அய்யா வைகுண்டர் இதிகாசம்-46 மருந்துவாழ் மலை 5

அய்யா வைகுண்டர் இதிகாசம்-46

மருந்துவாழ் மலை 5


குகைமேல் முனி ,குகைக்கு மேல் உருவாக்கியுள்ள படுக்கை நூதனமானது.மழை வெள்ளம் ஒழுகாது.மெல்லிய சாரல் விழும். ஆனால் படுத்த வண்ணம் வெளி காண முடியும்.குகைக்கு மேலே முனி அமைத்திருக்கும் படுக்கைக்கும் மேலே ஒரு பாறை முகடு நீண்டிருந்தது.குகையை தகப்பனாரின் வீடு என்று சொன்னார் .அப்படித்தான் முனி கருதிற்று.அதனால் அங்கே குகை மேல் முனி படுக்கச் செல்வதில்லை.அங்கே பிற முனிகளும் கால் வைப்பதில்லை.பிற முனிகள் குகைமேல் முனியின் தகப்பன் சிவன் என்றன.தானாகவே அதிகம் பேசிக் கொள்கிற முனி குகைமேல் முனி.பிறர் எவரிடமும் பேசுவதில்லை.பேசும்.கேட்டால் பதில் கூறும்.ஆனால் அந்த பதில் கேட்ட கேள்விக்குரியதுதானா என்றால் இருக்காது.எப்போதும் வேறு ஏதோ போதம்.அது சிவ போதமாகத் தானிருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் வேறு ஏதோ போதத்தில் சிவ போதம் ஒளிந்திருக்கிறது என்பதும் ஒரு உண்மைதானே...

முத்துவிற்கு இவர்கள் அனைவரிடமும் ஈர்ப்பு அதிகப்பட்டுக் கொண்டே இருந்தது.சில விஷயங்களை நாம் பொருள் கொள்ள முயலாமல் இருக்கவேண்டும்,நாம் இத்தகைய முனிகளிடம் கடைபிடிக்க வேண்டிய நெறி இது ஒன்றுதான்.என்று அரியிடம் சொன்னான்.முதலில் அவர்கள் பொருள் வாழ்க்கைக்கு முற்றிலும் வெளியே இருக்கிறார்கள்.அதன் காரணமாகவே இவர்களை சாதாரண மக்களுக்குப் பொருள் கொள்ளுதல் கடினம்.சாதாரண மக்கள் என்கிற திரளே பொருள் வாழ்வுக்கு வெளியே உள்ளவற்றை அர்த்தம் கொள்ளதக்க இடத்தில் இல்லை.யாரேனும் அவரைச் சென்று பார்த்தால் பணம் பெருகுகிறது,செல்வம் உண்டாகிறது ,சீக்கு குணப்படுகிறது என்றால் மட்டுமே அவர்களுக்கு தற்காலிக அர்த்தம் இவர்களில் கிடைக்கிறது.தற்காலிக பணிவிடைகள் செய்கிறார்கள்.கிடைக்காவிடின் இவர்களைப் பொய்யர்கள் என்கிறார்கள்.இவர்களில் சிலர் தேர்வு செய்து இந்த வழியை அடைகிறார்கள்.சிலர் தேர்வு செய்யாமலேயே இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறார்கள்.இதில் அது சிறப்பானதா,இது சிறப்பானதா என்றெல்லாம் வகைபடுத்த இயலாது.அது அவசியமும் இல்லை.கண்டடைதலின் பாதையில் கிடப்பவர்கள் இவர்கள்.மொழிக்கு முந்தைய கொடு நிலை.அவர்கள் எதனைக் கண்டடையப் போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.நடக்கலாம்,நடக்காமலும் போகலாம்.ஆனால் இவர்களில் வாழ்வின் பிரச்சனைகளுக்கு அஞ்சி, எதிர்கொள்வதில் பின்தங்கி வந்து சேர்பவர்களுக்கு பலன் ஏதுமில்லை.அப்படி வருபவர்களே பெரும்பான்மையினர்.இத்தகையவர்கள் இந்த பாதையிலிருந்து எதைனையேனும் கண்டடைந்தால் அதனை மேலாதிக்கம் செய்வதற்கான விஷயமாக மாற்றிவிடுகிறார்கள்.இது இந்த பாதையின் குறை அல்ல.மனுஷன் எது கிடைத்தாலும் அதனை ஆதிக்கத்தின் கருவியாக மாற்றிவிடுவதில் அபாரமான திறமை கொண்டவன்.இந்த பண்பிற்கு அப்பால் இருப்பவர்கள் சூரியனுக்கு நிகரானவர்கள்.அவர்களை ஏதுவும் அசைப்பதில்லை.கடந்து கடந்து கடந்து விட்டவர்கள்.அவர்களிடம் பேசினால் உரையாடினால் நல்லதுதான்.பணிவிடைகள் செய்ய வாய்ப்பது புண்ணியமே.ஆனால் உரையாடும் அவசியமும் கிடையாது.பூக்களைப் போல கனிகளைப் போல வெளிச்சத்தைப் போல ,இருளைப் போல அவர்கள் நித்தியத்தில் பிரகாசிப்பவர்கள்.அந்த பாடசாலிக்கு செல்வதற்கான வழிப் பாதை இது.இதுவொன்றே அதற்கான ஒற்றைப் பாதை என்பதும் கிடையாது.

