அய்யா வைகுண்டர் இதிகாசம் - 5


பேய்கள்-அரக்கர்கள்-சான்றோர்கள்

1 பேய்கள்


மனம் சிதறிக் கிடந்தால் நிலம் பேய் பட்டுவிடும்.பாரம்பரிய சமுகங்களிடையே நிலவும் பேய்களை அகற்ற எல்லாமதங்களும் அதனதன் வழிகளைப் பேணுகின்றன.இந்த நிலம் முழுதும் பல்வேறுவிதமான மரங்கள் நிற்பதால் பல்வேறு மரங்களும் இங்கே பேய் கொண்டு நிற்பவை.பேய் கொண்ட மனம் பேய் கொண்ட மரங்களை சரியாக அடையாளம் காணும்.மனிதன் அகம் சிதறினால் தான் வாழும் நிலத்தில் சிந்தி விடுகிறான்

மனதை முதலில் கோர்க்க வேண்டியிருக்கிறது.ஆரம்பகால மனம் சிதறுண்டது.ஒவ்வொருஅடிப்படைப் பண்பும்,ஒவ்வொரு திக்கில் இழுத்துக் கொண்டிருக்கும்.அடங்காது.எவ்வளவிற்கு ஒருங்க முடியவில்லையோ அவ்வளவிற்கு எதிர்க்கும்.திறக்காது.பேய்மையுறும்.அடிப்படை பண்புகள் அனைத்தும் ஒன்றுகூட்டுவதற்கு முன்பு தனித்தனியாக இருப்பவையே.சந்தேகம்,வஞ்சம்,பழியுணர்வு,இருப்பு கட்டுதல் ,அவதூறு செய்தல்,கோள்மூட்டுதல் இவையனைத்தும் அடிப்படைப் பண்புகளே.எத்தனை கற்று மேம்பட்டாலும் பயிற்சி குறைந்தால் மீண்டும் அடிப்படை பண்புகள் ஏறி மேலே அமர்ந்து கொள்ளும். இப்படியிருக்காதீர்கள் என்று ஏன் சொல்கிறார்கள் எனில் இவை ஓங்குவதால் கெடுபலன்களும் ஓங்குகின்றன.வினை ஓங்குகிறது,சிலகாலம் கழிய யாரோ எதிராக எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும்.செய்வினை என்று தோன்றும் .பேய் உள்ளே நுழைந்து விடும்.பேய் உள்ளே நுழைந்தால் அதனை வருத்துவதற்க்கு எவ்வளவு ஆகாரம் போட்டீர்களோ,பின்னர் பேயை எடுப்பதற்கும் அவ்வளவு ஆகாரம் போட வேண்டும்.சொல்லித்தருவதால் மட்டும் அவை நெறிகளுக்குள் வந்து விடுவதில்லை.சுய நலம் மட்டுமே சிதறுண்ட நிலையில் மனதில் எரிகிற நெருப்பு போல ஓங்கியிருக்கும்.எதற்கென்றே தெரியாமல் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்.ஒவ்வொரு நெறிக்குள் வந்து சேரவும் மனதிற்கு பயிற்சி அவசியம்.பயிற்சியற்ற ஒரு நெறியும் நில்லாது.நிலைக்காது. பயிற்சியால் மட்டுமே மனம் கீழ்படிகிறது,கேட்கிறது.சொல்லிக் கொண்டிருக்கிறவரையில் கேட்டாலும் ,செவிமடுத்தாலும் பயிற்சியால் மட்டுமே எந்த காரியத்தையும் மனதால் உணர்ந்து கொள்ள முடியும்.

