அய்யா வைகுண்டர் இதிகாசம்-41

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-41


மருங்கூரிலிருந்து திரும்பி சுசீந்திரத்தைக் கடக்கும் போது தத்தாத்ரேயர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம் என்றான் முத்து.மும்மூர்த்திகளும் ஒன்றான அவதாரம் அவர்.பல்வேறு வழிகாட்டிகளால் குரு அவருக்கு உபதேசம் செய்தார்.கேட்கும் திறனால் மட்டுமே குரு வெளிப்படுகிறார்.அது இல்லாத போதில் அவர் மௌனமாக இருக்கிறார்.அவர் இருப்பு அறியப்படாததாக இருக்கிறது.பரசுராமரின் குருவாகத் திகழ்ந்த தத்தாத்ரேயர் தன் குருவாக அனுபவங்களை,பட்சிகளை,மனிதர்களை என பலவற்றை வரித்து கொண்டவர்.

நாம் அறிய வேண்டியவை என்ன ? என்று அரி முத்துவைக் கேட்டான்

அவை குருவுடன் இணையாக நிகழ்கின்றன.தனித்து நடப்பவை அல்ல அவை.ஆகவே எதனை அறியவேண்டியிருக்கிறது என்பதும் உடன் நிகழ்வு வழியாகவே அறியப்படுகிறது.முன்கூட்டி எந்த உத்தேசமும் இல்லை என்றான் முத்து. முன்கூட்டி உள்ள உத்தேசம், தேடிக் கொண்டிருத்தல் மாத்திரமே.பாத்திரத்தில் எது வந்து விழ வேண்டியிருகிறதோ அது வந்து விழுவது வரையில் தேடிக் கொண்டிருப்பது மாத்திரமே நாம் செய்ய உகந்தது.

தட்டில் வெள்ளம் வைத்தால் சிட்டு வருகிறது.பானையில் வைத்தால் காகம் இல்லையா ? சிட்டும் காகமும் வர இவற்றை அறிந்து வைத்திருக்கிறோம்.ஞானத்தை இப்படி வரையறை செய்வதற்கில்லை.அது எல்லையற்றதாக இருக்கிறது.எல்லையற்றது எல்லாவற்றிலும் இருக்கிறது.ஏக பரம்பொருள் ஒவ்வொன்றிலும் உள்ளது.

மும்மூர்த்திகளையும் ஒன்றாக்குவதற்குரிய ஞானத்தை தத்தாத்ரேயர் அறிய வேண்டும்.இல்லாமல் முடியாது.அந்த பாத்திரம் அதற்காகவே செய்யப்பட்டிருக்கிறது இல்லையா ? சரியான சமயத்தில் பாத்திரம் பெருகியாக வேண்டும்.குரு அந்த பாத்திரம் நோக்கி புறப்பட்டிருப்பார்.குரு புறப்படும் போது பாத்திரம் குருவின் இருப்பை உணரும்.கண்டு கொள்ளும்.அதன் இனிமையை மட்டுமே நுகரும் தன்மை பாத்திரத்திற்குரியது.

அப்படியானால் சாமானியனுக்கு அதில் என்ன இடம் என்று கேட்டான் அரி

சாமானியன் அவதாரபுருஷர்களால் சமைக்கப்படுகிறான்.அவன் விதி அவர்களால் உண்டாக்கப்படுகிறது.அவன் எதைச் செய்தால் பிரகாசிப்பான் என்பதை அவதாரம் சூக்குமம் பெற்றுவிடுகிறது.அழிவு எது என்பதைப் பிரகடனம் செய்கிறது.சாமானியன் வாழ்வதில் இருந்து அதனைக் கண்டடைகிறான்.அதனை உண்மை என கண்டுபிடிக்கிறான்.பகுத்துக் கொள்கிறான்.ஒவ்வொரு காலத்திலும் இது நடக்கிறது,ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.விதியைப் புதிதாய் சமைப்பதும் பழைய விதிகளை ,விளைவுகளை நீக்குவதும் அவதாரமே.

எனில் முத்து,அவதாரமும் சாமானியனும் வேறு வேறு என்று கொள்ள முடியுமா ?

இல்லை.வேறு வேறு இல்லை.ஒரு அவதாரத்தில் கலக்கும் அத்தனை சாமானியர்களும் ஒருவிதத்தில் அவதாரமாகிறார்கள்.அவர்கள் அந்த இணைவினை விட்டுப் பிரிய முடியாதவர்கள்.அப்படிப் பிரிய வேண்டுமெனில் மற்றொரு அவதாரம் வந்து முனைய வேண்டும்.குரு பழமையில் அலுப்புற்றாலே அது இயலும்.இருப்பதில் சிலதை இல்லாமலாக்கவும்,இல்லாமலிருப்பதில் சிலவற்றை இட்டு நிரப்பவும் குருவின் மனம் உருகவேண்டும்.

ஒருவிதத்தில் இது மிகவும் விரிவான பணி.தேவையில் இணைகிற கூட்டுப் பணி.தேவை என்பது பிரபஞ்ச தேவை.ஒட்டு மொத்ததிற்கான தேவை.தனிமனிதன் ஒருவனுக்கான தேவை அல்ல அது.சில பல பொருளீட்டும் தேவை அல்ல அது.தத்தாத்ரேயர் பரசுராமரின் குரு என்றால் பரசுராமர் செய்த பணியெல்லாம் தத்தாத்ரேயர் செய்யும் பணிதானே இல்லையா ? அப்படியானால் பாத்திரத்தின் பணி ,ஆசைகள் என்றெல்லாம் ஏதேனும் அர்த்தம் பெறுமா ? பாத்திரத்தின் இன்பமும்,துன்பமும் ,விளைவும்,வினையும் கணக்கில் கொள்ளப்படுமா ? அவற்றிற்கென்று சலுகை உண்டா ? இல்லை என்பதே விதி.

அப்படியானால் ஒரு பாத்திரம் எதற்காக அதன் காரியத்தை நோக்கி ஓடுகிறது ? என்று கேட்டான் அரி

அதில் அடைவதற்கான பேரின்ப நிறைவு இருக்கிறது அரிகோபாலா ...அதைச் சொல்லில் விளங்குதல் கடினம்.எவ்வளவு தீமையில் இருப்பவனும் கரையேறுவதற்கு அதில் பாதை இருக்கிறது.அரக்கர்களும் வண்ண மயிலாகும் பாதை.ஏன் அரக்கர்களே கூட அந்தப் பாதையில் மேலேறி முருகன் ஆனாலும் ஆச்சரியமில்லை.

பழையாற்றின் வெள்ளம் சிணுங்கிக் கடக்கும் ஒரு கரையில் அரியும் முத்துவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.முத்துவின் கால்கள் வெள்ளத்தை அளைந்து கொண்டிருந்தன.நேரம் கடந்து சென்றிருந்தது.மேற்கு நோக்கி வானத்தை இழுத்துக் கொண்டோடின பறவைகள்.அப்போதுதான் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள் அவர்கள்.முதியவர்.முகமெங்கும் உழைப்பின் சுருக்கம்.மனம் அதன் மீது தெளிந்து பிரகாசித்தது.நான் சில ஆண்டுகளாக மருந்துவாழ் மலையில் இருக்கிறேன்.உங்கள் இனிமை கேட்க எனக்கு வாய்த்திருக்கிறது.எவ்வளவு இனிய குழந்தைகள் நீங்கள் சிவ சிவா ..என்றார் முதியவர்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"