அய்யா வைகுண்டர் இதிகாசம் 12 கன்னிக்கு வைத்துக் கொடுத்தல்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 12

கன்னிக்கு வைத்துக் கொடுத்தல்


இதுதான் இந்த சடங்கின் பெயரே.வைத்துக் கொடுப்பது எதற்காக ?

பொதுவாக இங்கே மூதாதையர் சடங்கு , முன்னோர் சடங்கு போன்றவை தனித்து இல்லை.குழிவாசலுக்குச் சென்று படைப்பதும் குறைவே.குழிவாசல் என்பது அமர மேடை.ஒன்றிரண்டு ஆண்டுகள் செய்வார்கள் பிறகு விட்டு விடுவார்கள்.பொதுவாகவே நீத்தார்
நினைவு முதல் வருடத்தில் முள்முனை போல நின்று அறுத்துக் கொண்டிருக்கும்.அடுத்த வருடம் கடமை என்று ஆகும்.மூன்றாவது ஆண்டும் களித்தால், போதும் என்று தோன்றிவிடும்.அதன் பிறகு ஆள்சேரமாட்டார்கள்.அண்ணன்,தம்பிகளாக இருந்தால் கூட.அக்கா ,தங்கைகளாக இருந்தால் கூட.வலிந்து ஆள் சேர்க்க முயற்சித்தால் வழக்குண்டாகும். ஒரு சராசரி மறைவிற்கு மூன்று ஆண்டுகள் என்பதே அதிகம்.

இடைமரணங்கள் அப்படியில்லை.நீடிக்கும்.மறைந்தவருக்கு சின்ன வயதுக் குழந்தைகள் இருந்தால் கசக்கும் போதெல்லாம் மறைந்தவர்கள் கண்ணீராய் திரண்டு நிற்பார்கள்.அவர்கள் பெரியவர்களாவது வரையில் நீடிப்பார்கள்.சுற்றி வருவார்கள்.ஆனால் அதனை நாமாகவே தடுத்து நிறுத்திக் கொள்வதே நல்லது.சிலர் பெரிய புகைப்படங்களாக வீட்டில் வைத்து நெய்யூற்றிக் கொண்டிருப்பார்கள்.செய்யக்கூடாது.

என்னுடைய அம்மாவின் நினைவை புகைப்படமாக கைகளிலும் அறைப் படங்களாகவும் குழந்தை தொட்டு வைத்துக் கொண்டிருந்தேன்.அம்மாவின் புகைப்படத்தை காணும் போதெல்லாம் அகக்கொந்தளிப்பு அதிகமாகி சீரழிவே மிஞ்சும்.நான் அம்மாவின் படத்தைக் கைவிடும்போது எனக்கு நாற்பது வயது ஆகிவிட்டது.நான் தெருக்களில் நடந்து போகும் போது எனது தோளின் மீது ஏறி வந்து கொண்டிருப்பாள்.அவள் மறைந்து பல காலம் சென்ற பின்னரும் அவள் தொடர்ந்து என்னை; அவளைத் தூக்கிச் சுமக்கும் வாகனமாகவே பயன்படுத்தியிருக்கிறாள்.நாற்பது வயதில் ஏதோ உதித்தது.கையில் கொண்டலைந்த அவளுடைய அத்தனை புகைப்படங்களையும் கைவிட்டேன்.இப்போது கொந்தளிப்படங்கிவளாக,முதிர்ந்தவளாக ,பக்குவப்பட்டவளாக ,என் குழந்தைகளுக்கு என் மூலம் தானே அமுதம் ஊட்டுபவளாக ,பராதிகள் சொல்லி அல்லல் படாதவளாக மாறியிருக்கிறாள்.

