அய்யா வைகுண்டர் இதிகாசம் -20 நாராயணர் வழிபாடு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -20

நாராயணர் வழிபாடு

தொல் நெடுங்காலமாகவே நாராயணர் வழிபாடு இந்து நாடார்களிடம் உண்டு.பெரிய சாமி,கிருஷ்ணன்,நாராயணர்,அய்யா வைகுண்டர் ஆகிய பெயர்களில் அவர் இந்த வழிபாடுகளில் அழைக்கப்படுகிறார்.வைணவத்தின் கிளை போன்ற வழிபாட்டு முறை அல்ல இது.கிராம தேவதைகளுடன் நாராயணரையோ ,கிருஷ்ணரையோ,அய்யா வைகுண்டரையோ இருத்தி வழிபடும் முறை.கிராமதேவதைகள் வழிபாடுகளில் பெரியசாமி என்று அழைக்கப்படுகிற பீடம் நாராயணர்குரியது.இதில் ஆர்வமூட்டும் செய்தி என்னவெனில் இசக்கியோடு நாராயணர் அமர்ந்திருந்தால் இசக்கி பிரதானமாகவும் துணைக்கு சுடலை ஒருபக்கமாகவும் நாராயணர் ஒருபக்கமாகவும் இருக்கிறார்கள்.ஆராதனைகள் நாராயணருக்கே முதலில் நடைபெறும்.ஆனால் இசக்கியே பிரதான தெய்வம்.இது முற்றிலும் வேறு வகையான அடுக்குதல் முறை.மேலிருந்து கீழாக பண்பாட்டு அடுக்குமுறை ஒன்று இருப்பது போலவே,இது கீழிருந்து மேலாக செல்லும் அமைப்பு முறை.நாராயணர் பெரியவர் தான்.அவருக்கு அதனாலேயே முதல் பூசை அளித்துவிடுகிறோம்.ஆனால் நாராயணரின் விஸ்வரூபம் இங்கில்லை.அவர் சுருக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றாக அமர்ந்திருக்கிறார்.நாராயண குரு இது எங்களுடைய சிவன் என்கிறார் பாருங்கள்.அது ஆணவத்தால் சொல்வதல்ல,ஒடுக்குமுறை அரசியலின் பொருட்டும் சொல்வதல்ல.இந்த பார்வையிலிருந்து சொல்வது.இது முற்றிலும் வேறுவகையான பார்வை.இங்கே வழிபடப்படுவது நாடார்களின் நாராயணன்.

முத்தாரம்மை வழிபாடு தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே நாராயணர் வழிபாடு இருந்திருக்கிறது.முத்தாரம்மன் கோவில்களில் கன்னிமூலை பீடம் நாராயணர்குரியது.சங்கு சக்கரத்தோடு கற்சிலை ,அல்லது சிமென்ட் சிலைகள் ஆகியன அவருக்குண்டு.சில இடங்களில் உருவங்கள் ஏதுமற்ற பீட அமைப்புகளும் உள்ளன.கணபதி,சாஸ்தா,துர்க்கை போன்றவர்கள் நாடார் வழிபாடுகளில் அதுவும் முத்தாரம்மன் கோயில்களில் சமீப பத்துபதினைந்து ஆண்டுகளில் தோன்றியவர்கள்.பழங்காலங்களில்  முத்தாரம்மன்,சுடலை போன்ற தெய்வங்களின் கோட்டைகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் முறையில்லை.கிடையாது.இவை மேலிருந்து கீழ் நோக்கி வரும் பழக்கங்கள்.அரசியல் காரணங்களால்,பிற காரணங்களால் வருகின்றன.தேவையால் வரவில்லை.இந்த புது வருகை இல்லாவிடினும் மக்களுக்கு அதனால் தீமையெதுவும் கிடையாது.இந்த புது வரவு உண்டாவதற்கு முன்னரே முத்தாரம்மன் கொட்டாலைகளில் மக்கள் அசைவம் ஏற்பதில்லை.