அதனால் தான் பல சமய நெறிகளும் சொல்லுவதில்லை,பின்பற்றச் சொல்கின்றன.ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யச் சொல்கின்றன.அய்யா வைகுண்டரின் உச்சுப் படிப்பு என்ற ஒன்று இருக்கிறது,தேவாமிர்தம்.திருவாசகம் தொண்ணுத்தாறு வரிகள் எனில் உச்சுப் படிப்பு ஐம்பது வாசகங்கள்.வாரத்திற்கு ஒரு முறை படித்தால் ஏழு முறை மதிய அன்னத்திற்கு முன்னர் படிக்க வேண்டும்.அய்யாவழி பதிகள் ,நிழற் தாங்கல்கள் அனைத்திலும் பின்பற்றிப் படிப்பார்கள்.முதல்முறை நின்றும் ஆறு தடவைகள் உட்கார்ந்தும் படிக்க வேண்டும்.தினமும் அன்னதிற்கு முன்னர் படிக்க வேண்டும் என்பதே விதி.அய்யாவழியில் ஒருவனுக்கேனும் அன்னம் அளிக்காமல் அன்னம் எடுத்துக் கொள்ள்க் கூடாது என்றும் விதி இருக்கிறது.

தினசரி வேலைகளால் இயலாதவர்கள்,வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமைகளில் விட்ட நாட்களுக்கும் சேர்த்து ஏழு முறை படிக்க வேண்டும்.எத்தகைய அசுரனையும் சிவனாக எழும்பச் செய்கிற பெரிய மந்திரம் இது.இந்த மந்திரத்தினை ஏழுமுறை படித்து எழும்பும் அசுரன் அரை மணி நேரத்திற்கேனும் சிவனை தன்னகத்தே கொண்டிருப்பான்.அசுரனை மயில் வாகனமாகவே மாற்றி தன்னகத்தே வைத்துக் கொண்டவன் முருகன்.அசுரரிலும் வெறுப்பு அய்யா வைகுண்டருக்கில்லை.அசுரன் ஓங்குகையில் சிவம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைகிறது.சிவம் றைந்திருக்கையில் எண்ணிய எண்ணங்கள் பேறாகின்றன

மோட்ச உயிர்க்கும் நரக உயிர்க்கும்
தீ நரகப்பாவி உயிர்க்கும்

ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும்
வைகுண்டபதவி உயிர்க்கும்

எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவ சிவ சிவசிவா அரகர அரகரா


###


2 அரக்கர்கள்-சான்றோர்கள்


அய்யா வைகுண்டர் மகா விஷ்ணுவின் அவதாரமாக இந்த நிலத்தில் தோன்றுவதற்கு காரணமே இங்கே நிலமும் மனிதர்களும் அரக்கர் குலமாக மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதே .அரக்கர்களுக்கு சாதியோ மதமோ இல்லை.எல்லாவற்றிலும் நுழைந்து பரந்து விரிந்து விடுவார்கள்.ஒரு அரக்கன் எண்ணற்ற அரக்கர்களை உருவாக்குகிறான்.அரக்கர் நெறி பரவும் போது நிலம் முழுதும் அரக்கர்கள் தோன்றுகிறார்கள்.ஏனெனில் அரக்கர் நெறி ஆரம்பத்தில் தேனாகத் தித்திக்கக் கூடியது.

எந்த பெண்ணையும் எப்படி வேண்டுமாயினும் தூக்கி விடலாம் என நினைத்தால் ,நினைப்பை செயலுக்கு கொண்டுவரும் ராவணாதி மனமும்,அதிகாரமும் கைவரப் பெறுமானால் அதில் உடனடித் தித்திப்பு இருக்கிறதுதானே ? பிறன் மனையை பெண்டாள நினைத்தால்,நவீன சிந்தனைகள் ,அவள் உடன்பட்டால் போதாதா என்று கேட்கின்றன .அதனை விடுதலையாக கருதுகின்றன.இல்லை அவனும் உடன்பட வேண்டும்.பணதிற்காகவோ,புகழிற்காகவோ ,அதிகாரத்திற்காகவோ அன்றி அவன் சுயேட்சையாக உடன்பட வேண்டும்.அது சாத்தியம் என்பதற்கு பூமியில் இதுவரையில் உதாரணங்கள் இல்லை.அவன் ஒதுங்கி இருந்து சாபமிட்டு ஊரும் பேரும் அழிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்ணகி அழித்தது போல பெண்குழந்தைகளைக் காக்க இயலாத தகப்பன்மார்கள் ,மனைவி ஆதிக்கத்தால் அபகரிக்கபடும் கணவர்கள் சாபம் ஏகி அழிந்த குடும்பங்கள்.யார் வெளியில் தெருவில் வந்து நின்றாலும் பிரச்சனையே.பெற்றோரோ,குழந்தைகளோ,மனைவியோ,கணவனோ ,மனைவியோ யார் தெருவிற்கு பிறிதொருவரின் துரோகத்தால் வெளியில் வந்து நின்றாலும் பிரச்சனையே.ஒருவேளை தவறு வந்து நிற்பவர்கள் பக்கமாகவே கூட இருக்கலாம்.ஆனாலும் இங்கே இந்த செயலுக்காக அஞ்சாதவர் உள்ளமில்லை ஏன் ? விளைவுகள் பற்றிய பெரிய ஆராட்சிகள் நிறைந்தது இந்து மதம்.அதிலிருந்து நெறிகள் வகுக்கப்பட்டு பேணப் படுகின்றன.அரக்கர் நெறிகள் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவை உடனடி விளைவுகளின் பக்கமாக நிற்பவை.

