அய்யா வைகுண்டர் இதிகாசம் 9, 10

அய்யா வைகுண்டர் இதிகாசம் 9, 10


ஐவகை மடச்சியர்

இருட்டரசி,விதவை மடச்சி,கோழிமடச்சி,சவம் தின்னி,தோல்பூச்சி என ஐந்து மடச்சியர்.மடச்சியரின் தலைவி இசக்கிதான்.மடச்சியர் வளாகத்தில் ஐந்து மடச்சியர் குடும்பத்தில் ஐந்து அண்ணன் தம்பிகளுக்கு ஒரே குடும்பத்தில் இருந்து அரசாள வந்த சகோதரியர்.சாகா வரம் படைத்தவர்கள்.வீடுகளில் அகல் தீபம் ஏற்பவர்கள்.ஆனால் இசக்கியோடு சேர்த்து கூட்டு தீபம் இல்லை.வீட்டு தேவதையராக இருக்கும் தகுதி கொண்டவர்கள்.இசக்கியானால் மட்டும் கூட்டு தீபங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவர்.இசக்கியாகாத மடச்சியர் பேய்கள் என்பதே கணக்கு.என்றாலும் அப்படிச் சொல்வதில்லை.ஐவகை மடச்சியரின் குணம் பெற்று ஆடும் மடச்சியரை மீட்க மடச்சியரே உதவி செய்கிறார்கள்.எலுமிச்சையில் அகல் ஏற்றி நாற்பத்தியெட்டு நாட்கள் வணங்குவதால் பிடித்திருக்கும் பெண்டிரிடம் குணம் நாடி நீங்குகிறார்கள். ஒருவகையான ரகசிய தெய்வங்கள் இவர்கள்.பேய் தேவதைகள் என்றும் சொல்லலாம்.இவர்கள் வேறு வேறு பெயர்களில் குடும்பங்களுக்குள் ரகசிய தெய்வங்களாக வணங்கப்படுதலும் உண்டு.

இருட்டரசி

இருட்டினிலேயே இருக்க ஆசை கொள்பவள்.சிடுசிடுப்பும் ,வேலைகளின் போது விருப்பமில்லா பெரும்கோபமும் கொள்பவள்.அந்தந்த நேரத்து மன நிலைகளே இவளுடைய மன நிலைகள்.சுற்றம் அறுத்துக் கொண்டே இருப்பாள்.கட்டக்கட்ட அறுப்பாள்.துள்ளத் துடிக்க அறுப்பாள்.காரணங்கள் எதுவும் தேவைப்படாது. பிறர் பராதிகள் பேசிக் கொண்டேயிருப்பாள்.தன் நியாயம் கூறிக் கொண்டேயிருப்பாள்.கேட்டாலும் குற்றமென்பாள்.கேட்க மறுத்தாலும் ஆயுதம் தூக்குவாள்.இருக்கும் இடத்தை இருட்டாக்குவது இவள் வேலை.தூங்க மறுப்பாள்.இரவின் அத்தனை அனக்கங்களையும் உண்டு செழிப்பவள்.ராத்திரியில் இவளுக்கு இரண்டு பேரின் பலம் உண்டு.பகலில் பலகீனமாகத் தோன்றுவாள்.பகலை அஞ்சுவாள் ,பகல் முழுதும் சந்திப்பவர்களை சீறிச் சிடுசிடுப்பது இவள் பிரதான குணம்.பகலில் இவர்களைக் காண வாய்த்தவர்கள் ஏதோவொன்று தங்களை தாக்கியதாக உணர்வார்கள்.அழுக்கு மணம் இவளுக்கு மிகவும் பிடித்தமானது.யாழ்பாணம் புகையிலை சுட்டு புகைமணம் காட்ட வேண்டும்.யாழ் புகையிலை சுட்ட மணம் எழுந்தால் இவளுக்கு அகல் ஏற்றப் போகிறார்கள் என்பது அறிக.இந்த குலதேவதைகள்,குலவாதைகளை ஒத்த ஒரு கூட்டம்.இவர்கள் ஒருவருக்கு அகல் வைத்தாலும் பிற நால்வரும் வந்து அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களை இருட்டுக்குப் பழக்கி கொண்டேயிருப்பாள்.பேராசை கொண்டவள்.உள் சுருங்கி.இவளுடைய மனம் கணம் தோறும் மாறிக்கொண்டேயிருப்பது.மனம் எப்படி மாறுகிறதோ அவ்வாறு சுற்றுப் புறத்தையும் மாற்றியமைத்து விடும் வல்லமை கொண்டவள்.

