அய்யா வைகுண்டர் இதிகாசம் காட்டரசர்கள்-4
அய்யா வைகுண்டர் இதிகாசம்
காட்டரசர்கள்-4
அய்யா வாழ்ந்த நிலம் முழுவதும் காட்டரசர்களின் ஆட்சி நடைபெற்றது.குமரி மாவட்டம் முழுவதுமே இந்த காட்டரசாட்சியின் பண்புகள் நிறைந்தது.ஏராளமான காட்டரசர்களை மன்னராட்சி முறைப்படி ஒருங்கிணைத்த அரசர்கள் ஆண்டார்கள்.சிறுபகுதியை ஆண்டவனும் காட்டரசனே மொத்தத்தை ஆண்டவனும் காட்டரசனே.நாகரீகத்தில் ,வாழும் முறையில் ,பிடித்தொழுகும் நெறியில் சிற்சில வேறுபாடுகள் உண்டு.ஒரு நாகரீகத்திற்கும் பிறிதோரு நாகரீகத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை ஒத்ததல்ல அவை.உணவில் சில மாறுபாடுகள்,வழிபாட்டு உரிமைகளில் சில மாறுபாடுகள் அவ்வளவே.கடை நிலை புலையனின் தெய்வமும் ஆட்சி புரிந்த குடியினருக்கும் ஒரே தெய்வங்கள் இருந்திருக்கின்றன.நவீன மடைவதற்கு முன்பு சமுகம் இருந்த நிலை அது.அதிகார பூர்வ தெய்வம் ஆதிகேசவனும்,திருவனந்த பத்பனாதனும்,சிவனும் சைவமும் உயர் குடி தெய்வங்கள்.காட்டு தெய்வங்கள் அனைவருக்கும் பொதுவானவை.அது முந்தைய சமுகமே நவீனக் கூறு கொண்டிருந்தமைக்கு அடையாளம் என்பதனால் அல்ல,இங்கே நிலமே காடு ஏகிக் கிடந்தது.காடே அன்னமிட்டது.சான்றோர்கள் மிகவும் ஒடுங்கிக் கிடந்தார்கள்.
அய்யா வைகுண்டர் நவீன சமுகத்திற்கு ஏற்பற்ற அனைத்து விஷயங்களையும்,பார்வைகளையும்,விழுமியங்களையும் கலி நீசம் என்று அடையாளப்
படுத்துகிறார்.சான்றோர் பண்பு நலன்களுக்கு எதிரானது கலி நீசம் என்பது அவர் முன்கூட்டி கண்டடைந்தது.கொத்தைக் குறையாதே குறை மரக்காய் வையாதே என்கிறார் வைகுண்டர்.கொத்து என்பது கூலி விவசாயிகளுக்கு கூலியாக அளக்கபடும் தானியத்தைக் குறிப்பது .
பெரும்பாலும் இந்த நிலமே காடாகக் கிடந்த நிலம்.பலம் கொண்டே எல்லாசாதிகளிலும் காடும் களனியும் வசமாக்கப்படுகின்றன.காட்டுகுடையவர்களுக்கு போதுமான நெறிகளே சட்டங்களாக பேணப்படுகின்றன.ஒவ்வொரு சாதியிலும் பலம் கொண்டவன் பலமில்லாதவர்களை ஒடுக்கி ஆள்கிறான்.இப்படி எல்லாசாதியிலிருந்தும் சேகரமாகிற பலத்தின் மீது திருவிதாங்கூர் அரசு நின்று கொண்டிருக்கிறது.கீழ் பலம் அதற்கு அடுத்த பலத்தை முறியடிக்க எப்போதும் காத்திருக்கிறது,அதன் மீது அதனினும் மேம்பட்ட பலம் அமர்ந்திருக்கிறது.கொஞ்சம் கவனக்குறை எல்லாவற்றையும் எந்த மேம்பட்ட பலத்தையும் கவிழ்த்தி விடும்.இதனால் ஏற்படும் சந்தேகம்,பயமும் இல்லாத மரங்கள் இல்லை.காடுகள் முச்சூடும் சதா பயத்தின் நிழல்கள்.கவிழ்ப்பு முயற்சியின் அச்சம் அரசாங்கத்திற்கு இருப்பதனைப் போலவே அது ஒவ்வொரு சின்ன பலத்தின் மீதும் பயத்தின் சாயல் இருக்கிறது,பெரிய பலத்தின் மீதும் இருக்கிறது.அதனால் எல்லோரும் அமைதியில்லாமல் இருந்தார்களா என்றால் இல்லை.புதிய நெறிகள் உருவாகியிராத காலம்.முன்னுணுணர்வதில் பின்னடைவு.கிறிஸ்தவம் வந்த போதே தனக்கும் மேலே ஒரு அதிகாரம் வேறு ஒரு ரூபத்தில் இருப்பதை அரசு உணர்கிறது.அதுவரையில் பார்த்திருந்தது தன்னை ஒத்த ,தன்னிலும் சற்றே பெரிய அல்லது சற்றே சிறிய பகை ராஜ்ஜியங்களைத்தான்.
இங்கே நிலம் ஐந்து வகை.ஆனால் நடைமுறைக் கணக்கில் நான்கு வகை.மேற்குப் பகுதி முழுதிலும் மழை மரக் காடுகள்,காட்டாளர்கள் .கடற்கரை பகுதிகள் தனி இனமக்கள்,நீர் விலங்கு வேட்டையர்கள்.சமவெளி நஞ்சையில் உயர்குடிகள்,தலித்துகள்.கடற்கரையை ஒட்டிய உள் நிலபகுதியில் நாடார்கள்,அவர்களின் கூலியடிமைச் சாணார்கள்.
இங்கே மேற்கு நிலம் முழுதுமே அடுக்கு நிலம்.கேரளாவினைப் போன்றது.மலையடுக்கும் இறக்கமும்,மேடும் பள்ளமும்.தண்ணீர் ஊற்றுகளிலும் கிணறுகளிலும் வற்றுவதே இல்லை.பூமிக்கு கீழ் அடுக்கு முழுதும் நீர்க் கண்ணிகள்,சிறு நீரோடைகள்.அவை அனைவரின் உறக்கத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை
கடலை ஒட்டி மெதுவாக மேலெறிச் செல்லும் நிலங்கள்,மேட்டிலிருந்து மீண்டும் கடல் நோக்கி வருபவை இப்படி.எங்கிருந்தாலும் தண்ணீர் அமுதம் போன்று ஊறி வரும்.கடற்கரையோரங்களில் மணற்குன்றுகளின் அடியில் உருவாகும் மணற்பாறைகள் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.இத்தகைய பாறைகள் இயற்கையில் உருவாகும் போது அது உருவாகி சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தந்த தலைமுறைகள் தண்ணீர் சுத்திகரிப்பானாக அந்த மணற்பாறைகளை பயன்படுத்துகின்றன.நவீன சமூகம் வந்த பின்னர் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்த மணற்குன்றுகளும் மணற்பாறைகளும் தொண்ணூரு சதமானம் அழிக்கபட்டு விட்டன.
Comments
Post a Comment