அய்யா வைகுண்டர் இதிகாசம்-35

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-35

ஒன்றை அறிவதற்கு முதலில் அதிலிருந்து விலக வேண்டியிருக்கிறது.அவ்வளவு ஆழமாக அறிய வேண்டுமெனில் அவ்வளவு தூரம் விலக வேண்டும்.அப்படியில்லையெனில் அறிந்தே தீரவேண்டிய விதி உள்ளவராக ஒருவர் இருப்பவராயின் நோய், தன் விட நாக்கால் வருடி வைக்கிறது.அறி அறி என்னும் ஆணையே நோய்யாக சருமம் தொடுகிறது.அந்த ஆணை எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கில்லை.ஆனால் அது எங்கிருந்தோ வந்து சருமம் நாடுகிறது.தொடர் நோய்கள் மனித மையத்திலிருந்து வேகமாக விரட்டுகின்றன.அனைவரையும் அறியத் தருகின்றன.விதியை அறிய த் தரவேண்டுமெனில் விதியிலிருந்து விலக வேண்டும்.விலகாமல் அறிய முடியாது.உங்கள் விதியையே பிறிதோருவனின் விதிபோல நின்று நோக்க வேண்டும்.இயலக் கூடிய காரியமா என்ன ? சதை துடிக்குமே ...வலி துள்ளத்துடிக்குமே...ஆசை விடாது பற்றுமே..வினை வந்து படியுமே ?

இரண்டு எதிரெதிர் வினைகள் கூடுகையில் சண்டை உண்டாகிறது.ஒன்றை ஒன்று நேருக்கு நேராகப் பார்க்கிறது.விதி அழைத்துக் கொண்டுவிடுவதுதான் இது.எப்படி தப்பிப்பீர்கள் ? எப்படி எதிர்கொள்ளுவீர்கள் ? இதுவும் நோய்தான்.ஒருவருக்கு மற்றொருவர் நோயாக இருப்பது.அண்டையில் அயலில் என்றால் விலகலாம்.அண்ணன் தம்பியாக வாய்த்தால்.தாயும் பிள்ளையுமாகச் சேர்ந்திருந்தால்..தந்தையும் மகனுமாக வாய்த்தால்...மனைவியும் கணவனும் ஆனால்.. விலக வழி கிடையாது.அப்படிச் செய்தால் வினை மேலும் ஒருபடி மேலே கூடிவிடும்.இருந்து கொண்டே விலகியாக வேண்டும்.அது எப்படி ? இருப்பது ஆனால் இல்லாத்திருப்பது...உணர்ச்சி கரையாதிருத்தல் அது.

மகிழ்ச்சி குன்றாதிருத்தல் அது.வேகம் தணிதல்.சற்றே கடினம்.ஆனால் அதனால் கூடும் விடுவிப்பு.

முத்து உறங்காமல் உருண்டு கிடந்தான்.எல்லோரும் உறங்கி விட்ட இரவு.யாரோ ஒருவர் தனித்திருக்கையில் பூதமாகிறது.முக்கியமான ஒரு வாய்ப்பு நின்று போயிற்றோ என்று மனம் கனத்துக் கிடந்தது.அவனுக்கு அறிய வேண்டியிருந்தது.நாம் எங்கிருக்கிறோம் ? எதற்காக இருக்கிறோம் ? இங்கே நமக்கு என்ன வேலை ?ஒரு புழுவாக இருப்பதைக் காட்டிலும் வேறு ஏதேனும் வேலைகள்
நமக்கு உண்டா? அப்பாவைப் போல தாத்தாவைப் போல களிமார் பத்திலேயே நின்று களிமார் பத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட வேண்டியதுதானா ? அவர்கள் அதில் திளைக்கிறார்கள்.அப்பா களிமாரில் நிற்கையில் ஒரு சமரில் ஈடுபடுவது போல நிற்கிறார்.மகிழ்கிறார்.ஒருவகையில் அது சமரும் தான்.அர்ஜூனாதிகளோடு நின்று கொண்டிருக்கும் சமர்.வாழ்வை தன் வசத்தில் கொண்டு நிறுத்துவதற்கான சமர்.ஆனால் அதில் தனக்கு மகிழ்வில்லை என்பது தெரிந்தது.

அம்மை வலுவாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்,அவளுடைய வேலைகள் அத்தனையும் உறங்குவது போன்ற உறக்கம்.அவளுடைய குறட்டை கீதம் வெளியில் வெள்ளம் வாய்காலில் உருளும் சப்தத்துடன் வந்த தவளைச் சத்தத்தில் போய் நிறைவுற்றது.தவளைகள் இரவை தங்கள் கீதத்தால் எவ்வளவு அழகூட்டுகின்றன ? இதனை இந்த மக்கள் அறிகிறார்களா ? அறிகிறார்கள் ஆனால் அது வேறு ஏதோபோல தொடர்பற்று அறிகிறார்கள்.கொஞ்சம் விலகாமல் இந்த கீதத்தை கேட்க வாய்க்காது.

அம்மையை எழுப்பலாமா என்று யோசித்தான்.வேண்டாம்.அவள் அடுத்த பகலுள் நுழைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள்.அதனைத் தடுத்தது போலாகிவிடும்.அவள் எப்படி தூங்குவாள் என்பதையே இன்றுதான் தெரிந்தான்.அவள் உடல் இப்போது அவளுடைய வேராழத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது போலும் இருக்கிறது.

