அய்யா வைகுண்டர் இதிகாசம் -17 முத்தாரம்மன் கோயில் வகையறா-3

அய்யா வைகுண்டர் இதிகாசம் -17

முத்தாரம்மன் கோயில் வகையறா-3

பங்குனியில் கொடைவரும்.தென்பகுதி கோயில்கள் அத்தனையிலும் கொடை நடக்கும்.ஒன்று முடிந்தால் ஒன்று,ஒன்று முடிந்தால் ஒன்று என முத்தாரம்மை ஒரு நடையில் ஏறியிறங்கி மற்றொன்று என அலைந்து திரிவாள்.நான்கு குறைப்பிள்ளைகளைப் பெற்ற தாய்,நான்கின் நடைகளுக்கும் ஏறி இறங்குவது போல .சித்திரை வரையில் இது தொடரும்

முத்தாரம்மையிடம் தாய்மையே அதிகம்.பிற தன்மைகள் உண்டு.ஆனால் ஓங்கி நிற்பது தாய்மையே.தன் குழந்தையர்களின் பொருட்டு மன்னிப்பு கேட்கும் தாயின் அவஸ்தை நிரம்பியவள்.காப்பது மட்டுமே இலக்கு,எப்படியிருந்தாலும் காப்பதொன்றே குறி.உன் குழந்தையர் இன்னின்ன மாதிரி இருக்கிறார்களே ! நீ சொல்விளங்குவதில்லையா ?,என்று மஹா விஷ்ணுவே வந்து கேட்டாலும் என்ன செய்வது சாமி..குழந்தைகள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று இரஞ்சுவாள்.பெருந்தெய்வங்களுக்கும் ஒரு தாயின் உண்மையான இரஞ்சுதலுக்கு முன்பாகப் பேச்சில்லை.தாய்மை அவ்வளவு குணம் கொண்டது.

ஊரே கோடையில் சுட்டுக் கிடக்கும்.மங்கி இருள் சூழ்ந்து நெடு நேரம் ஆனபின்னாலும் கொதிக்கும்.மாலை வேளைக் குளங்கள் வென்னீர் குளியலுக்கு ஒப்பானவை.நள்ளிரவில் அனல்காற்று குறைந்து அதனால் இதம் உருவாகும் என்றாலும் காற்றின் அசைவே இராது.இப்படியான கோடையில் அவள் எல்லா ஊர் மக்களையும் அரவணைக்க வேண்டும்.அதனையும் நேருக்கு நேராக வந்து செய்ய வேண்டும்.தன்மை குறைவான ,குணக் கோளாறுகள் நிரம்பிய மக்களுக்கு தொண்டாற்றுவது எனில் அது எளிமையான காரியமாக இருக்க முடியுமா என்ன ?

முத்தாரம்மைக் கோட்டைகள் பெரும்பாலும் குளிர் அமைப்பு கொண்டவை.மர அளிகளின் பின்புறத்தே மூன்று பீடங்கள் கொண்டவள் அவள்.ஒருபக்கம் மாரியம்மை,மறுபுறம் மஹாவிஷ்ணு.பெருமாள் சாமி என்று அவர் அறியப்படுகிற ஊர்களும் இருக்கின்றன.இப்போது நேரடியாக அய்யா வைகுண்டசாமி  என்றே அறியப்படுகிற ஊர்களும் இருக்கின்றன.தவிர சுடலை ,செங்கிடாகாரன் என பலரும் இருப்பார்கள்.முத்தாரம்மன் கோயிலில் இசக்கி இல்லை.ஓடு வேய்ந்த நீள் கொட்டாலை இருக்கும்.மிகவும் அழகான அமைப்புகள் இவை.ஒவ்வொரு இடத்திலும் சிற்சில மாறுபாடுகள் உண்டு என்றாலும் பொதுவான அமைப்பு மிகவும் அழகானது.தண்மை நிரம்பியது.வெள்ளாளர்களின் அம்மன் வேறுவிதமான அமைப்பு கொண்டவள்.தலித்துகளின் அம்மனும் அதுபோலவே வேறோரு அமைப்பு.