விதவை மடச்சி

விதவை மடச்சி உண்மையில் விதவை கிடையாது.ஆனால் ஒரு விதவையின் அத்தனை குணங்களும் இவர்களிடம் இருக்கும்.எதிலும் ஈடுபாடு இருக்காது.பாசாங்கு வழக்கத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிகம்.ஒரு பாசாங்கின் மீது ஏறி அடுத்த பாசாங்குக்குள் கடக்கும் விசித்திரம் கொண்டவள்.விதவா தாகம் கண்களில் ஏங்கி நிற்கும்.உள்ளத்தில் எப்போதும் புகைச்சல் கொண்டவள்.ஒன்றைச் செய்யாமல் இருப்பதற்காக வேறொன்று செய்வாள்.வேலைக் கள்ளி.வேலைக் கள்ளிக்குப் பிள்ளை சாக்குப்போக்கு என்பது இவளைக் குறித்தானதே.செய்ய வேண்டியதற்குப் பதிலாக வேறொன்று.அடுப்பு வேலைக்கு பதிலாக குழந்தை மேய்ப்பு.குழந்தையை தூக்கி சுமக்க மறுத்து பதனீர் காய்ப்பு ,பதனீர் அடுப்பை மூடிவிட்டு ஆடு மேய்ப்பு.கேட்காமலிருந்தாலும் ஏராளம் சொல்வாள் சாக்குப்போக்குகள்.பீடித்த குழந்தைகள் நா வறண்டு கண்கள் மேலேறும்.வாய் நீர் வடிக்கும்.இவள் பதனீர் காய்த்தால் பதனீர் பருவம் ஏற்படாது.திரியும்.அதனால் இவள் அகலுக்கு முன்பாகக் கற்கண்டைப் படையல் இடுவார்கள்.

சமையல் செய்தாளென்றால் சுவை தோன்றாது.பரிமாறச் சொன்னால் ஒளிந்து நிற்பாள்.விதவை மடச்சியர் வீட்டில் ஆண் பிள்ளைகளைக் குற்றங்களில் துண்டுவாள்.இது அவள் மீது விழுந்த சாபம்.துன்பத்தில் மட்டுமே லகுவாக இருப்பாள்.குற்றவுணர்ச்சிகளை தூண்டிக் கொண்டேயிருப்பாள் குழந்தைகளுக்கும் கூட

கோழிமடச்சி

கோழி மடச்சி பற்றிக் கொண்டோரிடம் அடையாளம் காட்டுவதில்லை.ஆண்களை வேலை செய்ய விடுவதில்லை.வேலையில் இருந்தாலே வீண்வேலை தோன்றும்.ஆண்களின் பணிமறுத்தல்,கோழிமடச்சியின் பிரதான குணம்.வேலைக்கு சென்ற இடத்தில் வேறு தொடுப்பு உண்டான கணவனைக் கொன்று தானும் தன்னைக் கொன்ற அகல் இவள்.சந்தேக ஆங்காரி.பணியிடங்களில் இடர்பாடுகள் அதிகமாகும் ஆண்கள் இந்த ரகசிய தேவிக்கு அரளி சாற்றி அகலிட்டு வர நீங்குவாள்.

