அய்யா வைகுண்டர் இதிகாசம் -21 அய்யா மனிதப் பிறப்பு
அய்யா வைகுண்டர் இதிகாசம் -21
அய்யா மனிதப் பிறப்பு
1
வெயிலாள் அம்மை முந்தின நாளே நிறைய புதிய ஒலிகளைக் கேட்டாள்.அணிபிள்ளைகள் காலை முதலே சத்தமிட்டுக் கொண்டிருந்தன.பறவை கீசல் ஒலிகள் .அவை இன்றுதான் முதல் முதலாகக் கேட்பவை போன்று புத்தம் புதியவையாக இருந்தன.பக்கத்து மரங்களிலிருந்து வானளாவ அவை கீசிக் கொண்டிருந்தன.மதுரம் தொழிந்து பரவுவது போல
குடிலை விட்டு வெளியேறி வந்தாள் இந்த புள்கள் மட்டும்தான் இந்த முழு பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறதோ என்று தன்னையே விசாரித்துக் கொண்டாள்.
" அங்கன என்னட்டி செய்யுக..வெயிலாளின் அம்மையின் குரல் உள்ளிருந்து கேட்டது.அவள் ஒருவாரமாக இங்கிருந்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.ஒரு முழு ஆளுக்கு அடுக்களை வேலையுள்ள குடில் அவளுடையது.
இவிய எங்க இருக்காவன்னு பாக்கேன்.இங்கன தான் நின்னாவ ,நின்னது போல இருக்கும்.காணாது அவியள ,திரும்பாமலே பதில் சொன்னாள் வெயிலாள்.மூத்தவன் திரு நாம மணி.அய்யாவு என்று அழைப்பாள்.எல்லோரும் அய்யாவு என்றே அழைத்தார்கள் .வைப்பது ஒருபெயராகவும் அழைப்பது வேரொரு பெயராகவும் பழக்கமாகியிருந்தது.இல்லையெனில் அரசில் வரிகேட்பார்கள்.வரி கேட்டு அரசபடைகள் வருவதையே எல்லோரும் குத்திமூட்டாக உண்ர்ந்தார்கள்.அப்படி வராத வகையில் நடந்து கொள்ளவே விரும்பினார்கள்.அய்யாவு முற்றத்தில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.கண்ணாமூச்சி காலை நேர களிப்பு விளையாட்டு.பெண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் பெயரில்லை.பத்து பெண் பிள்ளைகள் விளையாடினால் எட்டிற்கு நாடாச்சி,மீதம் உள்ள ஒன்றுக்கு தங்க நாடாச்சி,மற்றது செல்ல நாடாச்சி அவ்வளவுதான்.வெயிலாள் விளையில் பருவம் எய்துவதுவரையில் பெண்குழந்தைகள் ஆடினார்கள்.ஏதேனும் பெற்றோர்கள் "ஏட்டி தங்க
நாடாச்சி எங்கட்டி கிடந்து கிடந்து குதியாட்டம் போடுக என்று ஓங்கிக் கத்தினால்,நான் இருகம்ல என்று உரக்க பதில் சொல்வாள் வெயிலாள்.
குடிலிலிருந்து பார்த்தாலே அந்த இடம் முச்சூடும் தெரிந்தது.புன்னை நிழல் தரையில் உறைந்து அப்பியிருக்கும்.பிற நிழல்களைக் காட்டிலும் புன்னை நிழல் கருப்பு அதிகம் போல அவளுக்குத் தோன்றும்.அதற்காகவே பலமுறை அவள் இப்படி நின்று பார்ப்பதுண்டு.மாமரங்களின் நிழல் வழியே கிழக்கே சின்ன முடுக்கு வழி.அதன் வழியே களிமாருக்கு போகிறவர்களும் வருகிறவர்களுமாக இருப்பார்கள்.வடக்குப் பாதையில் நடந்து நடந்து பூலாங்குளத்திற்குச் செல்வார்கள்.பெண்கள் அந்தி அடைகையில் குளித்துத் திரும்புவார்கள்.இருளில் அந்த பாதையில் ஈரத்துடன் திரும்புவது அந்த பாதையே ஈரம் கண்டு மழை பெய்து ஓய்ந்தது போலிருக்கும்.அதற்கும் முன்பாக ஆண்கள் திரும்பி இருப்பார்.களிமாரில் முங்கி எழுபவர்கள் பூலாங்குளத்திற்குச் செல்வதில்லை.அந்தியடங்க வெயிலாள் அவர்கள் திரும்புவதைப் பார்ப்பாள்.இருள் உருவங்களாக அவர்கள் திரும்புவதைக் காண திகைப்பாக இருக்கும்.ஆனால் அந்த இருளிலும் சத்தத்தைக் கொண்டும்,அசைவைக் கண்டும் ,நீர் ஒழுகல் விதங்கண்டும் யார் யார் என்று தெளிவாக இனம் கண்டு விடுவாள்.
