அய்யா வைகுண்டர் இதிகாசம் -19 முத்தாரம்மன் கதை முடிவு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -19

முத்தாரம்மன் கதை முடிவு

எங்கள் அப்பய்யா முத்தாரம்மன் கோயிலில் கொடை நடக்கும் காலங்களில் வீட்டில் இருப்பார்.குழந்தைகள் அப்போதுதான் அவரை முழுமையாகப் பார்ப்போம்.மனம் தொந்தரவு பட்டு நிற்பார்.இதெல்லாம் வேண்டியதில்லை,அய்யா இது எதுவும் தேவையில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.வைகுண்டசாமியை அறிந்தவனுக்கு இது அவசியமில்லை எப்படியாக பேசிக் கொண்டிருப்பார்.இத்தனைக்கும் அவர் கைகளாலேயே மண் பிசைந்து,செங்கல் அறுத்து ,பனைமரம் செதுக்கி அமைத்த அய்யா வைகுண்டரின் நிழற்தாங்கலிலிருந்தே அம்மனுக்கு மின்சாரம் செல்லும்,அதற்கு அவர் அனுமதி மறுப்பதில்லை.மேளக் காரர்கள் கொடைக்கு வந்தவர்கள் நிழற்தாங்கலில் தங்குவதே வழக்கம்.அதற்கும் மறுப்பு சொன்னவரில்லை.சமயங்களில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவரே நேரடியாக செய்து கொடுப்பதும் உண்டு.ஆனால் எங்களிடம் பேசிக் கொண்டேயிருப்பார்.சாமியாடுவது பொய் என்பார்.ஒருவேளை குழந்தைகள் கொடையின் போது ஏற்படக் கூடிய திருவிழா தன்மையால் ஈர்க்கப்படுவோம் என்று எண்ணம் கொண்டிருக்கலாம்.அது உண்மையும் கூட.பெரியவர்கள் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே குழந்தைகள் இந்த விளைக்குள் அடங்கிக் கிடந்தார்கள்.அடுத்த விளையில் கொடை நடந்து கொண்டிருக்கும்.

நிழற்தாங்கல் கிழக்கு பார்க்க அமைப்பு. பூர்வீக வீட்டின் தென்பக்கமாக அதே வரிசையில் இருக்கும்.பூர்வீக வீட்டின் களமும் நிழற்தாங்கலின் களமும் ஒரே நீளத்தில் இருந்தன.நிழற்தாங்கலின் முன்பாக இரண்டு பன்னீர் மரங்கள் உண்டு.அவை வெள்ளை வெள்ளையாக நிலமெங்கும் தேன் சொட்ட விழுந்து கிடக்கும் .காலை நேரத்தில் அதனைக் கடந்து செல்ல பன்னீர் மணம் மயக்கமூட்டும்.தரையே தெரியாது.சுற்றிலும் பன்னீரின் புடைப்புகள்.வீட்டிற்கு வடக்கு பக்கமாக மெலிந்த தார் ரோடு கிழக்குப் பக்கமாக நாகர்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தது.மேற்குப் பக்கத்தில் ஒரு கிலோ மீட்டர் சென்றால் பள்ளம் துறை.நிழற்தாங்கலின் தென்புறத்தில் வயலுக்குத் தேவையான நடவு கதிர்களை பாவி வைத்திருப்பார்கள்.எந்தப் பக்கம் போனாலும் நீருற்றுகள்.அரைப்பனை அளவிற்கு பக்கவாட்டில் விரித்து ஆழம் வரையில் நடந்து சென்று நீர்வாரும் விதத்தில் அந்த நீரூற்றுகள் தோண்டப்பட்டிருக்கும்.வாழையும் தென்னையும் கலந்து வைத்திருப்பார்கள்.வாழை ஊடுபயிராக இருந்தால் தென்னை வேகமாக வளரும்.ராஜாக்கள் காலத்தில் தென்னை இல்லை. பிறகு பிறகே தென்னைகள் வேகவேகமாக வருகின்றன.பூர்வீக வீட்டின் முற்றத்திற்கு முன்னால் இருக்கும் விளையில் கொடை நடக்கும்.தோப்புகளே விளை என்று அழைக்கப்படுகின்றன.மூன்று ஏக்கர் நான்கு
ஏக்கர் தோப்புக்குள் ஒரு பெரிய வீடு.முற்றத்திற்கு இடப்பக்கமாக துலா கிணறு.இதுவே பொதுவான அமைப்பு.பனையோலைக் கீற்றுக் குடிசைகளும் ,தென்னையோலைக் கீற்றுக் கொட்டகைகளும் விளைகளுக்கு உள்ளேயே அமைந்திருந்தன.பனையோலை கீற்றுக் குடிசைகள் பெரும்பாலும் பனையேறிகளுடையவை.பனையேறிக்கான கூலி ஒரு நாள் பதனீரை அவன் எடுத்துக் கொண்டு ,மறு நாள் பதனீரை அவன் நிலம் கொண்டவனுக்கு விட்டுத் தர வேண்டும்.இதுவே பனையேற்றுக் கூலி முறை.

