அய்யா வைகுண்டர் இதிகாசம்-40

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-40 



அந்தி அடைகையில் அரி இருந்த முடுக்கு அறைக்கு வெளியில் பேச்சரவம் கேட்டது.காலையில் அடைத்தவர்களின் குரல்களே அவை.ஒருவன் தடியன் பேச்சு கீச்சுக் குரலில் உள்ள தடியன்.வயது ஐம்பதுக்கும் மேலே இருக்கும்.அவனும் மனிதனே என்பதற்கான ஒரு தன்மை கூட அவனிடம் இருந்தது போல இல்லை.தாணுமாலயன் கோபுர சுதைச் சிற்பங்களில் காணப்பட்ட பூதகணங்களைப் போல இருந்தான்.அவன் பிடியில் ஒரு கடுமையை அரி காலையிலேயே உணர்ந்தான்.

அவனுடைய குரல் துல்லியமாக அரிக்குக் கேட்டது.இப்போது அவர்கள் கள்ளோ சாராயமோ கூடுதலாக அருந்தியிருக்கக் கூடும்.அவர்களுடைய அனைவருடைய குரல்களிலும் தற்காலிக உற்சாகம் தொனித்தது.அந்த உற்சாகக் குரல்களில் நெருங்கிய ஒருவருடைய குரலும் இருப்பதை மிகவும் துல்லியமாக உணர்ந்தான்.பதற்றத்தில் குரலை தனித்து நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை.அந்த ஒரு குரலில் மட்டும் கவனம் குவித்து அந்த குரலுக்குரியவனை நினைவில் ஏற்ற அரி தொடர்ந்து முயன்றான்.புதிய ஒவியம் ஒன்றினை வரைந்து பார்க்கும் முயற்சி போல அது இருந்தது.இனி குரல் தெளிந்து உருவம் புலபட்டுவிடும் என்கிற நிலையில் உருவம் சரிந்து விடும்.மீண்டும் முயற்சி எடுப்பான் அரி.மீண்டும் தோன்றிவிடும் எங்கிற கனத்தில் வேறு ஏதோவொன்று குறுக்கிட்டு உருவம் தொலைந்து விடும்.என்றாலும் அரிக்கு அந்த குரல் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இனி தனக்கு ஏதும் பாதகம் ஏற்படாது என்கிற உறுதியை அக்குரல் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.மிகவும் நெருங்கிக் கேட்ட குரல்.

ஒருவரின் அடையாளம் உணரபட்டுவிட்டாலும் கூட இத்தகைய சண்டிகளுக்கு பின்னர் தெம்பு ஏற்படாது.இவர்கள் ஒருவகையான இருட்டுச் சண்டிகள் தாம்.முகம் தெரியாத இடங்களில் சண்டிகளாக இருப்பார்கள்.முகம் தெரியுமிடங்களில் இப்படி நடந்து கொள்ளத் துணியமாட்டார்கள்.திருடனுக்கு முகம் தெரியக் கூடாது என்பது போலவே தான் இந்த கடை நிலை சண்டிகளுக்கும்.முக அடையாளம் தெரியுமாயின் அவ்வளவுதான்.கதை முடிந்தது போல.இது எப்படி தனக்குத் தெரிகிறது என்று அரி யோசித்தான்.காலம்காலமாக உணரபட்டு தம்மை வந்து சேர்கிற அச்சம் மூலமாக அறியபடுகிற ஒரு உணர்வு இது என்று தோன்றியது.

அவர்கள் தன்னுடைய இருப்பை உணர்ந்தது போலவே தெரியவில்லை.ஒருவேளை காலையில் பிடித்து அடைத்ததை மறந்து போய்விட்டார்களோ என்னவோ என்று அரி நினைத்துக் கொண்டான்.என்ன ஆனாலும்; தான் அமைதி காத்தே தீர வேண்டும்.வேறு வழிகிடையாது.முந்துவது அபாயம்.குரல் கொடுப்பது அபாயம்.என்னை மறந்து விட்டீர்களா என்று அவர்களுக்கு நினைவூட்டுவது கூட அபாயம்.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமோ அத்தனையும் அரிக்குத் தெரிந்தது.இப்படியெல்லாம் நடக்கும்? அதுவும் தனக்கே நேரடியாக நடக்கும்? என அரி யூகித்தது கூட கிடையாது.யூகித்துக் கூட பார்த்திராத விஷயங்கள் வாழ்வில் நடைபெறுகையில் மனம் விசித்திரமாக செயல்படுகிறது.ஒரு குற்றவாளிக்குரிய அனைத்து நுட்பங்களையும் மனம் ஏற்று நடத்துகிறது.அப்படியானால் மனம் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை வேண்டுமாயினும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறது என்பது தானே உண்மை ?அப்படியானால் அவன் இப்படியிருக்கிறான் இவன் இப்படி இருக்கிறான் என்றெல்லாம் அலசுவதில் என்ன பொருள் உண்டு ? நீதி,நியாயம்,தர்மம் இவையெல்லாம் நாம் உடுத்தும் ஆடைகள் போன்றவைதாமோ ?எந்த நேரத்தில் தேவைபடுமாயினும் அணிந்து கொள்ளலாம்.தேவைப்படாதவிடத்தே கழற்றி எறியலாம்.அவற்றால் ஆன பயன் என்ன ?