சவம் தின்னி

இவள் வயதுக்கு வந்த கன்னியரை அண்டுபவள்.ஒரிடத்தில் அமர்ந்தால் எந்திரிக்க இயலாது.தோன்றாது.வேலை சொன்னால் கோபம் வரும்.இருந்திருந்து நிலவு வரும்.இருப்போரெல்லாம் வேண்டாதோர்,இல்லாதோர் எல்லாமே இனிமை என்பாள்.தாழ்வுணர்ச்சி தலைக்கும் மேல் நீண்டு நிற்கும்.கொம்பென்று அதனைக் காட்டுவாள்.சுட்டமிளகும் வெற்றிலைக் காம்பும் ,தேனும் படைத்து வர நீங்கி விடைக் கொடுப்பாள்



தோல்ப்பூச்சி கரையான்



1

எதிர்மறைச் சக்திகள் எவ்வாறாக சக்தி கொண்டவையாக இருக்கின்றன என்பது புதிர்தான்.பொதுவாகவே ஒரு நாட்டின் எதிர்மறைச் சக்திகளின் தலைவனிடம் ஒரு வணக்கம் போட்டு பின்வாங்குதலே நலம்.எதிர்த்து வாதிட முடியாது.எதிர்க்கவும் முடியாது.எதிர்த்தால் இரட்டிப்பு பலம் பெற்று எழும்புவார்கள்.மீண்டும் எதிர்த்தால் அவர்கள் அடைகிற முப்பலம்,எதிர்ப்போரை சிறியவர் ஆக்கிவிடும்.நீங்கள் சிறியவர் ஆகையில் உங்களைப் போல மும்மடங்கு பலத்தில் இருப்பார்கள்.மீண்டும் மீண்டும் நீங்கள் எதிர்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் பெரிதாகிக் கொண்டே போவார்கள் ஒன்று.இரண்டாவதாக நீங்கள் செய்கிற ஒவ்வொரு எதிர்ப்பிலும் மடங்கு மடங்காக பலமிழந்து கொண்டே வருவீர்கள்.வணங்கிப் பின் செல்லுதலே நலம்.பிறரிடம் ஆதிக்கம் செய்வதை மட்டுமே இன்பமாக எடுத்துக் கொள்பவர்கள் அவர்கள். வணங்க வணங்க பலம் குறைவார்கள்.சிறிதாவார்கள்.சிறிய அகல் ஏற்ற சிறிய அகல் அளவிற்கு சிறிதாவார்கள்.

எதிர்மறைச் சக்திகள் ,நேர்மறைச் சக்திகளுக்கு இணையாக வந்து கொண்டிருப்பவை.ஆகவே அவற்றை அழிக்க இயலாது.திடீரென பொங்கும்,பிரவாகமெடுக்கும் தன்மை கொண்டவை.மாயத்தின் பல விளையாட்டுகளை ஆடித் தீர்ப்பவை.அவற்றை நேர்மறைச் சக்திகளின் நிழல் சக்திகள் எனலாம்.தோன்றும் ஒவ்வொரு நேர்மறை சக்திக்கும் ,இணையான நிழல் சக்தி இருக்கிறது.ஒரு நேர்மறை தோன்றும் போதே உடன்தானே இந்த சக்திகளும் பிறக்கின்றன.எதிர்மறைச் சக்திகளை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் நேர்மறைத் தன்மை ஆக்கபூர்வமாக மாறும்.ஏனெனில் உங்கள் எதிர்மறைச் சக்திகள் உங்களுடையவையே.அவற்றை அழகுற கையாள வேண்டும். இல்லையெனில் உங்களை அறியாமலே எதிர்மறைச் சக்தியாக கரைந்து விடுவீர்கள்.எதற்கு அவை உங்களுடன் இணைந்தே தோன்றுகின்றன ? உங்களை அதன் மட்டத்திற்கு கரைப்பதில் தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது அதனால் தான்.