பார்ப்பவர்கள் "எதுக்கு பிள்ளே இப்படி நிக்கிய .." என்று கேட்பார்கள்.
அவிய வாராவுளான்னு பாக்கியேன் என்பாள்.பதிலுக்கு .ஆனால் அந்த தோப்பு முழுவதும் நிரம்பியிருந்த மரங்களைப் பார்ப்பது அவளுக்கு பிடிக்கும்.அது அவளுக்கு சீதனமாக வந்த நிலம்.பொன்னு நாடான் அதில் அவளுக்கு குடில் அமைத்துக் கொடுத்திருந்தார். பாதிவிளைக்கு அப்பால் பாதிவிளை பூவண்ட கோனாருக்குரியது.ஆனால் இரண்டு விளைகளிலுமே விருட்சங்கள் குறைவு.பனைகள் நின்றன.கலந்து நின்றன.ஆங்கொன்றும் இங்கொன்றுமாக.கண்ணுக்கெட்டிய தூரத்தில் மேற்கில் ஆண் பனைகள் வரிசையாக உண்டு.அவை நிற்பது எதற்காக என்றே அவளுக்குத் தோன்றும்.அவை பதனீர் தருவதில்லை.தரும் ஆனால் அதில் ஒரு பனையில் ஏறி வேலை செய்வதற்கு பத்து பனைகளில் ஏறிவிடலாம்.பதனீரும் சக்கையாக இருக்கும்.அதை காச்சி கருப்பட்டி எடுக்க நினைப்பது தடியங்காவில்
கருப்பட்டி உண்டாக்குவது போல .மீதம் நின்ற பனைகளில் இருந்து கொஞ்சம் பதனீர் கிடைத்தது.அவளுக்கு காணும் போதெல்லாம் ஐந்து பனைகளை அடையாளம் காண்பாள்.ஒன்றில் பதனீர் பசு மோரின் சுவை தெரிய இருக்கும்.ஒன்றில் லேசாக வேம்பின் கசப்பு காணும்.பரிபூரணத் தித்திப்பு ஒன்று.ஒரு பட்டைக்கு மேல் மறுபட்டைக்கு திகட்டும் மதுரம்.மாங்காய் சுவை மற்றொன்று.கடுவன் ஒன்று காரம்.
பொன்னு நாடார்தான் அவளுக்கு இந்த சுவையை தனித்து அறியச் செய்தார்.இப்படி பாருட்டி மோரு போல இருக்கா புள்ள ...இப்படி பாருட்டி மாங்கா போல இருக்கா..ஆமா அப்டியே தா இருக்கு..சின்னதுல இருந்து குடிக்கேன்.இப்பதான ருசி தெரிவு.ஆராஞ்சொன்னாதா ருசி தெரியும் போலிருக்கு..ருசி தெரிஞ்ச்சாதான பன உருவம் கண்ணுக்குத் தெரியும் என்றாள் அவள்.அதன் பிறகு
குடிலுக்கு வந்த பலருக்கும் பனையின் குறியும் ருசியும் சொல்லியிருக்கிறாள்
களிமார் பத்தில் உள்ள வயல்களின் வரப்பில் பனைகளே நின்றன.நிறைய பனைகள்.வெட்டி வயல்கள் திருத்தபடுவதற்கு முன்பே இருந்து வந்த பனைகள் அவை.வயது அதிகம்.தித்திப்பும் அதிகம்.அவற்றில் இருந்து நிறைய பதனீர் குடிலுக்கு வரும்.குடிலின் பின்புறத்தே பதனீர் காய்க்க அவளுக்கென்று பனையோலையால் செய்யபட்ட விடிலி இருந்தது.
காலையில் வழக்கமாக விடிலியடுப்புக்கு சருகு அள்ள கடவத்துடன் விளைக்குள் செல்வாள் ,மாஞ்சருகுகளை கடவம் நிறைப்பாள்.எப்படியும் பத்துப் பதினந்து கடவம் சருகுக்கும் மேல் ஆகும் கருப்பட்டி பக்குவம் எட்டுவதற்கு.பக்கத்துத் தோப்பில் காணாது என்றானால் வேறு விளைகளில் இருந்து அள்ளித் தருவதற்கு ஆட்கள் இருந்தார்கள்.
லே அய்யாவு அய்யா எங்கனு பாருல .நாவிடுச்சுக்கு சொல்லி வச்சா தேவல,புள்ள உள்ள குதிக்கிறதப் பாத்தா...வெளிய ஏறிக் குதிச்சிருவாம் போலிருக்கு..
உண்மையில் வெயிலாள் அய்யாவிடம் இதனைச் சொல்லவில்லை.யாருமறியாமல் மெல்லிய சப்தத்தில் தன்னிடம் தானே பேசிக் கொண்டாள்
[ தொடரும் ]
Comments
Post a Comment