அரியிடம் கேள்விகள் துள்ளிக் குதித்த வண்ணம் இருந்தன.மனதைக் கட்டுப்படுத்தி,முந்தாதே கவனி அது ஒன்றே இப்போதைக்கு போதுமானது என்று எச்சரிக்கை செய்த வண்ணம் அமைதியாக இருந்தான்.

சில சமயங்களில் இவர்களை விட இடையர்கள் மேலானவர்கள் என்று தோன்றிவிடும்.இடையர்கள் மேலானவர்களே.அதிலும் உண்மை இல்லாமலில்லை.இடையர்களிடம் உள்ள உறுதித் தன்மை கச்சிதத் தன்மை இவர்களிடம் இல்லை.ஆனால் அந்த கச்சிதத் தன்மை குலைந்த பிறகு உருவாகிற தன்மையில் இவர்கள் இருக்கிறார்கள்.அதனால் இவர்கள் மேலானவர்களிலும் பெரியவர்கள்.இடையர்கள் இருக்குமிடம் இவர்களும் அறிந்ததுதான்.அந்த கச்சிதத் தன்மை உடைந்தால் ,இது அதனுள் இருகிறது.இது அந்த கச்சிதத் தன்மையிலிருந்து வெளியே நீண்டு வந்து விழும்.கச்சிதத் தன்மையை அளவிடும் போது அதனுள் இருக்கும் சடையை ஞானி அறிந்திருக்க வேண்டும்.இந்த இவ்விதமான கச்சிதமா என்றால் இதனுள் இருப்பவன் பண்டார முனி,இல்லையென்றால் பிராந்து முனி என்பது தெரிய வேண்டும்.அலைவது அதற்கே.இந்த அழகின் ஒடுக்கத்தில் உள்ள அர்த்தம் வேறு.பயணத்தில் பெறப்படும் அர்த்தம் வேறு.அலைச்சல் உண்டாக்கும் அர்த்தம் வேறு.அதுவே உடைகையில் பெறப்படும் அர்த்தம் சுய ரூபம்.அதுவே புறத்தே தொகுக்கபடுகையில் முற்றிலும் வேறு ஒரு மகத்தான அர்த்தத்தை உண்டுபண்ணுகிறது.

அவர்கள் இருவரும் பேசிய படியே மேலே நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அந்தி கவியத் தொடங்கியிருந்தது.புள்ளினங்கள் சிதறலாக சிதறி மீண்டும் அமைந்தன.தாண்டும் இடங்களில் சில முனிகள் ஏதேதோ பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களைப் போல வேகத்தில் இருந்தார்கள்.

இனி தாமதித்தால் நாம் திரும்ப இயலாமலாகி விடும்.என்றான் அரி

உண்மையாகவே நாம் வந்து சேர்ந்திருப்பது திரும்ப இயலாத ஒரு இடத்திற்கே அரி என்றான் முத்து.நாம் இப்போது திரும்பிச் சென்று விட்டாலும் கூட நாம் திரும்ப இயலாத இடத்தில் கால் வைத்து விட்டு திரும்பிச் செல்கிறவர்களாகவே இருப்போம்.நமது கால்களின் வழியே இது இப்பொது நமது உடலுக்குள் ஏறி நிரம்பத் தொடங்கி விட்டது.திரும்ப இயலாத இடமே இனி நமதிடம்

அவர்கள் இருவரும் திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.

ஒற்றை இடையர் மறிகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்.மலை முழுதுமாக நின்றிருந்த மறிகள் தன் கவனதிற்குள் வந்தன.இடையர் மறிகளை அழைத்த பாஷை மறிகள் மட்டுமே அறிந்த பாஷையாக இருந்தது.

[ தொடரும் ] 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"