இதிலிருந்து மேலாக உயருவதற்கே முயற்சி தேவை.அதன்படி இருந்து விட்டுப் போவதற்கு எதுவுமே தேவையில்லை.தானாகவே சுயநலத்தில் இறக்கி எங்கு கொண்டுபோய் கட்டவேண்டுமோ,எங்கு கொண்டுபோய் கரைக்க வேண்டுமோ அங்கு கொண்டு போய் கரைத்து விடும்.கட்டிவிடும்.சுயநலத்தில் கட்டப்படுவதுவரையில் இதுதானே சரியானது என்று தோன்றும்.கரைந்த பின்னர்,முழுவதும் கரைந்த பின்னர் சுற்றி நின்று பந்தம் ,பாசம் ,காதல்,அன்பு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக கரைத்திருக்கிறார்கள் இந்த மண்ணுருவத்தை ஒன்றுமில்லாமல் போய்விட்டோம் என்று புரியும்.சரி செய்ய இருபது கண நேரம் கூட அதன்பின்னர் இருக்காது.ஒரேயொரு ஆலமரதிற்கேனும் நீர்வார்த்து விட்டு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்கலாமே என்று இருக்கும்.

செய்த தீமைகள் எல்லாம் ஒன்று சேர முன்வந்து நிற்கும்.செய்த வினைகள் யாருக்கோ முன்வந்து நிற்பதில்லை.உங்கள் முன்பாகத்தான் வந்து நிற்கும்.சுயநலத்திற்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் வயோதிகத்தில் தேள் கொட்டியது போல கிடந்து புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்.ஒன்று கூட சேமிப்பில் இல்லாதது அப்போதே விளங்கும்.உன்னை சுய நலத்திற்கு கூட்டிக் கொடுத்தவர்களும் ,பாவங்களையும் தீமைகளையும் உன்னை முன்னின்று செய்ய வைத்தவர்களும் உன்னைக் கரைத்தவர்கள்,கோஷமிட்டு உன்னைக் கட்டியவர்கள்,இவன் தீர்ந்துவிட்டான்,இனி இவனால் உபயோகமில்லை இனி சாகவேண்டும்,அதற்கான வேலைகளில் இறங்கிவிடுவோம் என இறங்குவார்கள்.இவர்களுக்காகத் தானே இத்தனையும் செய்தேன் ? யார் இல்லை என்று சொன்னார்கள்.நீ மொத்தமும் செய்தது இவர்களுக்குத்தான்.இவர்கள் தான் உன் சுய நலம்.அச்சு அசலாக உன்னைப் போலவே இருப்பார்கள்.நீ எல்லோரையும் எப்படி சுய நலத்தின் பொருட்டு அகற்றினாயோ,அதே விதத்தில் உன்னையும் அகற்றுவார்கள்.தேடி பலமுறை வந்த கடவுளரை எப்படி அகற்றினாயோ அது போல நீ மறைவாய்.கொஞ்சம் காற்று வெளியிலிருந்து தேவையாக இருக்கும்.அது கிடைத்தால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்குமே என்று இருக்கும்.அப்போது நீ தெரியால் ஒரு பசுவிற்கு கைப்பிடியளவு வைத்த பசுந்தாள் வெளியிலிருந்து காற்றாக வீசி அடங்கும்.மீதம் ஒரு சேமிப்பும் கையில் இல்லை என்பது விளங்குவாய்.

எதிர்மறைச் சக்திகள் உன்னைத் தடுத்து நிறுத்தி பக்குவம் செய்து கொண்டிருக்கின்றன.அவற்றின் வேலை அது.எமதர்ம மகராஜ் அவருடைய வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.இந்த ஜேஷ்டாவின் மழலையர் அவர்கள் வேலையை செய்கிறார்கள்.தூமா தேவியின் குழந்தைகள் இவர்கள் வரம் பெற்றே வருகிறார்கள்.தூமா தேவி வேறு யாருமில்லை.பராசக்தியே.அவர்கள் வந்து இங்குள்ள ஒவ்வொரு நடமாட்டத்தையும் ,ஒவ்வொரு ஆடவரையும் பரிசோதிக்கிறார்கள்.சனி பகவான் அவர் வேலையில் கருத்தாய் இருக்கிறார்.