இப்போது அவனுக்கு உறக்கம் வரவில்லை என்பதைக் காட்டிலும் யாரிடமாவது உரையாட வேண்டும் என்றிருந்தது.உடையாளை எழுப்பினான்.சின்ன அனக்கத்திலும் எழுந்து விடக் கூடியவர் அப்பா.பல்லி விழுந்து எழும்பியிருக்கிறார்.பனவோலைப் படுக்கையில் ஒரேயொரு சிரமம் காதுக்குள் பூச்சிகள் நுழைந்து விடுவது.யாரேனும் எழும்பி விளக்கு பற்றி ப் பார்த்தால் அப்பா இருள் உருவமாக நின்று கொண்டிருப்பார்.அந்த வினோத உரு அவன் மனதில் பதிந்திருக்கிறது.அவர் பொன்னு நாடார் என்பதை விட பொன்னு மாடன் என்பதில் அவனுக்கு பொருத்தம் அதிகமிருப்பதாகப் படும்.இரண்டுபேரிலும் அவரை மக்கள் அழைத்தார்கள்.அவர் எழும்பிவிடாத ஒலியில் உடையாளை அழைத்தான்.கிட்டத்தட்ட ஒரு இருள் செய்கை போல அது ஒலித்தது.இருவரும் பின்பக்கமாகச் சென்றார்கள்.

எப்போதும் விளையாடத் தயாராக இருக்கும் துருதுருப்பு தங்கைக்கு.

கருப்பட்டில சுக்கு போட்டு காய்க்கிதியா புள்ள
நாக்கு வரண்டது போல கிடக்கு.கசப்பு

அவள் ஒலி வராமல் அடுப்பு மூட்டினாள்.விளக்கு பற்றிக் கொள்ளவில்லை.பின் கொல்லையில் இருள் ஓங்கியிருந்தது.அவள் அடுப்பு பற்றியதும் இருள் பற்றிய நெருப்பை சூழ்ந்து வரத் தொடங்கியது போல அடர்ந்தது.முன்பிலும் அதிக இருள்.சற்றைக்கு அப்புறம் அடுப்பின் நெருப்பு தாவரங்களின் இலைகளுக்குச் சென்றது.

எண்ணங்கள் அடுக்கின மண் பாறைகள் மாதி இருக்கு உடையா..ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு தளம் .ஒரு தளத்துக்குப் போனா அந்த அடுக்குல உள்ளதெல்லாம் வந்துட்டே இருக்கு..அத தாண்டி உள்ள போனா அடுத்த தளம் ,அங்கேயும் நிறைய அடுக்கு.வந்திற்றே இருக்கும்

என்ன செல்லிய ..கசப்பு நாக்குல இருந்து மண்டைல கேறுனது போல பேசுத ...அம்மைய எழுப்பட்டா என்றாள் உடையா

வேண்டாமுட்டி..அவ உறங்கட்டு..

நீ பனையேறப் போனா எண்ணணா..இல்லைனா களிமாருக்கு...அண்ணன் போறாமில்லியா ? என்றாள்.

அவளை எழுப்பியிருக்கத் தேவையில்லையோ என்று முத்துவுக்கு தோன்றியது.

போகணும் என்று பதில் கூறி படுக்கச் சென்றான்.

அம்ம அப்படிலாம் அவன கேக்கபடாது எண்ணுதான் எல்லாரிடயுஞ் செல்லிருக்கு..என்னாலும் கேக்கேன்.என்றாள் உடையா

கருப்பட்டிச் சுடுவெள்ளம் குடித்த பிறகு அடர் இருள் மீது படுத்திருப்பது போல உணர்ந்தான் முத்து.எவ்வளவு நக்ஷத்திரங்கள் இரூள் நடுவே.பார்க்கப் பார்க்க மனம் அங்கேயே சென்று நிலைத்து விடாதா ? என்றிருந்தது,நிழலான ஒரு கனவுக்குள் முத்து நுழைந்து கொண்டிருந்தான்.

நக்ஷத்திரங்கள் எவ்வளவு விலகியிருக்கின்றன ? விலகலில் உண்டான சுடர் மட்டும் வந்து எய்துகிறது.ஒரு நக்ஷத்திரந்தில் இருந்து மற்றொன்றுக்கு தாவிக் குதித்தான்.அதிக நேரம் பிடித்தது.ஒன்றிலிருந்து அடுத்த ஒன்றிற்குத் தாவுவது.மனம் குதிக்க எழுவதும் நேரம் அதிகம் பிடிப்பதும் ஒருவித அவஸ்தையாக தென்பட்டது.அவஸ்தை முடிந்து லகுவாக உணரும் போது களிமார் பத்து நோக்கி குதித்து வெள்ளத்தில் வந்து விழுந்தான்.முதுகில் வலியுணர்வு உச்சமாக இருந்தது.வெள்ளத்தில் புகுந்து ஓடிக் கொண்டிருந்தான்.நெடு நேரமாக ஓடிக் கொண்டேயிருந்தான்.நாலாபக்கமிருந்தும் வெள்ளம் புகுந்து சூழ்ந்தது.எப்படி கரையேறுவது என்பது தெரியவில்லை.கரையேறும் தாகத்தில் ஓடினான்.வெயிலாள் வெள்ளத்திற்கு வெளியில் நின்று

முத்து...இங்க வந்துருல மக்கா என்று உரக்க கூவிக் கொண்டிருந்தாள்.அவள் நின்றிருந்த இடத்தில் வெள்ளம் கொஞ்சம் கூட இல்லை.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"