அய்யா வைகுண்டர் இதிகாசம் -15 முத்தாரம்மன் கோயில் வகையறா
அய்யா வைகுண்டர் இதிகாசம் -15
முத்தாரம்மன் கோயில் வகையறா-1
குமரிமாவட்ட நாடார்கள் முத்தாரம்மன் கோயில்கள் வழியாகவே ஊர் நிர்வாகம் என்கிற அமைப்பைக் கண்டடைந்தார்கள்.ஏகதேசமாக ஊர் நிர்வாகமும் முத்தாரம்மன் வழிபாடும் ஒரே சமயத்தில் நாடார்களிடம் தோற்றம் கொண்டவை.எதுவானாலும் ஊர் கூடி முடிவெடுப்பது என்கிற முறை உருவானது.ஊர் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்று ஆனது.தனிமுடிவுகளுக்கும் கூடி எடுக்கிற முடிவுகளுக்கும் அதிசயயிக்கத் தக்கவிததில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டென்பது எகதேசம் அனைத்து நாடார்களும் அறிந்து வைத்திருக்கும் ரகசியம்.வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நாட்டாமை முறைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.ஒருவிதத்தில் சொன்னால் நாட்டாமை முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு இது என்று சொல்லலாம்.பணம் ,அதிகாரம் போன்றவற்றின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பபடி ஊர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தொல்குடிச் சடங்குகள் மட்டுமே ஒரு சமுகத்திற்கு போதுமானதல்ல என்கிற கூட்டுணர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்திற்குள் நாடார்கள் ஊர் அம்மன் கோயில்கள் வாயிலாகவே கடந்து வந்து சேர்ந்தார்கள்.தொல்குடிச் சடங்குகளின் தொடர்ச்சியாக ,அதனைக் கைவிடாமலும் அதே சமயத்தில் சைவ உணவு வழிபாடாகவும் இது அமைந்தது.தொல்குடிச் சடங்குகளால் மட்டுமே தங்களைக் காத்துக் கொள்ளுதல் இயலாது என்பதைக் கண்கூடாக அறிந்து கொண்ட பின்னரே அம்மன் வழிபாடு நாடார்களிடம் தன்னெழுச்சியாக உருவானது.அம்மன் கோயில்களில் பூசை செய்வதற்கென்று புரோகிதர்கள் யாரும் கிடையாது.அம்மன் வழிபாடு என்பது சமுகச் சடங்குகளுக்குரியது .ஊர் நிர்வாகம் ஒன்று கூடவும்,ஒருமித்த கருத்தை,செயலை உருவாக்கும் நிமித்தமானது.
ஏராளம் அம்மன் ஆலயங்கள்.நுட்பமான வேலைப்பாடுகள் ,சுவரோவியங்கள் கொண்ட அம்மன் ஆலயங்கள் என குமரிமாவட்டம் முழுவதிலும் தோற்றம் கண்டன.பல நூறாண்டுகளாக திருவிதாகூர் அரசு உருவாக்கிய ஆலயங்களைக் காட்டிலும் ,வெறும் நூறு ஆண்டிற்குள் உருவான அம்மன் ஆலயங்கள் அதிகமானவை. சுவரோவியங்களின் வண்ணங்களுக்கும் ,வண்ணங்கள் குன்றாதிருக்கவும் முலிகைச் சாறு பயன்படுத்தபட்டது. ஊர் வைத்தியர்கள் இந்த சாறு செய்து தந்தார்கள்.ஆசாரிகள்,விவசாயிகள்,வைத்தியர்கள்,கொத்தனார்கள்,வில்லிசைக் கலைஞர்கள்,மாட்டுவண்டி ஒட்டுனர்கள்,சிறு வியாபாரிகள் என்று சமுகம் விரிவடைந்தது.
காட்டை வெட்டிச் செய்த விவசாயம் ஒருபுறம் .ஒட்டுவீடுகள் கட்டிக் கொள்ள அனுமதிகளின் தொடர்ச்சியாக புதிதாக ஏராளமான நாலுகெட்டு வீடுகள் வந்தன.காடு திருத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு தோப்புகளுக்கு மத்தியிலும் ஒரு பெரிய நாலுகெட்டு வீடு உருவாயிற்று.தோப்புகள் அதற்கு மத்தியில் ஓட்டு வீடுகள் .நாடார்கள் குடியிருப்புகள் எங்குமே நகரக் குடியிருப்புகளின் வடிவம் கொண்டவை அல்ல.இன்றுவரையில் இல்லை.அவை தோப்புகள்,தோப்புகளாக அமைந்துள்ளவை.
