அய்யா வைகுண்டர் இதிகாசம் -28 முடிசூடும் பெருமாள் - 3

அய்யா வைகுண்டர் இதிகாசம் -28

முடிசூடும் பெருமாள் - 3


துரைப்பாண்டி நாடார் குடும்பம் பெரும்பஞ்சத்தில் இங்கே வந்து சேர்ந்தார்கள்.வடக்கே ,கிழக்கே வாழ முடியாது இங்கே வந்தார்கள்.அப்போது இந்த காடெலாம் வெட்டித் திருத்தி இருந்து கொள்ளலாம் என்கிற நிலையில் புதையல் பூமியாகவே நின்றது.முகிலன் குடியிருப்பு ஊரிலிருந்து கிழக்கே பாண்டிக்கு பனையேறப் போனவர்களோடு அவர்கள் குடும்பத்திற்கு தொடுப்பு உண்டும்.அவர்கள் தந்தையார் காலத்தில் இங்கே வந்து சேர்ந்தார்கள்.வாழ்வா சாவா பிரச்சனையில் அவர்கள் வாழ்வைத் தேர்வு செய்தார்கள்.ஆனால் அவர்கள் பின்பற்றியது ஆரம்பம் முதற்கொண்டே விரிவு இல்லாத சுருங்கிய குறுக்கு வழிகள்.திருட்டு ஒரு சாராருக்கு வாழ்க்கை முறையாக இருந்த காலம்.அவர்களோடு தான் இவர்களுக்கு முதல் தொடர்பு ஊரில் உண்டானது.இவர்கள் பெரும்பாலும் ஊருக்குப் புறத்தில் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.சமூக மதிப்பு கிடையாது.அவர்களும் அதை எதிர்பார்ப்பதில்லை.

திருடர்களுக்கென்று ஒரு வாழ்க்கைக் கண்ணொட்டம் இருக்கிறது.வழிப்பறியாளனுகென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு.எப்படி வணிகனுகென்று ஒரு வாழ்க்கை முறை உண்டோ அது போல அது போல கொள்ளையர்களின் வாழ்க்கை முறை வேறுவிதமானது.காசி ,துரோப்பா,ஜெம்புலிங்கம் போன்ற கொள்ளையர் நெறி அது..இவர்கள் நெறியும் வேறு.இவர்களின் மனைவிமார்கள் இவர்களுக்காகவே வந்தவர்கள் போல ,வந்து பிறந்தவர்கள் போல குணம் கொண்டிருப்பார்கள்.கற்பில் அரசிகள்.ஆனாலும் அங்கேயும் யாரும் அவர்கள் நெறி தவற முடியாது.

கொள்ளையர் நெறி பழகிவிட்டால் பின்னர் அதுதான் நெறி போல தோன்றிவிடும்.பிற நெறிகளெல்லாம் மானங்கெட்டவர்களின் நெறி போல படும்.எல்லா நெறிகளுக்குமே இத்தகைய பண்பு உண்டு.தெரிந்தோ தெரியாமலோ ,வாழ்க்கைச் சூழல் சமூகச்சூழல் காரணமாகவோ ஒரு நெறி பழகி விடுகிறான்.பழகிய மறுகணமே பிற நெறிகள் அனைத்தும் மானங்கெட்டவர்களுடையது என்று தோன்றிவிடும்.அடிப்படையில் எல்லா மனிதனுக்குமே நெறி இருக்கிறது அது உயர் நெறியா இல்லையா என்பதுதான் பிரச்சனை.ஒருவன் வள்ளுவர் வழி ஒழுகினால் அது உயர் வழி,காசி துரோப்பா ஜெம்புலிங்கம் என்று சென்றால் கீழ் நெறி.

கொள்ளையர் நெறியோ ,கள்ளர் நெறியோ பழகி விட்டால் அந்த கண்ணொட்டமே பின் தொடர்ந்து வரும்.சமுகத்திற்குள் நுழையவே முடியாது.விலகி நிற்க வேண்டி வரும்.பெண் எடுக்க முடியாது கொடுக்க முடியாது.கதையாகி வாழ்ந்தாலும் உண்டு.இடையில் நீறாகி போனாலும் ஆச்சரியம் இல்லை.கொள்ளை பழகிய பெண் சமூகத்திற்கு ஆகமாட்டாள்.எவ்வளவு கற்புக்கரசியாக இருந்தாலும் .கொள்ளைச் சமையல் பழகியவளால் சமுகத்தில் ஒண்ட முடியாது.சமூகத்திற்குள் திடீரென கொண்டு விட்டுவிட்டால் இருப்பு கொள்ளாது, தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டேயிருப்பாள்.

கொள்ளையரின் சாமிகளும் கொள்ளைப் பண்டம் தின்பவை.கூட்டமாக அமர்ந்து தின்பவை.அவை அடுத்த கொள்ளைப் பண்டதிற்கு ஏங்கி நிற்பவை.அதற்குத் தூண்டக் கூடியவை.அதனால் அவன் அடிபட்டு நாய் போல செத்தால் அவர்களுக்கு ஒரு இடரும் வராது.துன்பத்தில்,பாபத்தில்,இடரில் ,விதியில் அவை கலந்து கொள்வதில்லை.பண்டம் அதன் ஜிலுஜிலுப்பு ,அதன் ரத்தம் படிந்த ருசி இதற்கப்பால் காப்பதற்கோ ரட்சிப்பதற்கோ அவர்களுக்கு அருகதை கிடையாது.ஒருவகையில் சொன்னால் இந்த வகை சாமிகளே பேய்ச்சாமிகள்.அடுத்த குற்றத்தை தூண்டும்.நடத்திக் காட்டியதும் விலகி அகலும்.வினை கெட்டவனே தனக்கு துணை நிற்பான் என்பதை நன்கு அறிவார்கள் அவர்கள்.வினை கெட்டவர்களையே அவர்கள் தேர்வும் செய்கிறார்கள்.விதி கெட்டவனே அவர்களைச் சுற்றி நிற்கிறான்.

