அய்யா வைகுண்டர் இதிகாசம் -22 அய்யா மனிதப் பிறப்பு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -22

அய்யா மனிதப் பிறப்பு

2


பொன்னு நாடார் காலையில் பெரும்பாலும் அதிபுலரியில் களிமாருக்குக் கிளம்பி விடுவார்.குடிலுக்கு வெளியில் ஒருஅடி உயரம் கொண்ட மேடு அமைக்கப்பட்டிருந்தது,அதனைக் கடந்தே குடிலுக்குள் செல்லமுடியும்.அதில் சாணி மெழுகப்பட்டிருக்கும்.அதில் ஒய்வின் போது அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாம்.அதன் ஓரத்தில் பிச்சிக் கொடி படர்ந்து மேலே கூரைக்குச் சென்றது.அதன் மூட்டில்
உமிக்கரியும் ,செம்பில் தண்ணீரும் கொண்டு வைத்திருப்பாள் வெயிலாள்.தள்ளி ஒரு எட்டில் நின்றது பூவரசு.செம்பை கையிலெடுத்ததும் பூவரசு மூட்டிற்கு நகர்வார் பொன்னு.பூவரசுக்கு அரச வரி இல்லை.விளைந்த பூவரசு அமிர்தம்.சாய்வு நாற்காலிகள்,குறுங்கட்டி போன்றவற்றுக்கு ரத்தச் சிவப்பில் வரும்.பழகப் பழகக் கறுத்து வைரமாகி விடும்.ஒரே அரியண்டம் அதில் மைகுட்டிகள் வைகாசி,ஆனிமாசத்தில் வரும்.ஆனி முடிவில் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாக பறந்து விடும்.வண்ணத்துப் பூச்சிகளின் சிறு பருவம் பெரிய அரியண்டம்.செஞ்செட்டிச் செடி தாவரத்தில் பூச்சிகளில் இந்த மைகுட்டி.தீமூட்டி எரிப்பார்கள் இல்லையெனில் உடல் முழுக்க ஊரும்.செஞ்செட்டி செடியை எடுத்து எதிரிகளுக்குத் தேய்பார்கள்.பொய் பழகும் குழந்தைகளுக்கும் தேய்ப்பதுண்டு.உடல் தீயாகக் காந்தும்

அதிபுலரியில் அவர்களின் அனக்கம் அதிதேவதைகளின் அனக்கத்தை ஒத்திருக்கும்.அவர் எழும்புவதற்கு முன்பாக உமிக்கரியும்,தண்ணீருமாக வெயிலாள் ஒரு நாள் கூட தவறியதில்லை.வெயிலாள் எப்போது,எழும்புவாள் எப்போது தூங்குவாள் என்பது யாராலும் அறிய முடியாதது.அவள் சித்தியாக,மயினியாக ,மாமியாக,கொளுந்தியாக பார்த்தவர்கள் அத்தனைபேருமே கூட அப்படியே தான் இருந்தார்கள்.அல்லது அவர்கள் அனைவருமே வயது மூப்பு குறைவு கொண்ட ஒரே பெண்கள்தாம்
காலத்தின் பொது குணம்.யார் வந்தாலும் ஊண்ணாமல் விலக முடியாது.சோத்தைப் போடு மாமன் வந்துருக்காம்புல்ல ...மயினி வந்திருக்காவல்ல இப்படி.சோறு தின்னாச்சா..சோத்துக் கூட்டுக்கு என்ன வச்சிருந்தாவ...சோத்துக்கு மக்கள் அலந்து திரிந்த காலம்.நெல்லும் வயகாடும் தெய்வம்.கூட்டுக்கு சுத்தி வளரும் புல்லும் புள்ளும் போதுமானவை..பெரண்டை தொவையல் பித்ததிற்கு அதிபதி மருந்து.

வெயிலாளின் குடில் அந்த பகுதியிலேயே வசதியானது. மற்றவர்கள் தோப்புகளின் ,விளைகளின் நடுவில் குடிசை போட்டிருந்தார்கள்.பனையோலைகளால் ஆன குடிசைகள்.பொன்னு அவளுக்கு பல அறைகள் கொண்ட குடிலாக அதனை அமைத்துக் கொடுத்திருந்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பளுது பார்த்து விரிவுபடுத்திக் கொண்டே இருந்தார்.சாய்ப்பு அறை குடிலின் பின்புறத்தில் அமைக்கபட்டிருந்தது.அங்கே நெல் சேமிக்கும் நான்கு குலுக்கைகள் இருந்தன.நான்கு குலுக்கை கொண்ட குடிலென்பது பெரும்பாலும் அந்த பகுதியிலேயே இல்லை.பொன்னுவைப் பார்க்க தினந்தோறும் பிற ஆட்கள் வந்து கொண்டிருப்பார்கள்.சிலர் ஆலோசனைக்காக வருவார்கள்.ஓலை எழுதிப் பெறுவதற்காக சிலர் வந்தார்கள். அவர்களுக்காக குடிலுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டுப்பந்தலும் உண்டு.

