அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3

அய்யா வைகுண்டர் இதிகாசம்

முன்னொட்டு 3


தெய்வங்கள் நமக்குள் மிகவும் நுட்பமான இடத்தில் இருக்கின்றன.நாம் எப்போது என்ன நினைப்போம் என்பதை அவை அறிந்து கொள்ளுகின்றன.சிணுங்கினால் அவை சென்றுவிடும்.ஓங்கி மிதித்து அதிர்ந்தால் விலகும்.பிறர் ஒடுங்கச் சத்தமிட்டால் ஒடுங்கும் இடம் அது.பத்து ஆண்டுகள் கழித்து இவன் நம்மை வைவான், என்றால் பத்து வருடங்களுக்கு முன்பே அவை நம்மில் விலகத் தொடங்கும்..அதற்காக எதையும் செய்யாமலோ கொள்ளாமலோ இருப்பதில்லை.வழக்கம் போல எல்லாம் நடக்கும்.நடக்க வேண்டியவை அத்தனையும் நடக்கும்.அது விரோதிப்பதில்லை.வஞ்சிப்பதில்லை.அது நமக்குள்ளும் .ஒவ்வொருவருக்குள்ளும்,என்னுடைய தெய்வம் எனக்குள்ளிருப்பதைப் போல உன்னுடைய தெய்வம் உனக்குள்ளிருக்கிறது.அவரவர்தான் ஏதேனும் துணையோடு எப்படியேனும் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.அதனை தெய்வங்கள் என எடுத்துக் கொண்டாலும் சரிதான்,தெய்வம் என்று எடுத்துக் கொண்டாலும் சரிதான்.எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் சரிதான்.ஒன்றென்று கொண்டால் ஒருமைக்கு எளிமை.பலது எனும் போது பழக்கக் கடினம்.பலதென்று கொண்டு பழக்கத் தெரிந்திருந்தால் அதிலும் பாதகம் ஏதுமில்லை.குரு என்றாலும் திரு என்றாலும் பரம்பொருள் என்றாலும் ஒன்றே.

எப்படியிருந்தாலும் உள்ளத்தில்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.கண்ணாடியின் முன்பாக ஒரு சுடரை பற்றவைப்பது என்பது உனக்குள் ஒரு சுடரை ஏற்றிக் கொள்வதே.வெளியில் உருவகமாக பற்ற வைத்துக் காட்டப்படுவதை உள்ளத்தில் நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.ஏற்றி கொள்ள முடிந்தால் எது ஏற்றப் பட்டதோ அது பிரபஞ்சம் முழுதும் எற்றப்பட்டிருக்கிறது என்பதுப் விளங்கும்.உண்மை இருக்குமாயின் அது நம்மை நெருங்கும்.

என்னுடைய பாதி வயது வரையில் அய்யாவை அலைந்து கொண்டே இருந்தேன்.வேறு வேறு இடங்களில் வைத்து தவறுதலாகப் புரிந்து கொள்ள முயன்றேன் . பாதி வயதுக்கு மேலே சுற்றின் முடிவில் வந்து சேர்ந்தேன்.


அலைந்து கொண்டிருப்பது என்பது பொய்யாக இருப்பது.பொய்யில் நின்றவண்ணம் அவரை அளக்க முற்படுவது...தெளிவிற்கு வெகுதூரத்தில் நின்றவாறு ஏங்குவது..தெளிவிற்கு  ஏங்குவது.மாணிக்கவாசகர்  நான் பாவிக்கத்தான் செய்தேன்,உன்னை எண்ணியெண்ணி பாவித்தேன்,அறிந்தேனில்லை ஆனால் நீயோ  அடியவர்களுக்கு அளிக்கு ம் நற்பேறுகளை அள்ளித் தந்தாய்..உன்னை எப்படி வியப்பது என்கிறார்.தெளிவிற்கு ஏக்கம் இல்லாமல் புரிகிற பாவனைகள் பொய்யிலும் சேர்த்தியில்லை.

