அய்யா வைகுண்டர் இதிகாசம் - 8 வாதையர் கூட்டுறவு தெய்வங்கள்
அய்யா வைகுண்டர் இதிகாசம் - 8
வாதையர் கூட்டுறவு தெய்வங்கள்
செங்கடா காரன்,காலன் ,முண்டன் ,கட்டையேறும் பெருமாள் அல்லது பண்ணிக்காரன்,சுடலை மாடன்,வண்ணாரமாடன் ,சங்கிலி பூதத்தான் உட்பட இசக்கி உட்பட இருபத்தியொரு படுக்கைகள்,பலிகள் ,பீடம்,அகல் கொண்ட தொகுப்பு தெய்வங்கள் இவை.காட்டின் ஆதி தேவதைகள்.காடு எங்கிருந்தாலும் காட்டுக்குள் இவை நிச்சயமாக உண்டு.பெரும்பாலோர் இன்று உயிர் இருந்து நம்மோடு நேரடி உறவும் இருந்தால் மட்டுமே உயிர் உண்டு பிற பொருட்களுக்கு என்று நம்புகிறோம்.அப்படியாக நிறைய காலம் பாடம் சொல்லித் தந்து விட்டார்கள்.குறிப்பிட்டவகையான தர்க்கதிற்கு,குறுகலான வரையறை கொண்ட அறிவிற்குப் பழக்கி விட்டார்கள்.லௌகீக விடையாகச் சொல்வதானால் கூட இரண்டு செய்திகளைப் பொது விடைகளாகச் சொல்வேன்.நீங்கள் காட்டிலேயே கிடந்து இந்த நம்பிக்கைகளிலேயே கிடந்து உழல்பவர்கள் எனில் போதும்.அவற்றிடம் செல்லம் கொஞ்சி செல்லம் கொஞ்சி வெளியுணராமல் அடைந்து கிடந்தது போதும். இவர்கள் பாசக்காரர்கள் கொஞ்சி கொஞ்சி விடமாட்டார்கள்.நீங்கள் பெருந்தெய்வங்களைச் சென்று சேர்ந்து விட வேண்டும்.இப்படி எட்டு வயதுவரையில் மடியிலேயே கிடந்து பால்குடிக்கக் கூடாது.அது ஐய்யம்.
சிலரை இவை அடித்து வெளியே போய்விடு என்று துரத்தி விடுவதும் உண்டு.ஒன்றுக்கும் போக்கிடம் இல்லாதவனை,தேற மாட்டான் என்பவனை சாமியாடியாக மடியில் கிடத்திக் கொஞ்சுவதும் உண்டு.
அதிலிருந்து எழும்பி தத்துவப் பின்ணனி கொண்ட சைவத்திற்க்கோ ,வைணவத்திற்கோ சென்று விடவேண்டும்.என்னைப் பொருத்தவரை நான் என்னை வைணவன் என்றே அழைத்துக் கொள்ள விரும்புவேன்.நான் ஒரு வைணவன் அய்யா வைகுண்டர் வழியில் என்பதே இதன் விரிவு.சிவனும் எனக்கு முக்கியமே.இது அய்யா சொல்லிக் கொடுத்தது.அம்பலப்பதியில் சிவ மேடையில் அய்யா ஏறி அமர்ந்திருக்கிறார். தென்கோடியில் உள்ள சிதம்பரம் அம்பலபதி.சிவமும் ,அரியும் ஒன்றாய் அமர்ந்திருக்கும் பதி.நம்மாழ்வார் எனக்கு முக்கியமே ,ஞான ரசம் அவர்.திருப்பதிசாரமும் ,திருவட்டாரும் அவர் பாடல் பெற்ற பதிகள்.திருப்பதிசாரம் திருவாழ்மார்பனின் ஊரே நம்மாழ்வாரின் அம்மை ,என்னம்மை உடைய நங்கை நாச்சியார் பிறந்த ஊர்.எப்படி எனக்கு பிடிப்பற்றுப் போக முடியும் ? நம்மாழ்வாரின் பதிகள் அத்தனையும் அந்த நாராயணன் சுவை உணரும் ஊர்கள் அல்லவா ?