நாராயணர்கென்று தனிக்கோவில்களாக அதிகம் இல்லை.அகஸ்தீஸ்வரம் தொட்டு ராஜாக்கமங்கலம் வரையில் எடுத்துக் கொண்டால் ஈத்தாமொழி அருகில் பஞ்ச பாண்டவர் கோயில் இருக்கிறது. பெரும்பாலும் அது குடும்ப கோயிலாகவே இருக்கிறது என்றே நினைக்கிறேன்.நச்சுப்பதி கல்மண்டபக் கோயில் பெருமாள் லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.அடுத்து தொட்ட அறையில் சிவலிங்கம் நந்தியுடன் இருக்கிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் மதகனேரி என்ற இடத்தில் ஆதிநாராயணர் கோயில் ,இப்போது அது வைகுண்டசாமி பதியாக வழிபடப் படுகிறது.பாளையங்கோட்டையில் பெருமாள் கோயிலில் அவர் வைகுண்டராக வழிபடப்படுகிறார்.பிள்ளையாருக்கு தனி கற்கோயில் முகிலன்விளைவிளையில் குடும்ப கோயில். வல்லங்குமாரன் விளையில் கண்ணனுக்கு தனிக்கோயில். உவரி சுயம்புலிங்கசாமி கோயில் தவிர்த்து பிற இடங்களில் சிறிதாக உருவான சிவன் கோயில்கள் சமீப காலங்களில் உருவானவை.இருளப்பபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் பசுபதீஸ்வரராக அறியப்படுகிறார்.

தத்துவங்கள் ,தொடர் உரையாடல்கள் ,சிந்தனைகள் ஆகியற்றின் வழியே உருவாகும் பேரமைப்புகளாக இந்துக் கோயில்கள் ஒருபுறம் இருக்க ;மறுபுறம் மக்களிடமிருந்து அவர்களின் பரிணாமத்திற்கு ஏற்ப பெருகி ஊற்றெடுக்கின்றன.சதா ஒவ்வொரு நொடியிலும்  ஊறி கொண்டிருக்கின்றன.இரண்டு கிளை நதிகள் வேறு வேறு திசைகளில் இருந்து திரண்டு வந்து கலக்கும் இடம் இந்து தர்மத்தில் மிகவும் முக்கியமானது. நதிகள் சங்கமிக்கும் இடங்கள் இந்துக்களுக்குப் புனிதமானவை.கடல்கள் சங்கமிக்கும் இடங்களும் அது போன்றே.மேலிருந்து வரும் சரடும் கீழிருந்து வரும் சரடும் சரியாக இணையும் இணைப்பு மிகச் சரியாக இசைந்து தர வேண்டும்.மேலிருந்து வரும் சரடு இணைய எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் அதிகமானால் பாதிக் கிணற்றில் தொங்கும் கயிற்றின் நிலை போல ஆகும்.நீர் உள்ள இடம் வரையில் தத்துவங்களால் செல்ல முடியவில்லையெனின் அந்த இடங்களை அவதார புருஷர்களே வந்து நி    ரப்புகிறார்கள்.

சிவ சுடலை ஆன பின்னரும் கூட சுடலை ஏற்கபடவில்லை,இசக்கி ஏற்கப்படவில்லை.அவர்களுக்கு முறையான இடமில்லை.ஆனால் மக்கள் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாராயணரை ஏற்று பூசை செய்து கொண்டிருக்கிறார்கள்.இது ஒரு முரண்.ஒரு கை தானேங்கி நீள்கையில் மறுகையும் தானேங்கி குறுக்காமல் நீளவேண்டும்.இல்லையெனில் மகா கருணையைக் கைவிட்டுவிடுவோம்.மஹா கருணையை கைவிட்ட பின்னால் வெற்றுச் சடங்குகளே கையில் மிஞ்சும்.பொருள் விலகிப் போகும்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1