புகைப்படங்களை அப்புறப்படுத்தியதில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்தன.அவள் முகம் அச்சு அசலாக எனக்கு மனதிலேயே இருக்கிறது என்பது முதலாவதாக தெளிவு பட்டது..இரண்டாவதாக அவள் என்னுள் அமைதி அடைந்தாள்.புகைப்படங்களைத் தூக்கிச் சுமந்து நானே அவளை நெடு நாட்கள் அமைதியடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.மிகபெரிய இழப்புகளின் நினைவை எவ்வளவு விரைவாக பக்குவபடுத்திக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவாக தெளிவு பெறுகிறோம்.இப்போது யார் தோளிலேறி எந்த பிணம் வந்தாலும் என் கண்களுக்குத் தெரிந்து விடுகிறது.வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்.

அய்யா வைகுண்டரின் அய்யாவழியில் அமர மேடை கட்டியெழுப்பக் கூடாது.பொதுவாகவே நினைவைப் போற்ற வேண்டுமாயின் அந்த நினைவிற்குரியவன் வெறும் சராசரியாக இருந்தால் பற்றாது.குடும்பத்திற்கு வேண்டுமே,பிள்ளைகள் பேரர்களுக்கு வேண்டுமே என்றால் பொதுவாக தாய்மை,தந்தைமை என்று இருக்கிறதே அது வணங்கப்பட்டால் போதும்.அதுவே மேலான நிறைவு உண்டாக்கும்.தனித்து என்னுடைய அப்பன் ,என்னுடைய அம்மை என்று செல்லுகிறபோது உன் அம்மை உனக்கு அன்னையாகவும் பிறருக்கு அரக்கியாகவும் இருந்திருக்க கூடும்.உன்னுடைய அப்பன் உனக்கு அப்பனாகவும் தெருவிற்குப் பொறுக்கியாகவும் இருந்திருக்கக் கூடும்.உனக்கு அப்பனாகவும் உன்னுடைய தம்பிக்கு சித்தப்பனாகவும் நின்று செய்துரோகம் இளைத்திருக்கலாம்,யார் கண்டார்கள். ?இரண்டையும் சேர்த்து அள்ளிக் கொள்ள வேண்டும்.உனக்கு சம்மதமாயின் சரிதான்.

வாழும்காலத்தில் இல்லாத இம்சையெல்லாம் கொடுத்து விட்டு வருடம்தோறும் தவறாமல் திதிக் கடன் மட்டும் செய்து கொண்டிருந்தால் ,ஒவ்வொரு வருடமும் நினைவு தோன்றி உன்னை அடிப்பதற்கு அல்லவா அவனுக்கு மனமுண்டாகும்.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால் எளிய மக்கள் நீத்தார் கடமையை வெற்றுச் சடங்காக கையாள்வதில்லை.எப்போது நினைவு தோன்றுகிறதோ அப்போது செய்கிறார்கள்,அப்போதும் வழக்கமாக மரித்தவர்களுக்குச் செய்வதில்லை.ஏதேனும் விஷேசம் அதில் ஒட்டியிருக்கும் காரியங்களில் மட்டுமே செய்கிறார்கள்.கன்னிக்கு வைத்துக் கொடுத்தல் என்பது ஒருவகையில் நீத்தார் கடன் போற்றுவதே.

கன்னிக்கு வைப்பதில்; குடும்பத்தில் அகால மரணமடைந்தவர்கள்,குறைய காலம் பேய்களுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.அவர்கள் அமைதியடையாமல் இருப்பார்கள்.சொல்லாக நின்று கொண்டிருப்பார்கள்.வாழ்க்கையில் ஒரு இடர் ஏற்படும்போது அவர்கள் பிரிந்து சென்று வெளியில் அலையும் ஒரு சொல்லாக நிற்பதை நீங்கள் பொருட்படுத்தாமலிருக்கிறீர்கள் என்று ஆகும்.அந்த பிரிந்து சென்ற சொல்லை எடுத்து உங்கள் அகம் ஒடுக்குவதே கன்னிக்கு வைத்துக் கொடுப்பது.கொஞ்சம் கொடுப்பது போல பாவனை செய்து விட்டு இப்போதும் அதிகமாக எடுக்கவே செய்கிறோம்.அவர்கள் வெளியில் நிற்பதால் வேற்று நபர்கள் தீய வழிகளுக்காக அவர்களைப் பயன்படுத்தாமலிருக்கவே இந்த சடங்கு.அருகி வருகிற அழகான சடங்குகளில் இதுவும் ஒன்று.