அரக்கர்களுக்கு ஒற்றை நெறியே உண்டு.சுய நலமே அந்த நெறி .யாரை வேண்டுமாயினும் எப்படி வேண்டுமாயினும் வழிபறி செய்யலாம் உடல்பலத்தால் ,ஆயுத பலத்தால் ,கூட்டாளிகளின் பலத்தால்,சேர்க்கை பலத்தால் என்பதே அந்த நெறி.இந்த அரக்க நெறிகுரிய சகஜ நிலையை அரக்கர்கள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள் .அரக்கர்கள் நான்குபேராகக் கூடாத சமயத்தில் பலகீனமடைந்தும் ,கூடிவிட்டால் உருவம் பேருருவமாகவும் ஆகிவிடும் பண்பு கொண்டவர்கள்.சான்றோர் பண்பிற்கு எதிர் நிலை இது .சான்றோர்கள் தனியாகவே விஸ்வரூபத்தில் இருக்கும் வரம் சித்தித்தவர்கள்.

அரக்கர்களின் பிரச்சாரம் வசீகரிக்கக் கூடியது.உடனடி விளைவுகள் உண்டாக்ககூடியது.நீடித்த விளைவுகளை உருவாக்குவதற்கே நிறை நெறிகள் தேவை.உடனடி அடைதல்கள் ,உடனடி பலன்கள் ஆகியவற்றுக்கு அரக்கர் நெறிகளே உதவும்.அதனால் அவசர அடைதலை வேண்டும் சமூகத்தில் அரக்கர் நெறிகளே வெல்லும்.

உடனடியாக ஒன்றினை அடைந்து ,தர்மங்கள் எதற்கும் பணியாமல் ,இறை அச்சமின்றி கொண்டுவந்து சேர்த்து தலைமுறைகள் பெரும் அவதிக் உள்ளாவார்கள் எனில் அதனால் என்ன பலன் ? கொலை செய்து கொண்டு வந்து சேர்த்தது என்னவாகும் ?

மக்கள் கணக்கு ஒன்றிருக்கிறது.அவர்கள் ஒருவனைக் கண்டறிய முன்னர் நான்கு தலைமுறையும் பின்னர் நான்கு தலைமுறையும் பார்க்கிறார்கள்.சாஸ்திரக் கணக்கென்பது இதனினும் கடுமையானது.வெளிநாடுகளில் இப்படி இல்லாமல் இருக்கலாம்.அவர்கள் வேறுவிதமாக அளப்பவர்களாக இருக்கலாம்.ஆனால் ஒன்று வெளிப்படை.இங்கே இந்தியாவில் பொறுப்புகள் அதிகம்.சடலத்தை வீசியெறிந்ததோடு எல்லாம் முடிந்திற்று என்று ஆவதில்லை.பின்னரும் பொறுப்புகள் நீள்கின்றன.சாதாரணமான ஒருமனிதன் மூன்று தலைமுறைகளுக்கு நேரடியாகவே பேசுபொருளாக இருக்கிறான். அது என்ன ஆனால் என்ன ? எப்படியிருந்தால் என்ன என்பதில் சுய நலமும் ,அரக்கர் நெறிகளும் வந்து விடுகின்றன.