ராமானுஜர் எனக்கு அதிமதுரம்,நாராயணன் எங்கிருந்தாலும் திருவரங்கத்திற்கு பள்ளிகொள்ள சென்றே ஆக வேண்டும்.அத்தனை நாராயணனும் அதிபுலரி ஸ்ரீவேலி முடித்தே சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.இது அய்யன் ராமானுஜருக்காக... ராமானுஜர் இருக்கும் திருப்பதிகள் எல்லாமே மக்களுடையவை.ஆண்டாள் எங்கிருந்தாலும் கோடி ஐஸ்வரியம்.ஆனால் இவர்களையெல்லாம் அறிவதற்கு அய்யா வைகுண்டரின் பாதையிலேயே நான் மேலேறிச் செல்ல முடியும்.அல்லது அய்யா வைகுண்டர் என்னும் மிகவும் மேன்மையான இடத்தில் இருந்து காண வைகுண்ட தரிசனம் போல இவர்களையெல்லாம் பெரிய உயரத்தில் இருந்து அய்யா காட்டித் தருவார்.காட்டித் தந்திருக்கிறார்.திருகுறுங்குடி,நாங்குனேரி என எல்லாமே அய்யாவின் பதிகள் தாம்.சற்றைக்கு சற்றே கொஞ்சம் முந்தியவை.பழமையானவை.பழமையானவை அனைத்துமே புதுமையாகிற இடத்தில் புதுமையானவையே. பழமையின் நெடிகளில் சிலவற்றை அய்யா சுத்தபடுத்தி சான்றோரின் கைகளில் புதிய பதிகளாக ஒப்படைத்திருக்கிறார்.
சைவத்தில் இருந்து வந்தவர்களும் முக்கியமே.தத்தாத்ராயர் அய்யாவிற்கு முன்பாகவே சிவனடியாராக சுசீந்திரத்தில் இருந்து தோன்றி வந்தவர்.தாணுமாலயன் என்றதில் அவர் பெருமை உண்டு.தாணுமாலயனாக அவதாரமாக எழுந்தருளியவர். முன்னரே முப்பொருளும் ஒருபொருள் என்று கண்டவர்.எளிய மக்களிடத்தே அவர் அருளிய இன்பம் வந்து சேரவில்லை.தத்தாத்ராயரின் அவதாரம் நிகழ்ந்தது சுசீந்திரம் பதியில்.அதுபோல அறம் வளர்த்த நாயகி அம்மன்,திருவேலங்காட்டு காரைக்கால் அம்மையை ஒப்ப மேன்மை கொண்டவர்.சுசீந்திரம் தாணுமாலயன் சந்நிதியில் இவருக்கு தனியான கௌரவம் உண்டு.வெள்ளாளர் குடியில் பிறந்தவர்.
பிற சந்நிதிகளுக்கும் அய்யாவின் பதிகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.பிற கோயில்களில் அனைத்து அகப்பொருளையும் தனித்தனியே வணங்க வேண்டும்.அய்யாவின் பதிகளில் அனைத்தையும் ஒருபொருளாக வணங்கிட முடியும்.நவகிரக சந்நிதி ,பகவதி சந்நிதி,தாயார் ச் ந் நிதி உட்பட அனைத்தையும் ஒருபொருளாக்கியவர் அய்யா.ஒரு பொருளாக்கி அவரே அதுவாகவும் நின்றவர்.ஏக குருவாக படைத்து அது நிறைந்தவர் சிவ சிவா...படைத்து நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர்,பங்காளர் பங்காளர் பாரு லோகம் அளந்தவர்,அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி
***
ஓருவேளை இந்த வாதையரையே அறியாமல்,இந்த காட்டு தெய்வங்களின் குரல் புரியாமல் வளர்கிறீர்கள் எனில் எங்கிருந்து புறபட்டீர்களோ அது தெரியாமல் போய்விட்டீர்கள் எனில் மீண்டும் இவற்றையெல்லாம் காணத்தான் வேண்டும்.திரும்பி வந்து ஒன்றிலிருந்தே மேலேறி உயரத்திற்குச் செல்வது போல.வெளிநாட்டு ஆய்வாளர்கள்,அவர்களுக்கு உதவிய இந்திய சம்பள அறிஞர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.இந்த தெய்வங்களை கட்டுவதற்கு அவர்கள் எடுத்த முயற்சி பெருந்தெய்வ அவதூறுகளின் அளவிற்கு விரிந்தது.முதலில் இந்து மதத்திற்கு எதிராக இவர்களை நிறுத்த முயன்றார்கள்.இயலவில்லை.அது வேறு இது வேறு வாதிட்டார்கள்.வாதம் முடிந்து வந்து பார்த்தால் இந்த தெய்வங்கள் அத்தனையுமே சிவனிடம் வரம் வாங்கி வந்து இந்துமதத்தின் மடிமீது படுத்திருப்பவை.மாகாவிஷ்ணுவின் சொல்பேச்சிற்கு எந்த நேரமும் இணங்கக் காத்திருப்பவை.
மண்ணிலேயே கால்மிதித்துப் பார்த்திருக்க வில்லையானால் மண் மிதித்துப் பார்க்க வேண்டும்.மழை நனைந்து பார்ப்பது போல ,கடல் குளித்துக் காண்பது போல ; வாதையர் குலத்தின் பூர்வீக ஆழம் .மிக ஆழம்.
[ தொடரும் ]
Comments
Post a Comment