கொடைகளின் ஒரு பகுதி சண்டைதான்.எதற்கென்றில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.ஒருவகையில் மனஸ்தாபங்கள் அத்தனையையும் வெளியில் தள்ளி பூட்டி கதவடைத்துக் கொள்வதற்கும் சேர்த்தே கொடை.கூட்டமாக வாழும்போது நிறை குறைகள் நிறைய வந்து சேரும்.அவனை வீழ்த்தவேண்டும்,இவனை பாடம் கற்பிக்க வேண்டும்.மனிதன் விலகுவதற்கு வருங்காலங்களில் தான் படித்தான்.பத்து வயது வரையில் பால் குடித்தவன் தாயை எப்படி விலகுவான் ? பத்து வயதுவரை என்றால் அவளை கொல்லும் அளவிற்கு உடல் வளர்ந்திருக்கும்.அவள் விலக்கி எறிந்தால் மீண்டும் மீண்டும் முலையில் வந்து ஒட்டிக் கொள்வான்.எப்படி பிரிப்பது ? நீ வேறு அவள் வேறு என்பதை எப்படி அறிய வைப்பது ?பகுதி விலங்காய் இருக்கும் பிள்ளைகள் இவர்கள்.பதினாறில் திருமண்ம் முடித்து இரண்டு தலைப்பிள்ளைகளோடு முத்தாரம்மையின் முன்பாக வந்து நிற்பாள்.தாக்கும் குணம் ஒன்றே அவளிடம் முந்தி நிற்கும். யாரைத் தாக்க நினைக்கிறாள் என்ற தெளிவு இராது.சமயங்களில் அவள் முத்தாரம்மையையும் தாக்குவாள்.இப்படி பல நூறாண்டுகள் கல்லடி பட்டு தெளிந்து ,ஓடையில் விழுந்து எழுந்து தேறி இப்போது வாகனமேறி வலம் வருபவளேமுகப் பொலிவு முத்தாரம்மை,முன்னர் காலங்களில் அவள் மீது வியர்வைப் பிசுக்கு.அண்டி நாற்றம்.பத நீர் அடுப்பின் வாசம்.பிள்ளைகளுக்காக எல்லா துயரமும் அடைந்து ,அதனை துயரமாகக் கருதாது காத்து கரைசேர்ப்பித்தவள் அவள்.அப்படி யாராலையாவது இயலுமா ? முடிந்திருக்கிறது.இத்தனைக்கும் அடித்தட்டில் இருந்து வருகிறாள் .ஒரு குழந்தையை அவள் விரட்டியதில்லை.கொன்றதில்லை.கொல்லத் துணிந்தோரிடம் கெஞ்சிக் கூத்தாடியேனும் மீட்பாள்.பிள்ளைகள் அவளுக்கு கருப்பட்டி போல.எது செய்தாலும் இனிப்பே.தித்திப்பே.நாடார் சமுகத்தில் இரண்டு தலைமுறைக்கு முன்பு பிறந்த தாய்மார்கள் என்றில்லை.எல்லாபெண்டிருமே முத்தாரம்மையின் குணத்தையே கொண்டிருந்தார்கள்.சிறு குழந்தைக்கும் முத்தாரம்மையின் குணம்.கற்பிலும் முத்தாரம்மையின் கற்பு.அது வினோதமானது,ஆச்சரியமூட்டுவது.நம்ப இயலாதது.பெண்களும் ஆண்களும் கற்புடன் இல்லாத சமுகம் உயருவதில்லை.கற்பைக் கைவிடும் சமுகம் உயரத்திலிருந்து கீழ் நோக்கி அழியும்.

###

எங்கள் அப்பைய்யா ஆதி நாராயணன் நாடார் ஊர் அம்மன் கோயில் கோட்டையில் ;கொடையும் வில்லுப்பாட்டும் திரண்டு நிற்கும் சமயத்தில் மனம் தொந்தரவு பட்டு நிற்பார்.சாமியாடுகையில் இவருக்கு ரத்தம் கொதிக்கும்.அய்யா வைகுண்டசாமியின் ரத்த வழி வாரிசு,பால கிருஷ்ணன் நாடாரின் நண்பர் அவர்.எங்கள் அப்பம்மை அய்யா வைகுண்டசாமியின் தாயார் வெயிலாள் அம்மையின் குடும்பத்தில் இருந்து வந்தவள்.சுயமாகவே ஒரு நிழல்தாங்கல் ஏற்படுத்தி, அவர் காலத்திற்குப் பின்னரும் தர்மகாரியங்கள் நடக்கும் விதத்தில் தன்னுடைய சொத்துக்களில் சிலவற்றை அதற்கென எழுதி வைத்திருப்பவர் அப்பையா.இன்று வரையில் அவர் விட்டுச் சென்ற தர்ம காரியங்கள் ஒருகுறையும் இன்றி நடந்து வருகிறது.நான் அப்பம்மை,அப்பையா என என்னுடைய தந்தை வழி தாத்தாவையும் பாட்டியையுமே சொல்கிறேன்.நாங்கள் அவர்களை அப்பம்மை அப்பையா என்றே அழைப்போம்.எங்கள் பகுதி பிள்ளைகள் அத்தனைக்கும் அந்த காலத்தில் ஜோதிடக் குறிப்பு எழுதிக் கொடுப்பவர் அவரே.அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத் திரட்டம்மானை ஏட்டில் இருந்தது.அதனை தானே பனையோலை சீவி,தன் கையால் பதம் செய்து நிறைய பகர்ப்புகள் செய்தவர்.தலையில் குடுமி வைத்திருப்பார்.பலரும் அதற்கு பகடி பேசுவார்கள்.அதற்கு அவர் பதில் சொல்வதும் இல்லை,கோப்படுவதும் இல்லை.அவற்றை வகைவைப்பதும் இல்லை.ஆனால் எங்களை ஊரார் கொண்டைக்கெட்டி பேரர்கள் என்று அழைக்கும் போது ரொம்ப குறையாகத் தோன்றும்.

கொடை நடந்தால் குழந்தைகள் எங்களுக்கு மிகவும் உற்சாகம் தோன்றும்.எங்கள் வீடுகளில் இருந்து குழந்தியகள் முதல் பெரியவர்கள் வரையில் யாரும் முத்தாரம்மை கொடைக்குச் செல்வதில்லை.எப்படியேனும் ஓளிந்து ஒளிந்தேனும் நான் மட்டும் சென்றுவிடுவேன்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1