பனையேற்று சீசன் தொடங்கியதும் முதல் நாள் பதனீர் வராது.இரண்டாம் நாள் வரும்.இரண்டாவது நாளில் வருகிற "முதல் நாள்" பதனீரை நிழற்தாங்கலில் வைத்து விடுவோம்.தர்மம் கொடுத்துவிடுவார்கள்.மூன்றாம் நாள் முறைப்படி வராது.நான்காவது நாளில் இருந்தே வீட்டுக்கு வரும். வயலில் இருந்து வருகிற புத்தரிசியும் அவ்வாறே.முதலில் அளப்பது கூலிக்கு.இரண்டாவதாக தாங்கலுக்கு ,புத்தரிசி தாங்கலில் தர்மம் கொடுத்த பிறகே நாம் சமைத்துண்ண முடியும்.பனையேறியின் வீட்டில் மட்டுமே எல்லா நாளும் பதனீர் கிடைக்கும்.பதனீர் காயும்.அவன் ஒருவீட்டுப் பனையை இன்றைக்கென வைத்திருந்தால் ,அடுத்த வீட்டுப் பனையை மறுநாள் என முறை மாற்றி வைத்திருப்பான்.அவனுக்கு ஒய்வு கிடையாது.தினமும் ஒருத்தி பதனீர் காய்ச்சி கருப்பட்டி எடுக்க வேண்டுமானால் அவள் தெய்வமாக இருந்தாலன்றி முடியாது.பனையேறிகள் இசக்கிகளை வழிபட்டார்கள்.தினமும் பதனீர் காய்த்து கருப்பட்டி எடுத்தவளும் இசக்கியாகவே இருந்தாள்.அது இசக்கியரின் காலமாக இருந்தது.