###

என்னுடைய குடும்பம் அய்யாவழி குடும்பம்.அய்யாவழிக் குடும்பமென்றால் அய்யா வைகுண்டரைப் பின்பற்றுகிற குடும்பம்.எங்களுக்கு அய்யா வைகுண்டர் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம்.என்னுடைய தந்தையாரின் தாய்,வைகுண்டசாமியின் தாயார் வெயிலாள் அம்மையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அய்யா வைகுண்டர் அருளிய வாசகங்களின் புனித ஓசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் அப்பையா அதாவது அப்பாவின் தகப்பனார் சொந்தம் உறவு என்பதையும் தாண்டி அய்யா வைகுண்டரின் ரத்த வழி வாரிசு பால கிருஷ்ணன் நாடாரின் நெருங்கிய நண்பர்.அவர்கள் இருவரும் இணைந்தே இப்போது வரையில் செவ்வனே சுமார் இரு நூறு ஆண்டுகளாக அய்யா விதித்த தர்மங்களை எங்கள் குடும்ப கோயிலாகிய நிழ்ற் தாங்கல் செய்து வருகிறது.அதற்கென நிலங்களை தன் சுய சொத்திலிருந்து ஒதுக்கி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் அப்பையா..சொத்து யார் கையில் உளதோ அவர்கள் பிறரை அரவணைத்து தர்மங்களைக் கொண்டு செலுத்த வேண்டும்.நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது குறையோன்றும் இல்லை.கடற்கரைப் பக்கமாகவே அவராண்ட வயல்கள்,நஞ்சைகள் அதற்கென ஒதுக்கப்பட்டவை.

எங்களுக்கென்று தனிச் சின்னங்கள் உண்டு.சிறுவயதில் அதன் பொருட்டு பள்ளிகளில் உயர்சாதி ஆசிரியர்களால் சிரிக்கப்படுவோம்.பரிகசிக்கப் படுவோம்.இந்த பரிகாசம் அய்யாவிடமிருந்தே தொடங்கியது.அய்யாவை பரிகசித்தார்கள்.பழித்தார்கள்.கிறிஸ்தவப் பள்ளிகள் எனில் கிறிஸ்தவ ஆசிரியைகள் வாய் பொத்தி சிரிப்பார்கள் எங்கள் தனிச் சின்னங்களை.தாழ்வுணர்ச்சி தூண்டப்படாமல் ஒருபோதும் வீடு திரும்பியதில்லை.பெரியவர்களும் சின்னங்களை மறைக்கவோ,சிறிதாக்கிக் கொள்ளவோ முயற்சிப்பதுண்டு

இன்று மாதம் தோறும் முதல்கிழமைகளில் சாமிதோப்பு சென்று காண்பவர்கள் ஆச்சரியம் கொள்கிறார்கள்.அவ்வளவு கூட்டம்.அவ்வளவு பணிவிடைகள்,அன்னதானங்கள்.போதும் என்கிற அளவிற்கு அமர்ந்து பத்தாயிரம்பேர் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.ஆண்டுக்கு ஒருமுறை அய்யா வைகுண்டர் பிறந்த நாள் விழாவில் இதுவே லட்சக்கணக்கில் ஆகிவிடும்.மதுரைக்கு இந்தப் பக்கம் மாதம் தோறும் இவ்வளவு மக்கள் கூடும்

அய்யா வழியில் இருந்து இப்போது நிறைய பேர் பெருவணிகர்களாக,சமுக அந்தஸ்த்து மிக்க பதவிகளில் இருப்பவர்களாக ,செல்வாக்கானவர்களாக உருவாகிவிட்டார்கள்.இது எளிய காரியம் ஒன்றும் இல்லை. இங்கே எந்த ஏற்பும் கெஞ்சி பெறப்பட்டதில்லை.அனைத்து காரியங்களும் அவரால் உருவானவை.


[ தொடரும் ]

Comments

  1. தானத்தில் உயர்ந்தது அன்னதானம். பசிப்பிணி போக்குவது உயர்ந்த தருமம். அய்யா வரலாற்றினை அறிய ஆவலாய் உள்ளோம்.

    ReplyDelete
  2. தானத்தில் உயர்ந்தது அன்னதானம். பசிப்பிணி போக்குவது உயர்ந்த தருமம். அய்யா வரலாற்றினை அறிய ஆவலாய் உள்ளோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்