அய்யா வைகுண்டர் இதிகாசம்-44 மருந்துவாழ் மலை 3

 அய்யா வைகுண்டர் இதிகாசம்-44

மருந்துவாழ் மலை 3


மலையின் அடியில் நின்ற ஆலம் விழுதுகள் பொய்கைக்கு வருகிற பாதையில் இடைவெளியில் குறுகி ,மலையின் திரட்டில் பாதம் வரையில் ஊன்றி நின்றன.அந்த திரடு காண்பதற்கும் மலையின் பாதம் போலவே இருந்தது.யாரோ ஒருவரின் பாதம் போல.அந்த பாதம் வளரும் திரட்டை கவனித்தால்,அது இந்த பாதம் கொண்டவரின் மடி போலும் காட்சியளித்தது.அதுவொரு சரிவுப் பகுதி.அதன் மேலே ஒட்டிய பாறையில் ஒரு குகை.குகைமேல் முனி அந்த குகையின் மேலே உருளைக் கற்களைக் கொண்டு தானுண்டாக்கிய படுக்கை ஒன்றினை அமைத்திருந்தார்.அதன் மேலே அவர் படுத்திருப்பார்,அதன் பொருட்டே அவர் பெயரும் குகைமேல் முனி என்றாயிற்று.இடையர்களே இவர்களுக்கு பெயர் கண்டார்கள்.கேரள முனி,பண்டார முனி ,பிராந்து முனி,பேசா முனி ,நாயுருவி முனி,நாராயண முனி,முற்றிய முனி,குணக் கோளாறு கொண்ட அரச முனி,அடங்கா முனி ,பாவைக்காய் முனி,நன்னாரி முனி,பாச முனி,அடி முனி,நடு முனி ,உச்சி முனி,தோன்றா முனி ,பறவை முனி,புது முனி எப்படி பதினெட்டுக்கும் குறையாத முனிமார்கள் மலையில் இருந்தார்கள்.அதில் பலரும் கடுந்தவத்தோர்கள்.ஆனாலும் அவர்களுக்கும் ஒவ்வொரு விதமான வீட்டை உருவாக்கிக் கொண்டிருப்பதை இடையர்களே கண்டார்கள்.அந்த முனி அது செய்யும்,இந்த முனி இது செய்யும் என்றெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருந்தது.முனி காணச் செல்பவர்களுக்கு இடையர்கள் வழி சொன்னார்கள்.ஒவ்வொரு முனியின் சுபாவத்தையும் நன்கறிந்தவர்கள் அவர்களே.கிடைகளை அறிந்து வைத்திருந்தது போல அவர்கள் இந்த முனிகளையும் அறிந்து வைத்திருந்தார்கள்.மறிகளில் அவர்கள் மேலொன்றும் இல்லை என்பதே அவர்கள் கணிப்பு.இருந்தாலும் அவர்களின்பால் ஒரு சிறப்பு ஈர்ப்பும் இடையர்களுக்கு இருந்தது.அது மறிகளைப் போல அவர்களும் ஆனால் உதவாத பழக்க முடியாத ஜீவன்கள் என அவர்கள் அறிந்தார்கள்.முனிமாருக்கு அவர்கள் சிலபல உபகாரங்களையும் செய்து வந்தார்கள்.ஆசார முனி குளிக்கும் பழக்கம் உடையது.சடங்கு முனி என்றும் ஒன்றுண்டு.

இந்த முனிகள் அனைத்துமே சொந்தப் பெயர் மறந்து இடையர்கள் வைத்த பெயர்களுக்கு ஏற்ப பின்னர் நடந்து கொண்டன.பெயர் வைப்பது வரையில் ஏனோ தானோ என்று இருந்தவையும் கூட பெயர் வைத்ததும் பெயருக்கு கட்டுப்பட்டன.தாக்கும் முனி என இடையர்களால் நாமம் விளிக்கபட்ட முனி தாக்கித் தாக்கி சீரழிந்தது.இடையர்களால் முனிகளின் அகத்திற்குள் சென்று அறிய முடியவில்லையே தவிர்த்து புறத்தில் அவர்களே முனிகளை ஆட்சி புரிந்தார்கள்.அவர்களின் புற உலக நடபடிகள் அவர்களுக்கு அத்துப்படியாகியிருந்தன.கோடை முனி கோடையில் மட்டும் வந்து செல்வது,யாழ்ப்பாணம் முனியை அறியத் தகவல் இல்லை.இவற்றில் வைதீக முனிகளும் உண்டு.

முனிகளின் அந்தி கொதிப்பாக இருக்கும்,அவ்வப்போது சில சிறிய அடிதடிகள் வழக்கம்.இதில் ஒதுங்கிக் கொள்ளும் முனிகள் மிகவும் விவேகமானவை.குகைமேல் முனி களத்திற்குள் செல்வதில்லை.குகைமேல் படுத்தபடி விவாதங்களில் பங்கேற்கும்.

ஆமா ஆமா நீ அடிச்சு விட்டுகிட்டே இரு.காத்துல இருக்காங் கதவில இருக்காங்னு..ஒனக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம் உண்டுடே ,பார்த்தாலே தெரியலயாக்கும் ?

இப்படி குகைமேல் முனி பதில் சொல்வது விவாதத்தை மத்திமமாக நின்று நடத்தும் அரச முனிக்கு பதிலாகும்.ஆனால் பாவம் அரச முனிக்குப் புரிவதில்லை.இப்படி எல்லொருக்கும் பதில் சொல்லும் குகைமேல் முனிக்கு சப்த போதம்.எல்லா சப்தத்திற்கும் எதிர்வினை உண்டு.அணிலடியாரே திரவியம் கிடைகலயா ? இது அணிலுக்கான பதில்.

எல்லா முனிக்கும் பதில குகைமேல் முனிதா சொல்லுதாங்..யாரு கேக்குதா ..அவனவனுக்கு அவனவந்தா பெரிசு.அவன் வச்சுருக்க மவுசுதாங் பெரிசு என்பார் நாராயண முனி.ஆசார முனிகளை அடிக்கும் வேலை கேரள முனிக்கு.சடங்கு முனி ஆசார முனிக்கு ஒத்தூதும்.ஒரு முனியை ஏதேனும் ஒருவர் பார்த்து விடைபெற்றால் அரச முனி கோள் மூட்டும்.அதனால் அற்ப முனி என்றொரு விளிப்பெயரும் உண்டு.

ஒருபயலுந் தூங்கிருக்க மாட்டாங்..என்றபடி நள்ளிரவில் ஊளையிடுவது அடங்கா முனி.நள்ளரவில் அதன் பின்னர் இந்த உறங்கா முனிகளால் சற்றே சலனம் உண்டாகும்.அதுவொரு சூக்கும சலனம்.கண்டால் துயரம்,அறிந்தால் தீமை

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"