2

தோல்பூச்சி கரையான் மடச்சியை,இந்த மடச்சியருள் உத்தமி என்று சொல்லலாம்.இவள் உடலின் தோல்பாகத்தில் பூஞ்சை போன்ற சிறு கரையான்கள் கூடி அரித்தால் எப்படி இருக்குமோ அப்படி மன உணர்வுகளை ஆடவரிடம் தூண்டி,சிறிது நேரத்திலேயே அதற்கு நேர்மாறாக சிகிழ்சையைத் தொடங்கி விடுவாள்.மனதில் கோடிக் கரையான்கள் அரித்தது ,படையெடுத்தது போலவே தோன்றுவதில்லை.மீண்டும் அரிப்பு,மீண்டும் வைத்தியம் என மாறி மாறி நிற்கக் கூடியவள்.தேன் மெழுகில் உருவம் செய்து வெட்பாலை எண்ணை அகல் இட வேண்டும்.குளிர்ந்துவிடுவாள்

பொதுவாக இந்த மடச்சியர்கள் தாங்கள் தாக்க விளைபவர்களிடம் தாய்மைப் பண்பையும் அதனோடு ஒட்டிய செவிலியர் குணத்தையும் இழந்து விடுகிறார்கள்.

3

ஏன் இவர்கள் பிறக்கிறார்கள் ?.பொதுவாக மாற்றங்களை பெண்ணே விளைகிறாள்.அதன் காரணமாகவே ஆண் மாற்றங்களை உருவாக்குகிறான்.எந்த புதிய மாற்றத்திற்கும் பெண் அடிப்படை.பெண்ணில்லாத இடத்தில் மாற்றமில்லை.ஒவ்வொரு புதிய மாற்றத்தின் பின்னணியிலும் ஏராளம் பெண் சக்தி செலவளிகிறது.ஆனால் அவள் விரும்பிய மாற்றங்கள், உருவாகி வந்த பிறகு ,அதனை சந்தேகித்து,பின்னடைந்து,விலகி,தாக்கியழித்து பேயுரு கொள்கிறாள் பெண்.அவள் எளிதில் நிலைகொள்வதில்லை.அதற்கு அவளுக்கு பிறகு நீண்டகாலம் தேவைப்படுகிறது.ஆண் முதலில் தயங்குகிறான்.பின்னர் உடனடியாக நிலைபெற்றும் விடுகிறான். நிலவுடமை ஆட்சி மறைந்து புதிய நவீன அமைப்பும் ஆட்சிமுறையும் உருவான காலகட்டத்தில் தோன்றிய எதிர்மறை பெண்டிரே இந்த மடச்சியர்கள்.

இவர்கள் தோன்றிய வீடுகளில் ஆடவர்களால் நள்ளிரவுகளில் மரங்களில் கட்டி வைத்துத் தாக்குதலுக்குள்ளானார்கள்.இதனால் மரித்தோரும் உண்டு.இவர்கள் உருவாக்கும் உளவியல் வன்முறை தாங்காமல் தன்கொலை நாண்ட ஆடவர்களும் உண்டு.

சமுக மதிப்பு மிக்க குடும்பங்களிலேயே இவர்கள் முதலில் தோன்றி பின்னர் அனைவருக்கும் பரவினார்கள்.பகலில் சமூக மதிப்புள்ள குடும்பங்கள், நாகரீக கோலத்தில் இருந்தமையால் நள்ளிரவுகளில் இவர்கள் தாக்கப்பட்டார்கள்.

[ தொடரும் ]


Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1