இந்த சடங்கினை நிகழ்த்துவதற்கு புரோகிதர்கள் வேண்டுமென்பதில்லை.சடங்கை அப்படியே குலையாமல் நிகழ்த்த அறிந்திருந்த ஒருவரே மிகவும் அழகாக செய்து படைத்து விட முடியும். முன்வாசல் ,பின்வாசல் என இரண்டுவாசல்கள் கன்னிக்கு வைத்துக் கொடுக்கும் வீட்டில் இருக்க வேண்டும்.நமக்கு வீட்டிற்குள் வர வேண்டிய தேவதை அது ஆணாகவோ ,பெண்ணாகவோ ,மழலையாகவோ எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம்.முன்வாசலில் இருந்து கன்னிமுலை வரைக்குமாக ஒரு நூல் பந்து இணைக்கப்பட்டு,கன்னி முலையில் படையல் வைக்க வேண்டும்.பழம் ,பலகாரங்கள்,அச்சுமுறுக்கு,கைமுறுக்கு,முந்திரிக் கொத்து,வெற்றிலை பாக்கு,எலுமிச்சை கனி இப்படி படையல் நிரம்ப வேண்டும்.சோறு படைக்கப்படுதல் வேண்டும்.கன்னிக்கு ஒரு வீட்டில் படையல் கொடுக்கிறார்கள் எனில் பண்டங்களால் ஊரே மணக்கும்.ஆனால் மிக நெருங்கிய உற்வினர்கள் தவிர பிறர் இந்த மணம் உணரக் கூடாது என்பதால் நள்ளிரவே உகந்த நேரம். கையால் பண்டங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டுமே அல்லாது,கடைகளில் வாங்கி அடுக்கக் கூடாது.

இந்தச் சடங்கில் வடித்த சோற்றை அப்படியே சூட்டோடு எடுத்துப் படைக்கும் போது மணம் தேவதையை ஈர்த்து இழுக்கும்.தேவதை பேய்களிடம் "பார்த்தீர்களா எங்கள் வீட்டில் எனக்குப் படையல் இடுகிறார்கள்.நான் சென்று திரும்ப அனுமதியுங்கள் என்று உத்தரவு கேட்கும்.அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.எங்களையும் அழைத்துச் செல்வதாக இருந்தால் அனுமதிக்கிறோம் என்பார்கள் அவர்கள்.இதற்கெனவே முன்வாசலில் எளிய விருந்துண்டு.பேய்கள் அப்போதும் மனம் இரங்குவதில்லை.அவர்கள் உன்னை அழைத்துத் தாளிடவே படையல் போடுகிறார்கள் என்று எச்சரிக்கை செய்வார்கள்.ஆனால் மணம் பொறுக்காத தேவதை வர முன்னகரும்.பேய்கள் பின்னால் வந்து கொண்டிருப்பார்கள்.தேவதையே உரிமையுடன் முன்னேறி வரும் என்பதால்,சடங்கை நிகழ்த்துபவர்,தேவதை வீட்டினுள் காலடி எடுத்து வைக்கவும் நூலினை அறுத்து விட்டு பின்வாசல் வழியே வீட்டினுள் நுழைந்து வருவார்.அகல் ஏற்றி பூசை தொடங்கும்.இது பூஜை கிடையாது பூசை.

வந்த தேவதை அதன் பிறகு வெளியில் செல்லாது.பேய்கள் முன்கதவு அடைக்கப் பட்டதும் வெளியேறுகின்றன.

தொடரும் ...

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1