அய்யா வைகுண்டர் இதிகாசம் -24 அய்யா மனிதப் பிறப்பு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -24

அய்யா மனிதப் பிறப்பு -4



ஊர் குடிமகள் மாலையில் வந்தாள்.தகவல் சொல்லியிருந்தார்கள்.நாள் வேலைக்கு சென்று திரும்பி அவள் வந்து சேர வேண்டும்.நாவிடிச்சி,வைத்திச்சி,ஊர் குடிமகள் என்பதெல்லாம் அவள் பெயர்களே.வெளியில் வைக்கப்பட்டிருந்த சாய்ந்த மண் குடத்தில் நீரலம்பி விட்டு குனிந்தே குடிலுனுள் நுழைந்தாள்.அவளுக்கு வலியின் கறுப்பு நிறம்,வலியின் உருவம்,அவள் வருகை வலி நிறைந்ததாக எப்போதும் காணப்பட்டது.கிராமத்தின் அனைத்து வலியுணர்ச்சிகளிலும் அவள் சம்பந்தபட்டிருந்தாள்.வலியற்ற ஒரிடத்திலும் அவள் காணப்படுவதே இல்லை.ஒருவேளை வலியில்லாத இடங்களில் அவள் காணபட்டாலும் கூட அவள்தான் இவள் என்று உணரப்படுவதில்லை.வலி நிரம்பிய இடகளில் அவள் உருவம் பெரிதாக இருந்தது.

வலியுணர்ச்சி அந்த காலத்தில் மிகவும் அதிகம்.வலி உண்மையே.அது அதிகமாகத் தோன்றும் காலம்.ஏனெனில் எல்லாவிதமான வலி உணர்வுகளும் மரணத்தின் சாயலில் வந்தன.ஊர் குடிமகளுக்கும் அந்த சாயல் இருந்தது.ஏற்படும் வலியிலிருந்து மரணத்தைப் பகுத்து வைக்க அவளுக்குத் தெரியும்.விருப்பும் வெறுப்பும் இல்லாதவள்.இனிமையாக பேசியபடியே கடுமையாக நடந்து கொள்வாள்.எனவே அவள் இனிப்பானவளா ? கடுமையானவளா என்று கண்டறிய முடியாது.

வெயிலாளின் கைபிடித்துப் பார்த்தாள் .இன்று பிரசவம் ஆகாது .விடிய வேண்டும்.வானத்தில் வெள்ளி மறைய வேண்டும்.ஆனால் நாம் எற்பாடாகிவிட வேண்டியதே.

பெண்கள் மட்டும் அறைக்குள் நின்றார்கள்.ஆண்கள் முற்றத்தில் இருந்தார்கள். வலியை பற்றி ஏதும் பேசக் கூடாது என்கிற கவனம் எல்லோருடைய வார்த்தைகளிலும் இருந்தது.ஆனால் எல்லோருடைய மனதிலும் அது ஏறி அமர்ந்திருந்தது.பொன்னு லேசாக நடமாடிக் கொண்டிருந்தார்.மனதில் அலையலையாக நினைவுகளும் எண்ணங்களும் புரண்டு கொண்டிருந்தன.கோனார் விளையில் நாய்கள் அனக்கங்களைக் குரைப்பதும் அடங்குவதுமாக இருந்தன.எல்லாமே கன்னிவகை வேட்டை நாய்கள்.அதில் ஒன்றிரண்டு நாய்கள் கோனாருடையவை.அவற்றின் மோப்ப உணர்ச்சி அரை மைலுக்கும் அதிகம்.ஒரு அனக்கம் ஒரடி எடுத்து வைத்ததுமே உருமத் தொடங்கும் அவை உருவம் நெருங்க நெருங்க எகிறும்.வளர்ப்பைப் பொறுத்து வேட்டையை மட்டுமே செய்து விட்டு அடங்கித் தூங்குபவையும் உண்டு.அறியாத அனக்கத்தை அவை குரைக்கும் குரைத்து பயமூட்ட விரும்பும்.பயம் உடலில் ஏற்படாதவரை அவற்றால் ஏதும் செய்ய முடிவதில்லை.முனிமார்களின் அதிர்வுகளை அவற்றால் அடையாளம் கூட காணத் தெரிவதில்லை.ஆட்கள் சிலர் வரத் தொடங்கினார்கள்.உறவினர்களும் வந்தார்கள்,அல்லாதோரும் வந்தார்கள்.பொன்னுவுக்கு நெருங்கியவ்ரகள்.

பெரும்பாலும் பிரசவவலி மொத்த சமுகத்திற்கும் எற்படுகிற வலியாய இருந்தது.எல்லொருமே வலியுணர்ச்சி கண்டார்கள்.உறவினருக்கு அனைவருக்கும் ஏற்படும்.தங்கையின் மகப் பேற்று வலி அண்ணனுக்கு இருக்கும்.சகோதர சகோதரிகள் அத்தனை பேருக்கும் இருக்கும்.சொக்காரர்களுக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.சொக்காரர்கள் என்பவர்கள் அப்பாவின் உடன்பிறந்த கிளைவழிச் சொந்தங்கள்.

பொன்னு விளைவழியே நோக்கினார்.நிலவு சுடர் விடும் காலங்களில் கூட விளைகளுக்குள் இருள் அடர்ந்தே இருக்கும்.பகலானால் வெயில் நெரடியாக தரையில் வந்து விழுவதில்லை.அது நிழல் மூடி தரை சேரும்.சுற்றியுள்ள எல்லா குடிசைகளிலும் பின்னையெண்ணை அகல் ஏற்றப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.எல்லோரும் உறவினர்களே.எல்லோரும் வலியுணர்ச்சி மூண்டிருந்தார்கள்.சொல்லப் போனால் வெயிலாளுக்கு மட்டுமே வலி ஏற்படவில்லை.

