அய்யா வைகுண்டர் இதிகாசம் 2

அவதாரத்தை நெருங்குதல்

குன்றின் மேல் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லுதலுக்கு நிகரானது அது.அவதாரத்தை நோக்கிய பிரயாணம் இல்லாமல் அது சாத்தியமில்லை .தெரிந்தோ தெரியாமலோ நமது ஒவ்வொரு செயலிலும் அங்கு நோக்கித் திரும்பி இருக்க வேண்டும்.படைத்தலின் ரகசியம் காண அங்கு நோக்கி நம் கண்கள் திரும்பி இருக்க வேண்டியிருக்கிறது.எப்படியெனில் தெருவில் குழந்தையை விளையாட விட்டிருக்கும் தாய்,பல வேறுபட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அதன் பேரில் ஒரு கண்ணாக இருக்கிறாளே அப்படி.சிலருக்கு கண்ணாகவும் இருக்கத் தெரியாது,ஆனால் குழந்தையை தெருவில் இறக்கி விட்டிருப்பார்கள் .

கோயில் வாசலில் நிற்கிறோம்,பரம்பொருளுக்கும் நமக்குமிடையில் உள்ள தூரமும் இடைவெளியும் நமக்கு முன்பாக தெளிவாக இருக்கிறது.நாம் வேறாகவும் அது வேறாகவும் இருக்கிறோம்.அது வேறாக இருக்கிறது .நாம் வேறாக இருக்கிறோம்.உண்மையில் பரம்பொருளும் நாமும் வேறு வேறு இல்லையே...பரம்பொருளில் என்னவெல்லாம் இருக்கின்றதோ அத்தனையும் நம்மிடமும் இருக்கிறது.இல்லாதது எதுவொன்றும் இல்லை.சிவ சிவ நான் ஆனோம் என்கிறார் வைகுண்டர்.அப்படியானால் இந்த வேற்றுமை எங்கிருந்து தோன்றுகிறது.நான் ஒவ்வொரு முறையும் கருவறை முன்பு நிற்கையில் எவ்வளவு பெரிய பள்ளம் எனக்கும் உனக்குமிடையில் ,இது எப்போது கரையும் என்றே கேட்கிறேன்.அதற்கு அகல வேண்டியிருக்கிறது.மனம் விட்டு அகல வேண்டும்.பற்றி கொண்டிருப்பதில் இருந்து அகல வேண்டும்.பிடித்து வைக்க நினைப்பவற்றில் இருந்து அகல வேண்டும்.இவையெல்லாம் படிகள்.தொலைவை அகற்றிக் கொள்வதற்கான படிகள்.எனக்கு யாரும் அறியாத மனம் என்ற ஒன்றிருக்கிறது என்று தக்க வைக்க முயற்சி செய்வதில் இருந்து விலக வேண்டும்.அப்படி அந்தரங்கமான ஒன்று என்று எதுமில்லை என்று உணர வேண்டும்.அந்தரங்கம் என்பது அனைவருக்கும் உரித்தானதுதான் என்பதை அறிய வேண்டும்.அனைத்து அந்தரங்கங்களும் இவ்வாறே நினைத்துக் கொண்டிருக்கின்றன என்பது அறியபட வேண்டும்.அறிந்தால் பாவனைகள் மனதிலிருந்து கீழே விழுந்து விடும்.பரம்பொருள் நமக்குள் செல்வதற்கும் சரி,பின் வாங்குவதற்கும் சரி ஒன்பது வாயில்கள் இருக்கின்றன.அதனை எவ்வாறு வேண்டுமாயினும் பயன்படுத்தலாம்.

எதையும் அதிகம் எடுக்க முடியாது,ஆபத்து.எதையும் குறைத்தும் எடுக்க முடியாது,மெலிந்து விடுவோம்.இந்த சடலத்தை பட்டினி போட்டுக் கொல்ல நமக்கு ஏற்பாடு இல்லை.உகந்தது எடுக்கப் பட வேண்டும்,உகந்ததை சரியாக எடுக்கத் தெரிய வேண்டும்.உகந்ததைத் தான் எடுக்கிறோமா என்பது தெரிய வேண்டும்.இள நீரில் குண்டி கழுவியோர் சூழ இருந்தவன் நான்.ஆனால் செய்ததில்லை.அதற்காக யோக்கியன் என்று சொல்லவில்லை.இள நீரில் குண்டி கழுவித் துடைப்பவர்களொடு சுற்றிக் கொண்டிருந்தால் என்னென்ன பாபங்கள் விளையுமோ எல்லாம் விளைந்தன.வள்ளலார் பாபங்களாக வரையறை செய்திருக்கும் அத்தனையும் பாபங்களே.ஓடும் நீரில் எச்சிக் கை அலம்புதல் பாபமே.எனக்குத் தெரியாதே எனலாம்.அறியாமை பெரும்பாவம்.அறியாமையில் பாவியரே இருந்து துயில்கிறார்கள். கொஞ்சமேனும் புண்ணியம் செய்தவர்கள் தாமதமாகவேனும் அறிந்து கொள்கிறார்கள்.தாங்கள் செய்பவற்றை தாங்களே அவிழ்த்துக் கொள்ளும் அளவிற்கேனும் அறிந்து கொள்கிறார்கள்.

யாருக்குமே தெரியாது,தண்ணீரை எடுத்து எடுத்து வீண் செய்கிறீர்கள்.பரம்பொருள் அதற்கு ஒரு கணக்கு வைத்துக் கொள்கிறான்.அதனை விரயம் செய்ததை உணர வேறு சந்தர்ப்பம் வைத்திருக்கிறான்.இதனையெல்லாம் யாரோ இருந்து திட்டமிட்டெல்லாம் செய்து கொண்டிருக்கவில்லை,யாரோ இருந்து திட்டமிட்டால்தான் அறிவால் அவனை வென்றுவிடலாமே...அப்படியெல்லாம் ஏதுமில்லை.ஆனால் ஒரு பேரமைப்பு,நமது கட்டுப்பாட்டிற்கு மேலாண்மைக்கு அப்பாற்பட்ட வற்றாயிருப்பு இதனை தன்னிச்சையாக செய்து கொண்டிருக்கிறது

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் அய்யா வால் விலக்கி வைக்கபட்டவன் நான்.கேடுகளை,அவற்றின் விளைவுகளை முகத்திற்கு நேராகப் பார்த்தவன்.தெருவில் குழந்தையை விளையாட விட்ட தாயைப் போல அதன் பேரில் ஒரு கண்ணால் கண்ணும் கருத்துமாக, மனம் மேலே நின்றதால் ஒரளவிற்கு தப்பித்தேன்.

ஆரம்பத்தில் அய்யாவை எவ்வளவு தூரம் அலட்சியம் செய்ய முடியுமோ அவ்வளவு அலட்சியம் செய்திருக்கிறேன்.செய்வதால் என்னாகும் என பரிசோதனை செய்திருக்கிறேன்.பரிசோதனை ஒவ்வொன்றிற்கும் பதில் அடைந்திருக்கிறேன்.

அவரிடம் விலகி எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்து திரும்பி வந்தவனிடம் அவர் வேலையை விட்டிருக்கிறார் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவருடைய தனிபெரும் கருணைக்கு ஜெயம்
சிவ சிவா நான் ஆனேன்
நான் ஆனேன்

- லக்ஷ்மி மணிவண்ணன்

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1