வீட்டிள்ளவர்கள் போக அன்னியர்கள் ,உறவினர்கள் இருபதுபேருக்கும் அதிகமாக தங்கும் வண்ணம் அமைக்கபட்ட வீடுகள் இவை.பல வீடுகளில் போர்தொழில் ரகசியமாக நடைபெறுவது போல ஜன நடமாட்டம். சொந்தமாக கிணறுகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது,அதில் எப்போதும் யாரேனும் ஒருவர் நீரிறைத்துக் கொண்டு நிற்கும் சப்தம்.குளிக்கும், நீர் ஒழுகிப் பாயும் அனக்கங்கள்.நள்ளிரவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இந்த நீரிறைக்கும் சப்தம் இல்லாமலாகும்.காலையில் அதிபுலரியிலேயே மீண்டும் நீரிறைக்கும் சப்தம் மெதுவாக எழும்பத் தொடங்கி விரைவு படத் தொடங்கும்.இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு வீட்டில் சதா இயங்கும் ஏற்றமிறைக்கும் துலாக் கிணறுகள் இருந்தன.இந்து நாடார்கள் வீடுகளில் திண்ணைகள் இல்லாத வீடுகள் குறைவு.மாறாக புதிதாக உருவான கிறிஸ்தவர்கள் வீடுகளில் திண்ணைகள் அரிது.அவை முன்பக்கமிருந்தே மூடியிருப்பது போன்ற அமைப்பு கொண்டது.வீட்டை வைத்தே அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.கிறிஸ்தவர்கள் ஆரம்பம் முதலே ஒரு ரகசிய சமுகமாகவே இருந்துவரத் தொடங்கினார்கள்.
வீடுகள் உருவானபிறகு முன்னைப் போல மாடம்பி மாரும்,நாயர் படைகளும் வீடு கேறி வர முடியவில்லை.வீடு என்பது மிக முக்கியமானது,அதுவொரு அதிகாரம்,எழுச்சி என்கிற எண்ணம் இப்போதுவரையில் நாடார்களிடம் இருக்கிறது.அது இப்போது உருவான எண்ணமில்லை.எப்போதோ சில தலைமுறைகளுக்கு முன்பாக திடீர்திடீரென கொளுத்தப்பட்ட வடலிக்கூரைகளின் தீஜுவாலைகளின் நிழலில் இருந்து உதயமானது.சற்று தளர்வு ஏற்பட்ட மாத்திரத்திலேயே காத்திருந்தவர்களைப் போல ,தீயாகக் காத்திருந்தவர்களைப் போல நாடார்கள் எல்லாமே செய்தார்கள்.
அவசரமாக பெரிய வீடுகளைக் கட்டியமர்ந்தார்கள்,தோப்புகளில் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக் கொண்டார்கள்.ஊர் கூடி அன்னம் சமைத்துண்டார்கள்.வணிக நெறிகளுக்குள் நுழைந்தார்கள்.முதலில் தாங்கள் உண்டாக்கிய பொருட்களை விற்கத் தொடங்கினார்கள்.உண்டாகாதவற்றை அதன் மூலம் வாங்கத் தொடங்கினார்கள்.அத்தனை வழிதடங்களிலும் ஆதிக்கத்தை உடைத்தார்கள்,அதனை இயல்பெனக் கொண்டார்கள்.நவீனமடைந்தார்கள் சோர்விலா உழைப்பின் மூலமாக.
இத்தனைக்கும் காடுகளுக்குள்ளிருந்து வெளிவந்தவர்கள்.வீடு கட்டிக் கொள்வதற்காகவே ஒருவன் வாழ் நாளை பலி கொடுக்கிறான்.அடுத்தவன் அதில் அமர்ந்து கல்வி கற்கிறான்.எதுவெல்லாம் இயலாத துறைகள் என்கிறார்களோ அனைத்தையும் வென்றெடுத்து தன் மூதாதைகளின் பலிபீடத்தில் ரத்தம் வைக்கிறான்.
[ தொடரும் ]
Comments
Post a Comment