பத்து தலைமுறைகளாக மகாவிஷ்ணுவின் பாதமே கதி என்று இருக்கிறோம்,ராவணனைப் போல சிவனே துணை என்று இருந்தும் எப்படி அரக்கர் நெறி வந்தாட்கொள்கிறது.இறை அச்சம் கொண்டு வாழ்ந்தவர்களால் நீண்ட கால பலன்கள் ,ஐஸ்வரியங்கள் வந்தடைகின்றன.இந்த இறை அச்சம் உள்ளன்போடு போற்றப்படாத காலங்களில் ,ஏற்கனவே வந்து சேர்ந்தவற்றின் ஆணவம் பெருக்கெடுக்கும். அழியப் போகிறவனின் தடங்கள் முகமெங்கும் பரவி அரக்கர் நெறி வந்து புகுந்திருக்கும்.கண்ணுக்கு நே ரடியாக புலபட வேண்டுமாயின் ஞானம் வேண்டும்.அரக்கர் நெறிகள் ஞானம் குருடான பின்னர் ஒருவனின் அகத்திற்குள் ஏறி அமரக் கூடியவை.

மாலைப்பிள்ளை கன்னியர் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.மகாராஜா நாடு காண்வலம் வருகிறார்.வைகுண்ட சாமிகளுக்கு இருநூறு ஆண்டு காலம் முன்னர் நடக்கிறது.போக்குவரத்து வீதியில் மாலைப்பிள்ளை கன்னியர் திரண்டு நிற்கிறார்கள்.இரட்டைப் பிள்ளைகள்.அவர்கள் நிற்குமிடத்தில் பிச்சி மணம் வீச நின்று கொண்டிருக்கிறார்கள்.திரும்பி வருவதற்குள் பிள்ளைகளை தயார்படுத்தி வைக்குமாறு தகப்பனுக்குக் கட்டளை வருகிறது

இப்போது போலில்லை.எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத காலம்.ஊருக்கு ஒரிரு சம்சாரிகளே வீடு கொண்டவர்கள்.பிறர் ஓலைப் பெரைகளில் ஜீவன் கழிப்பவர்கள்.கட்டளையைக் கொண்டுவருகிறவர்களைக் கூட எதிர்க்க முடியாது.பெரும்பாலும் கட்டளையைக் கொண்டு வருகிறவர்கள் உள்ளூர் அரக்கர்களாக இருப்பார்கள்.ராஜ்ஜியத்தின் உள்ளூர் அதிகாரம் இவர்களிடமே ஓங்கியிருக்கும்,அரக்கர் நெறிகளுக்காக எதையும் சாதிக்கும் அதிகாரம்.மாலைப்பிள்ளையரின் சகோதரர்கள் சென்றவர்கள் திரும்புவதற்குள் வீட்டின் நாலுகெட்டில் குழி அமைத்து கன்னியரை உள் இருத்துகிறார்கள். குழி இறக்கபடுகையில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்கிற கதறல் ஒலி நான்கைந்து ஊர்களுக்குக் கேட்கிறது. உங்கள் குலத்தில் பெண் வாரிசுகள் தளைக்காது என்று சாபமிட்டு இரண்டு கன்னியரும் இசக்கியாகிறார்கள்.நாலுகெட்டில் வைத்து தலைமுறை தலைமுறைகளாக விளக்கு போட்டு அருள் வேண்டிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது குடும்பம்.அவர்கள் இன்னும் செவிசாய்க்கவில்லை.இப்படி பல இசக்கிகள்,இசக்கிகளைப்பாதுகாக்க இயலாத சுடலைகள்.

நாலாந்தர பெண் சாபமிட்டாலும் பலிக்கும்.ஏனென்றால் பெண் அவள் இயல்பிலேயே தெய்வம்.ஆண்கள் பல வலிமை மிக்க காரியங்களைச் செய்து அடையும் பெரு நிலைகள், சாதாரணமாகவே ,ஒன்றுமே செய்யாமலே பெண்ணுக்கு இருக்கிறது.வலிமையான காரியங்களை செய்தால் மட்டுமே ஆண் தெய்வமாகிறான்.பெண் இயல்பிலேயே தெய்வம்

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1