இரண்டு தினங்களுக்கு முன்னர் முத்து கிணற்றங்கரைகாரர்கள் ஊட்டுக்குச் சென்றிருந்தான்.கிணற்றங்கரைக் காரர்கள் என்பது வெயிலாள் அம்மையின் சகோதரர்கள் இருக்கும் இடத்தின் பெயர்.சாஸ்தாங்கோயில் விளைக்கு வடக்கு மேற்காக அவர்கள் குடியிருக்கும் மேட்டுப்பகுதி இருந்தது.தற்போது முத்திரிக் கிணறு இருப்பதற்கும் கிழக்குப் பக்கமாக உள்ள பகுதி அது.அரி எதேச்சையாக முத்துவைத் தேடி வந்திருந்தான்.

வெயிலாள் அம்மை கிணத்தங்கரைக்கு தம்பி குப்புட்டாங்னு போய்ருகாங்பூ தங்கமே என்றார்.

நீ இங்க இருக்கதுனா இரு இல்லைனா கிணத்தங் கரைல போய் பாரு வந்துருவாங் இப்போ

ஓ நா அப்ப கிணத்தங் கரைக்கு போறேன்.என்று வெயிலாள் அம்மைக்கு பதில் சொல்லி கிணத்தங் கரைக்கு வந்தான்.

முத்துவின் தாய்மாமன் கோழிக்கோட்டு மாடன்,கலப்பைச் செதுக்கிக் கொண்டு நின்றார்.முத்து உடன் சில உதவிகள் செய்தான்.ஓங்கி மூரட்டு மரம் ஒன்றின் மீது கோடாரி விழுந்து கொண்டிருந்தது.ஒரு மரத்தின் மூட்டு பகுதி பாதி மரமாகவும் ,பாதி கலப்பையாகவும் மாறியிருந்தது.கோடாரியைத் தூக்கி வீசும் போது கோழிக் கோட்டுமாடனின் வயிறு முழுவதும் உள்ளே சென்று காணாமல் ஆனது.பின் இறங்கியதும் பெரிய மூச்சோலி.ஒவ்வொரு வீச்சிலும் சொல்லிவைத்தாற்போல கலப்பை மரதிற்குள் இருந்து வெளியே உருவம் எடுத்தது.பசு மாடு ஈனும் போது கன்றின் உருவம் மெல்ல மெல்ல தோன்றுவது போல வெளிப்படும்.அதுவே இதனைக் காண்கையில் நினைவுக்கு வந்தது.அதுவும் ஒரு உயிருக்குள் இருந்து வெளியே கீறி வெளிப்படுகிறது.இதுவும் அவ்வாறே.

கோழிகோட்டு மாடனைப் பற்றி ஏராளம் கதைகள் உண்டு.எல்லாகதைகளிலுமே அதனை நம்பலாமா ? வேண்டாமா ? என மனம் திகைக்கும்.இத்தகைய கதைகள் நெருங்கிப் பார்த்தால் பொய்யாகவே இருக்கும் என்றும் அரிக்குத் தோன்றுவதுண்டு.உண்மையின் சில மெல்லிய கீற்றுக்களை எடுத்துப் பின்னி பின்னி மனம் உண்டாக்குகிற ஆசைக் கதைகள் இவை.கோழிக் கோட்டு மாடனைப் பற்றிய கதைகளும் இத்தகையவை.அரியைப் பார்த்ததும் அவரது கோடாரி நின்றது.

ஓ ...நீங்க இரண்டு பயலுகளுந்தானா என்றார் அவர்.

அரிக்கு முழு சங்கதியும் விளங்கி விட்டது.முத்துவை வலுக் கட்டாயமாக இங்கே தண்டனை போல நிறுத்தி வைத்திருக்கிறார் கோழிகோட்டு மாடன் என்பது தெரிந்தது.அவரிடம் எதிர்த்துப் பேச முடியாது என்பதால் முத்து மாட்டிக் கொண்டு நிற்கிறான்.இது வெயிலாள் அம்மைக்குத் தெரிந்தால் கோழிக்கோட்டு மாடனை வாழைக்காய் பொரியல் செய்து விடுவார் அஎன்பதும் வருக்குத் தெரியும்,ஆனால் எளிதில் முத்து எந்த காரியத்தையும் வெளியில் சொல்வதில்லை என்பதும் தெரியும்.

வேலக்கு போணும்,சும்மா திரியப்படாது என்று இருவரிடம் சொன்னார்

இருவரும் ஓமம் என்று தலையசைத்தார்கள்.

எதுவேண்டுமானாலும் செய்யலாம்.எதுவும் தப்பில்ல.ஆனா சும்மா இருக்கப்படாது.அது வம்சக் கோளாறு படியும் என்றார்.

மீண்டும் இருவரும் ஓமம் என்றார்கள்

மறுத்து மறுத்து வெட்டிப் பேசினால் அவர் துடியோடு துள்ளிப் பேச அவருக்கு ஒரு வாய்ப்பிருக்கும்.ஆனால் இவர்கள் இருவரும் உடனடியாக நாளை தொட்டே வேலைக்கு சென்று விடுபவர்களைப் போல ஆமோதிக்கிறார்கள்.அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

நீங்க பெரிய கிராதகனுகதாம்பூ..என்று விடை கொடுத்தார்.

அந்த குரலின் நாயகர் அவரே ,சுற்றிச் சுற்றி உருவம் வராமல் உள்ளிருந்து அடித்த குரல்.கோழிக் கோட்டு மாடனே என உறுதிப்படவும் அவர்கள் முறியைத் திறப்பதும் ஒரே சமயத்திலாக இருந்தது.

மாமா என்றான் அரி

லே நீயா அவங் எங்கல என்றார் கோழிக்கோடு

[தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"