சாஸ்தாங்கோயில் விளையில் மொத்தமாக ஐம்பது குடும்பங்களுக்குள் இருந்தார்கள்.ஐம்பதுபேரும் உறவினர்களே.எல்லோரும் கலந்து கலந்து வேறு வேறு விளைகளுக்குள் இருந்தார்கள்.பெரும்பாலான ஊர்கள் ஐம்பது குடும்பகளால் ஆனதே.எண்ணி எண்ணிச் செய்வதல்ல இது என்றாலும் இப்படித்தான் இருந்தார்கள்.ஊர்குடிமகன்கள் குடும்பமும் இவர்களுடனேயே தங்கியிருந்தது.எல்லா ஊர்களிலும் இவவாறே நிலைமை.சாஸ்தாங்கோயில் விளையின் அருகாமை கிராமங்களான தெற்குத் தாமரை குளமும் இப்படி ஐம்பது குடும்பங்களால் ஆனது.முகிலங்குடியிருப்பும் இவ்வாறே.ஐம்பது என்கிற எண்ணிக்கையில் சற்றே அதிகமாக பத்தோ பதினைந்தோ கூடுதலான கிராமங்களோ ,குறைந்த கிராமங்களோ இருந்தன.ஈச்சன் விளை சற்றே குறைந்த கிராமம்.முப்பது குடும்பங்களுக்குள் இருக்கலாம்.அகஸ்தீஸ்வரம் சற்றே பெரியது.அறுபத்தைந்து அல்லது ஏழுபது குடும்பங்கள் இருக்கும்.தெருவெல்லாம் கிடையாது.எல்லோருமே விளைகளுள் கலந்தே இருந்தார்கள்.கலந்து என்றால் ஒவ்வொரு குடும்பமும் அண்ணன் தம்பிகள் சகிதம் ஒவ்வொரு தோப்புகளுக்குள்ளும் தனித்திருந்தார்கள்.வெளியில் இருந்து ஊருக்குள் அன்னியராக நுழையும் ஒருவர்;அவர்கள் சேர்ந்திருப்பதாக நினைத்து அணுகினால் நெருங்குகையில் அப்படியில்லையோ என்று பிரேமை உண்டாகும்.தனித்திருகிறார்கள் என நினைத்து அணுகினால் அவர்கள் சேர்ந்திருகிறார்கள் என்பது கொஞ்ச நேரத்தில் தெளிவாகும்.

சுற்றிச் சுற்றி சுடலைகள்.வடக்கே சுடலை தெற்கே சுடலை.கிழக்கே சுடலை.மேற்கே சுடலை.வடக்குக்கும் கிழக்கிற்கும் இடையே சுடலை.கிழக்கிற்கும் தெற்குக்கும் இடையே சுடலை.தெற்கிற்கும் மேற்கிற்கும் இடையே சுடலை.மேற்கிற்கும் வடக்கிற்கும் இடையே சுடலை .எண் திசைச் சுடலைகள்.

ஏதோவொரு விதத்தில் சாஸ்தாங்கோயில் விளையில் மையமாக வெயிலாளும் பொன்னுவும் இருந்தார்கள்.அவர்களை நோக்கி உறவினர்கள் ஒன்று கூடினார்கள்.அவர்களிடம் கேட்டு கூடியவர்கள் விடைபெற்றார்கள்.பொன்னு அனைவரையும் ஆதரிப்பவராகவும் ,அணைத்துக் கொள்பவராகவும் இருந்தார்.அவர் அனுபவத்தில் இருந்து பெற்றவற்றைப் பிறருக்குச் சொன்னார்.சன்சலம் அற்றவர்.வைராக்கியம் நிறைந்தவர்.கோபமில்லாதவர்.எண்திசைச் சுடலைகளுக்கு மத்தியில் இப்படியொருவர் இருப்பதே அதிசயம் தானே இல்லையா?

வெயிலாள் முற்றத்தில் இருந்தவர்களுக்கு சுக்கும் கருப்பட்டியும் கலந்த சூடான குடி நீர் நள்ளிரவு வரையில் தொடர்ந்து வந்தது.கருப்பில் அழகான இளம்பெண்கள் அதனை தயாரித்துக் கொடுத்தார்கள்.காதுகள் வடிக்கப்பட்டு சிறிய தங்க ஆபரணங்களை அவர்கள் அதில் அணிந்திருந்தார்கள்.கைத்தறிச் சேலைகளால் அவர்கள் மார்புகள் சுற்றி கட்டபட்டிருந்தன. விடிலியில் வென் நீர் அடுப்பு புகைந்து கொண்டே இருந்தது.அந்த புகை நாற்றம் நள்ளிரவில் பெரும் அமைதியை அசதியால் நிரப்பியது.

விடியலில் வைத்திச்சி சொன்னது போலவே ;வெயிலாள் இறுகிக் கிடந்த ஊரின் மேலே வலித்துடிப்பில் கத்தத் தொடங்கினாள்.அதனைத் தொடர்ந்து வெயிலாள் ஏற்கனவே மனதில் முடிசூடும் பெருமாள் என்று பெயர் நியமித்திருந்த குழந்தை வீல்லென்ற்று அழுதது.அதன் முதல் சத்தம் அன்றைய புலரி வெளியில் அலையலையாகப் பரவி விரிந்தது.

இறுக்கம் தளர்வுற்ற அனைவரும் ஊரில் சமனிலைக்கு வந்தார்கள்.அவர்கள் மீது படிந்திருந்த கனத்த இறுக்கமான நள்ளிரவு அகன்றது

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1