பல்துலக்கி நேற்றைய அன்னப்பால் குடித்து களிமாருக்கு அவர் வந்து சேர பச்சை அலைபோல நான்கு பக்கமும் நெற்பயிர் காற்றின் திசையில் வீசிக் கொண்டிருக்கும்.பச்சை யான குளம் போல அந்த பகுதி மயங்கும்.சூரிய ஒளியில் அந்த பச்சை அலை துள்ளும்.அவரால் காலையில் மைமலாக அதைப் பார்க்காமல் முடியாது.அறுவடை காலம் போக மற்றெல்லா பருவத்திலும் அவர் இங்கு வந்து நின்று பார்ப்பார்.அது மயக்கம் உண்டுபண்ணும் வரையில் பார்ப்பார்.கண் நிறையும் வரையில் பார்ப்பார்.சில நேரங்களில் அவருக்கு அழுகை வரும்.நிறுத்திக் கொண்டு மண்வெட்டியால் கொத்தத் தொடங்குவார்.

இந்த பகுதியில் ஒன்றுமே கிடையாது.அவருக்குத் தெரிந்தே ஒன்றும் கிடையாது.திரட்டு காடு.பழையாற்றின் களிமுகம் என்பதால் தண்ணீருக்குப் பஞ்சமில்லை.களி நிரம்பி ஓடுகையில் பயமூட்டும் ஒலியை எழுப்பிய வண்ணமாக ஓடிக் கொண்டிருக்கும்.வடக்குத் தாமரை குளம் வரையில் வெள்ளாங்குடி.பழையாறு சுத்தமாக திரண்டு வரும்.குளித்தால் சீக்கெல்லாம் போகும் சுத்தமான வடினீர்.சிவன் கோயில் தாண்டியதும் காரம் அதிகமாகி விடும்.ஒரே ஆறுதான் ஒரு சிறிய இடத்தைத் தாண்டவும் காரம் அதிகம்.அதனால் பச்சைக்கு ஒன்றுமில்லை.வளரும் .தாதுச் சத்தும் அதிகம்.இவர்கள் நாட்கணக்கில் ஆண்டுக்கணக்கில் வெட்டி வெட்டி சரி செய்தார்கள்.செய்து கொண்டேயிருந்தார்கள்.என்ன வரும் என்ன லாபம் பெறும் ? ஒன்றும் தெரியாது.இந்த திரட்டில் கடவாய்த் திரட்டில் என்னதான் வந்துவிடும் என்று அரசர்கள் கருதிய கண்காணிப்பிற்கு மறைவிட பகுதி.யாருக்குமற்ற இடத்தைத் தோண்டி கொண்டேயிருந்தார்கள்.சரிபடுத்திய இடத்தில் விதை நெல்லை தூவினார்கள்.கண்முன்பாக வயல் பச்சை உண்டாகி வந்தது.

அப்போது நிலமிருந்தால் அல்ல.நெல் இருந்தால் அவன் சம்சாரி.மதியம் சோறாக்குவர்கள்.உச்சிக்கு முதலில் மண் பானைகளில் வடித்ததும் குழந்தைகளுக்கு முதலில் அன்னப்பால் கிடைக்கும்.மீதத்தைப் பெரியவர்களும் குடிப்பார்கள்.இரண்டு மணிக்கு மதிய சோறு.கூட்டுக்கு ஏதேனும் உள்ளது உள்ளபடி.இரவு என்பது எழுமணி.ஏழரைக்கு நீர்ச் சோறு.எட்டுமணிகெல்லா ஊரும் தூங்கிவிடும்.

நெல் இருக்கிறவன் பட்டினியாக இருக்கமாட்டான்.நெல் இருக்கிறவனுக்கு பெண் கிடைப்பாள்.நெல்லிருப்பவன் பட்டினி போட மாட்டான். நெல்லிருந்தால் உயிர் இருக்கும்.நெல்லிருந்தால் வம்சம் உண்டாகும்.ஆகவே எல்லோருக்கும் நெல் என்பது சாமி.அனைத்தும் நெல்லுக்குப் பிற்பாடே...

பிற வேலைகள் உண்டு.பனையேறுகிறவனிடம் மட்டுமே பணம் இருக்கும்.கலப்பை ஆசாரிகள் நெல் பெற்றுக் கொள்வார்கள்.நெல்லைக் கொண்டு பொன்னும் பெறலாம்.

[ தொடரும் ]


Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1