பெரும்பாலும் கொள்ளையர் நெறி பேணுவோரின்,திருடர் நெறி பின்பற்றுவோரின் அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சமூகத்திற்குள் வாழ்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.அவ்வாறே மதிப்பிடுகிறார்கள்.பிறரைக் காட்டிலும் தங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான மூளையும்,சாதுர்யமும் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.சமுகத்திற்குள் வாழ்பவனே சரியாக வாழ்கிறான் என்பதை கடைசி வரையில் தெரிந்து கொள்வதே இல்லை.தலைமுறை தலைமுறையாக அழிந்தாலும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.அவர்கள் பயிலும் நெறி விடுவதில்லை.அந்த நெறியின் சுவை தடுத்து விடும்.அது ஆற்றைக் கடலாக மாற்றிக் குடிக்கும் சுவை.

இந்த நெறி கொண்டவன் உண்டியலில் கைவைத்தால் தெய்வங்கள் எதும் செய்வதில்லை.படையல் எடுத்துண்டால் தடுப்பதில்லை.பெரும்பாலும் கோயில் திருட்டுகளிலோ ,கொள்ளைகளிலோ சாதாரணர்கள் ஈடுபடும் போது மாட்டிக் கொள்கிறார்கள்.கள்ளர் நெறி பயின்றவர்களை தெய்வங்கள் காட்டித் தருவதில்லை.ஏனென்றால் ஏற்கனவே பெருஞ்சிறையில் இருப்பவன் அவன்.அவன் மீது காலம் போர்த்திப் படுத்துத் தூங்குகிறது.சுய நரகை அரண் போல பாதுகாத்து வருகிறான்.உண்மையில் சுய நரகை அரண் என்றே நம்பிக் கொண்டிருக்கிறான்.ஏற்கனவே தண்டனையில் இருப்பவனை மீண்டும் மீண்டும் எதற்காக தண்டிக்க வேண்டும் என தெய்வங்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.நரகத்தின் செல்லப் பிள்ளைகளாக அவர்கள் ஆகிறார்கள்.

பனையேறிகளும் இவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை.பெண் கொடுப்பதில்லை,எடுப்பதில்லை.எடுத்தால் தங்களுக்குள் கள்ளர் நெறி புகுந்து விடும்.கொடுத்தால் நரகு பழகி, கொடுத்தவர்களை அங்கு நோக்கி கொடுக்கபட்டவள் அழைப்பாள்.விருந்தில் போய் சேர வேண்டி வரும்.முதலில் இவர்கள் பிற நெறியுடையோர் என சமூக மக்கள் அறிவது போல பனையேறிகள் தொடக்கத்தில் அறிந்து கொள்வதில்லை.நாட்பட அறிந்து விரட்டி விடுவார்கள்.

திருவிதாங்கூர் அரசர்கள் வரி பிரிப்பவனை முகவர்களாகத் தேடினார்களே ஒழிய பிரிப்பவன் எத்தகையவன் என்பதைப் பார்த்தவர்கள் இல்லை.பெரும்பாலான இடங்களில் வரி முகவர்களாக கீழ் நெறி கொண்டவர்களே இருந்தார்கள்.இவர்கள் கொலை களவு வழிப்பறி அனைத்தும் பயின்றார்கள்.முகம் தெரியாத இடத்தில் திருடனாகவும்,அயலூர்களில் கொள்ளையர்களாகவும்,ஊருக்கு புறத்தே வழிப்பறியாகவும் இருந்தார்கள்.

துரைப்பாண்டியின் தந்தையாருக்கு இரண்டு பண்புகள் இருந்தன.பெரிய இடங்களில் பம்முவார்.சிறிய இடங்களில் சீறுவார்.இந்த பண்பு வெளியூர்களில் இருந்து வருகிறவர்களுக்கு இயல்பாக இருப்பது.அவர்களுக்கு ஓரிடத்தைப் பெரிய இடமா சிறிய இடமா என்று யூகிப்பதில் தாமதமுண்டு.அதனாலும் தோன்றும் பம்மல் அது.இரண்டாவதாக அந்த பம்மலின் ஊடாகவே சாரல் மழைபோல தடித்து ,அதிகார தொனியில் ஓங்கு குரலில் பேசுவது.இந்த இரண்டும் அப்படியே துரைபாண்டியிடமும் வந்து சேர்ந்து விட்டன.கூடுதலாக பல இரப்பாளிப் பண்புகளை அவரே சம்பாதித்திருந்தார்.உடல் முழுதுமே எப்போதும் பாவனைகள் வழுகி ஒழுகும்.

கருப்பட்டி கேட்டு நின்ற துரைபாண்டியிடம் எங்கள் கருப்பட்டியை ஊருக்கும் நிறைய தர்மம் செய்கிறோம்.அரசுக்கும் தந்திருக்கிறோம்.மற்றபடி உமக்கு நாங்கள் தருவதில்லையே துரைப்பாண்டியாரே

ராசாவுக்கு தாறதெல்லாம் தொரைக்க கொல்லைகெல்லா போவுது போல ...என்று துரைபாண்டியைக் கேட்டாள் வெயிலாள்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"