழே வீழும்.கிடந்து தரையில் உருளும்.சரியாக அறிவது என்பது அதன் அரூபத்துடன் சேர்த்து ஏற்பது ஒன்றே ஆகும்.சடாமுடி ஏறிப் பார்த்தல்.ஆலம்விழுதசைத்து மேலே உயரம் செல்லுதல்.எல்லா மிருகத்திற்கும் விழி இருக்கிறது.அது ஒளி.தூரகாலத்தில் இருந்து வருகிற ஒளி.கண்டைந்ததால் மெல்ல மெல்ல உண்டான ஒளி.மரத்திற்கு நாம் எண்ணிக் கொண்டிருப்பது போலில்லை,மேனியெல்லாமே விழி.நாம் தொடுகையில் அத்தனை ஆழம் அதற்கு.ஆழம் தொடும்போது ஆழம் நம் கரம்
நுழையும். நமக்குப் பார்வையிருந்தால் இது விளங்கும்.

முத்து பேசிக் கொண்டே போனான்.சில சிறந்த தருணங்களில் இவ்வாறாக அவன் மலைமேலிருந்து பேசுவது போல பேசுவதுண்டு.இனி நெடு நாள் பேச்சற்று இருக்கப் போகிறவனின் உரை போல இருக்கிறது முத்து.அவ்வளவு தேவாமிர்தம்.தித்திப்பு.இனிப்பு என்றான் அரி.

இந்த மலையோ ,அல்லது பொய்கையோ ,இந்த ஆலம்விழுதுகளோ பேசுகின்றனவோ என்னவோ? எனக்கும் யாரோ வேறொருவர் பேசுவது போலத்தான் இருக்கிறது.பேசியவை ஒன்று கூட முன்னர் தெரிந்து கொண்டவை அல்ல.பேசப் பேச தெரிந்து கொண்டிருந்தேன்.

அவர்கள் இவ்வாறு பேசிச் செல்கையில் அந்த இடம் முழுவதும் அமைதியடைந்திருந்தது.பொய்கையும்,ஆலும் அமைதியடைந்து மிகவும் நுட்பமாகி இருந்தன.இந்த அமைதியை பற்றி உளமாற எடுத்துக் கொண்டால் எங்குவேண்டுமாயினும் போய்விடமுடியும் அரி.இந்த நிழல்கலைப் பாரேன்..காலையில் வந்த போதிருந்த நிழல் அடர்ந்து கிடந்தது தணுப்பாக,இப்போதையை உச்சியில் தரையில் நெளியும் ஆலின் நிழல்கள் மினுக்கம் கொள்கின்றன.இதுவேறு அதுவேறு.ஆனால் அமசம் ஒன்றே இல்லையா ?ஒன்றுதானே பலவாக வேறுபடவும் செய்கிறது? வேறுபட்டது ஒன்றாக மாறித்தானே ஆக வேண்டும்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"