எதிர்விளையில் முத்தாரம்மனுக்கு கதைப்பாட்டு தொடங்கியதும் 'என்ன பாட்டு பாடுகிறார்கள் என்று கேட்டீர்களா ? எனத் தொடங்குவார் அப்பையா. அவனை அழித்தவனின் கதையைப் போற்றிப் பாடுகிறார்கள் .ஏன் அழித்தான் ,சிவனுக்குரியதை வழிப்பறி செய்தார்கள் அழித்தான்.தேவர்கள் சிவனுக்கு கொண்டு அமுதத்தை இவர்கள் இடையில் பறித்துத் தின்றார்கள்.கொழுப்பு கூடியது.தொந்தி கொண்டு திமிர் பிடித்து அலைந்தார்கள்.ஒரு நாளா இரண்டு நாளா ? நித்தமும் இதே ஜோலி.கொளுப்பு முற்றியவர்களை அவர் அம்மை முத்தாரம்மையாவது அறிவு சொல்லி திருத்தினாளா? ஒரு நாள் பிள்ளைகளே..உங்களுக்கு அமுதுண்ணும் ஆசை இருக்குமானால் நீங்கள் சென்று கடைந்தெடுத்து உண்ண வேண்டும்.தேவர்கள் சிவனுக்குக் கடைந்து நியமிக்கக் கொண்டு செல்லும் அமுதை நீயெடுத்து உண்டால் என்ன நடக்கும் ? கடைசியில் மஹா விஷ்ணு வந்து கோட்டையை முப்புரத்தை அழித்தார்.நீ இந்த கதையை ஆண்டுக்கு ஒருமுறை பாடி கொண்டிருந்து,ஆடி அழிச்சாட்டியம் செய்தால் உன்னுடைய வழிப்பறி குணம் எப்போது போகும்,எப்படி மாறும்? என்று எங்களைக் கேட்பார்.சிறு பிராயத்தில் எங்களுக்கு என்ன தெரியும் ? கோட்டையும் கொத்தளமும் ஆண்டிற்கு ஒருமுறை அழியும் மக்களே..அவன் வைத்தாடும் பண்டங்களைக் கைகொண்டு தொடக் கூடாது.தவறியும் எடுக்கக் கூடாது.ஈச்சையும் யட்சியும் அமர்ந்திருக்கும் பண்டம் போல அது.எதைப் போற்றுகிறோமோ ,அதுபோல ஆவோம்.வேண்டி எடுக்கக் கூடாது என்பார் அவர்.

எங்கள் ஊரிலிருந்து வடசேரி சந்தைக்கு இரண்டு பாதைகள் இருந்தன.ஒன்று பறக்கை வழியே கோட்டார் தாண்டிச் செல்லும் பாதை .மேலகிருஷ்ணன் புதூர் வழியே இருளப்பபுரம் தாண்டி வடசேரி செல்லும் பாதை மற்றொன்று.அப்போது ஒற்றைக் காளை வண்டிக்காரர்கள் தான் வடசேரிக்கு சென்றுவருவார்கள்.இடையில் வழிபறி கிராமங்கள் உண்டு.இங்கு மட்டும் என்றில்லை,குமரி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்தாலும் ,வந்து சேருவதற்கு முந்தைய விளிம்பு நிலை கிராமங்களில் இது நடக்கும்.பெரும்பாலும் வர்மானியர்களே ஒற்றைக் காளை வண்டியை செலுத்துவார்கள்.ஒற்றைக் காளை என்பது செலுத்துகிறவன் வர்மானியன் என்பதற்கான அடையாளம்.இத்தனையும் தாண்டி ஒற்றைக் காளை வண்டிக்காரர்கள் வழிபறிக்கு கொடுப்பதற்கென்றே பண்டங்கள் வைத்திருப்பார்கள்.பனங்கிழங்கு,கருப்பட்டி இப்படியாக.வேறுவழிகளும் இல்லாத,விவசாயம் செய்ய இயலாத தரிசு கிராமங்கள் இவை.கொடுக்கவும் வேண்டும்,பயந்து கொடுப்பதாகவும் அது இருக்கக் கூடாது.அப்படி.இப்போதும் கூட பழைய பெரிசுகள் இந்திந்த ஊர்களில் பெண்ணெடுக்க வேண்டாம் என்பார்கள்.இந்த கிராமங்களும் அதில் இருக்கும்.பொதுவான குற்றங்களில் ஆர்வம் தணியாத ஊர்கள் இவை.இந்த ஊர்களில் இருந்து படித்து வேலைக்குச் சென்று முன்னேறி விட்டான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்,குடிக்குப் பிறகான போதையில் கூட அவனுடைய ஊழ் முன்வந்துதிப்பதை இப்போதும் பார்க்க முடியும்.ஆறு ஏழு தலைமுறை கடந்தும் வரக் கூடியது இந்த ஊழ்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1