அய்யா வைகுண்டர் இதிகாசம் 11
அய்யா வைகுண்டர் இதிகாசம் 11
பேய்கள்,தெய்வங்கள்,பெரு நெறிகள்
நமது ஆதிகாலம் பேய்களால் ஆனது.எல்லா நாட்டவர்களுக்கும் இப்படித்தான்.அவர்களுடைய பேய்களால் அமைந்ததுதான் அவர்கள் உள்ளம்.
இன்னும் அதன் எச்சங்கள் நம்மிடத்தே உண்டு.பெரு நெறிகளைக் கொண்டோரிடமும் உண்டு.இருக்கவும் செய்யும்.நம்முடைய அகம் முழுவதும் அந்த பேய்களாலேயே இருப்பு கட்டபட்டிருக்கிறது.பெரு நெறிகள் பயின்று ஒழுகினாலும் ,பெரிய குடும்பங்களில் இருந்து வந்திருந்தாலும் குடிக்க ஒருவர் தொடங்கினால் உள்ளிருந்து வேளியே வருபவற்றைப் பாருங்கள்.பொதுவாக நாம் அனைவரும் சட்டை போட்டு மறைத்து வைத்திருக்கும் பேய்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் வெளியில் விட்டுக் கொண்டிருக்கிறான் அவ்வளவுதான் விஷயம்.நம்முடைய வினைகளில் அந்த பேய் மீண்டும் தலைதூக்குகிறது.வினைகளில் நம்முடைய பேய்கள் பதிவாகியிருக்கின்றன.அதில் ஒரு சிறுமையும் கிடையாது.பேய்கள் என அழைப்பது கூட புதிதாக ஏற்பட்டதுதான்.பேய்கள் அகம் தொடர்பான அடிப்படைப் பண்பு நலன்கள்.
பேயற்ற சமுகம் கிடையாது.மரபான சமூகங்களில் என்று அல்ல.நினைவுகள் அதிகமற்ற புதிதாக உருவாகிய குறுகிய கால சமூகங்களில் கூட பேய்கள் இருக்கின்றன.இருக்கும் .ஒருவர் தனக்குப் பேய் இல்லை என்று சொல்வார் எனில் அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை.அவர் மனம் சிதறுகையில் அது வெளிப்படக் கூடும்.தியானத்தில் வெளிப்பட கூடும்.அவர் எனக்கு இப்போது சரிவர தெரியவில்லை என்று சொல்வதாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை அவர் கனவில் கண்டு கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு.
சகல பெரு நெறிகளும் பேய்களை ஒடுக்கும் முறைகளை அல்ல.அவற்றை பக்குவபடுத்தும் முறைகளைக் கொண்டிருக்கின்றன.வேறு வேறு விதங்களில் மக்களுக்குத் தக்கவாறு அவை எப்படி என்பது போதனை செய்யப்பட்டுள்ளன.எந்த பெரு நெறிக்குள் யார் ஒருவர் சென்றாலும் அவர் தன்னுடைய பேய் நிலையை கடந்து மேல் நிலைக்குள் செல்கிறார் என்றுதான் பொருள்.ஐரோப்பிய பெரு நெறிகளாக இருப்பினும் சரிதான்.மக்களிடம் அது பேயோட்டுதலை ஒரு காரியமாக எடுத்துச் செய்தால் மட்டுமே முடியும்.செய்கிறார்கள்.பேயோட்டுதல் என்கிற சொல் தவறு.பேயை ஒட்டமுடியாது.தியானம் உனது பேயை பக்குவம் செய்து உன்னிடமே வசதியான வடிவில் தொகுத்து அளிக்கிறது.உன்னுடைய சிதறலை அது கட்டுப்படுத்துகிறது.என்னயிருந்தாலும் சிதறுவதற்கு முன்பிருந்த நிலையில் அது இருக்கிறது.தியானம் சிதறுவதற்குப் பதிலாக குவிக்க பயிற்சி அளிக்கிறது.ஒன்றிலேயே கருத்தாயிருக்க மூல அறிவில் ஒழுங்குபடுகிறீர்கள்.மூல அறிவில் குவியும் போது அதன் ஒழுங்கு உள்ளே குவிதலுக்கு ஏற்ப உள்ளத்தில் வந்து பாய்கிறது.இது அரிச்சுவடி இதிலிருந்து மேலே எவ்வளவு வேண்டுமானாலும் செல்லலாம்.வழி திறந்து கிடக்கும்.இங்கு இந்திய பெருமரபுகள் உருவாக்கியிருக்கும் அனைத்து உருவகங்களும் கடந்து செல்வதற்கு வைக்கப்பட்டிருக்கும் குறியீடுகளே அன்றி இதில் நின்றுவிடு என்று சொல்வதில்லை.பேய்களில் இருந்து அகம் தெய்வங்களை நோக்கி புறப்பட வேண்டும்.அதிலிருந்து பெரு நெறிகளை மேல் நோக்கி சென்றடைந்தாக வேண்டும்.வேறு வழிகள் கிடையாது.ஆனால் இவை அனைத்துமே ஆரம்ப நிலைகளே.
இதனால் என்ன நடக்கும் ? பேய் நிலை மனதையே ஒருவர் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும் ? பேய் இருக்கும் இடத்திலேயே மனதின் மாய்மாலங்கள் நிரம்பிய இடம் அது. நம்மை அதனில் நிலை கொள்ளச் செய்து விடும்.மாய்மாலங்கள் துன்பத்திற்கு அடிப்படையாக இருப்பவை.
விடுதலைகான நெறிகளை வருந்தித் தான் கற்க வேண்டி வரும்.பயிற்சியிலிருந்து பழக்கத்திற்கு வந்து சேருவோம்.பழக்கம் நெறியை தன்னிச்சையாக்கும்.பல் விலக்குகிறோம்.முதலில் விரும்பிச் செய்ததில்லை.தொடந்து நம்மை பயிற்சிக்கிறார்கள்.பிறகு பழக்கம் உண்டான பிறகு பழக்கத்திற்காக தேய்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
எங்கள் ஊர்பக்கம் ஒரு தெய்வம் இருக்கிறாள்.மிகவும் விஷேசமானவள்.சில தரவாட்டுக் குடும்பங்களில் ரகசிய தெய்வம்.பீடம் மட்டும் இருக்கும்.கற்பனையாக சடங்குகள் செய்ய வேண்டும்.குறைந்ததுஐம்பது பெயர்களிலேனும் அறியப்படக் கூடியவள்.குழந்தை தெய்வம். அவள் பெரியவளாகி கன்னியாவதுவரையில் பூஜை நடக்கும்.ஒன்றரை மணி நேர பூஜை அது.குழந்தையாவதிலிருந்து கன்னியாவது வரையில் மாற்றி மாற்றி அவளுக்கு ஆடை அணிவித்தல் செய்வதே பூஜை.குழந்தையில் பெரும்பாடு.அவள் ஆடை அணியமாட்டேன் என்று கூறி மரங்களில் ஏறி அமர்ந்து கொள்வாள்.ஓடுவாள்.பூசை கொடுப்பவர் இரஞ்சி இரஞ்சி ஆடை கொடுப்பார்.அதற்கென அவளுக்கு ஆடை அணிவிக்கக் கேட்கும் சில பாடல்கள் உள்ளன. சில இடங்களில் கன்னி தெய்வமாகவும் இருப்பவள் இந்த மனோன்மணி
[ தொடரும் ]
Comments
Post a Comment