அய்யா வைகுண்டர் இதிகாசம் -23 அய்யா மனிதப் பிறப்பு

அய்யா வைகுண்டர் இதிகாசம் -23

அய்யா மனிதப் பிறப்பு

3

வெள்ளாங்குடிகளில் போய் வேலை செய்யலாம்.அப்படித்தான் செய்து வந்தார்கள்.வடக்கு தாமரைக்குளத்திற்கு அந்தப்பக்கம் தொடங்கி சுசீந்திரம் கடந்து மருங்கூர் வரையில் வேலையுண்டு.அந்த பகுதி முழுவதுமே பத்துப்பதினைந்து விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய வெள்ளாள குடும்பங்களுகுரியவைதான்.ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்டார்கள்.மருங்கூர் முருகன் கோயில் ,வடக்குத்தாமரைக் குளம் சிவன் கோயில்,பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், தெங்கம்புதூர் தாணுமாலையன் சிவன் கோயில் இவர்களுக்கு வகைப்பட்டவை.சாதிய ஒழுங்குகளை இறுக்கமாக கடைபிடித்த ஊர்கள் இவை.நெல்லுக்கு வேலை உண்டு.பருவம் முழுக்க வேலை செய்து அறுப்புக்குக் கூலி.பட்டினி வராது.ஆனால் குனிந்து நின்று கூலி வாங்கி வரவேண்டியிருக்கும்.அவர்களின் பேச்சே நளி கொண்டு வினோதமாக இருக்கும்.பிறரும் சிந்திப்பார்கள்,தங்களைக் காட்டிலும் பிறருக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்றெல்லாம் தெரியவே தெரியாது அவர்களுக்கு.சட்ட திட்டங்களையும் ,அரசையும் கண்மறைத்து ஐந்தாறு நூற்றாண்டுகளை வாழ்ந்தவர்கள்.பிராமணர்களுடைய நஞ்சை நிலங்களை பாட்டத்திற்கும் எடுக்கலாம்.பாட்டத்திற்கு எடுத்தால் கள்ளன் என்று பேரெடுக்க வேண்டிவரும்.உழைப்பையே அறியாதவர்கள் கொஞ்சம் கூடுதல் குறைவு வந்தால் உழைப்பை சிறுமை செய்ய கள்ளப்பெயர்தான்முதலில் சூட்டுவார்கள்.அதற்கு துணிந்தவர்கள் மட்டுமே பாட்ட நிலம் பயிரிட்டார்கள்.அதிலும் மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் பெயரில் விசுவாஸம் கிடையாது.கள்ளம் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.அவர்கள் பண்பு அது

நாடார்கள் விட்டு ஒதுங்கிய விவசாய வேலைகளை சாம்பவர்கள் கையில் எடுத்தார்கள்.பெரும்பாலும் பிற்காலங்களில் பிராமணர்கள்,வெள்ளாளர்கள் ,நாடார்கள் ஆகியோரின் நிலங்களை பயிரிட்டவர்கள் சாம்பவர்களே.சாம்பவர் குழந்தைகளை அழைத்து வந்தால் தொளுவத்தில் வேலை செய்ய சொல்லலாம்.தொளுவத்திலேயே அந்தக் குழந்தைகள் படுத்துக் கொள்வார்கள்.பழங்கஞ்சி கொடுத்தால் போதும்.பத்து பசு மாடு உள்ள தொளுவத்தையும் மாடுகளையும் ஒரு சின்னக் குழந்தை பார்த்துக் கொள்ளும்.பத்துமாட்டின் பாலையும் கறந்து குடித்து விட்டு,நெய்யாகவும் பண்டமாகவும் மாற்றி விழுங்கி விட்டு, மூணு நாள் பழசை இவர்களுக்குத் தந்தால் போதும்.

ஏற்கனவே பனையேற்றுத் தொழில் இருந்தாலும்,பிராமணர்களின் ,வெள்ளாளர்களின் பாட்ட நிலங்கள் பயிரிடுவதையும் அவர்களுக்கு கூலிக்கு செல்வதையும் நாடார்கள் மெல்ல மெல்ல நிறுத்தி; நிறுத்தியே விட்டார்கள்.பதிலாக காடுகளைத் திருத்தினார்கள்.இது அரை வயிற்றுக்கு ஆகும் வேலையாகவே தொடக்கத்தில் இருந்தது.இதுவெல்லாம் ஒரு பிழைப்பாகுமா ? என்றெல்லாம் ஏளனப் பேச்சுகளைக் கடந்து காடு திருந்தியதும் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது.காடு திருந்தியதும் அதிலிருந்து சாமி வந்தது.உயிர்ப்பச்சையைப் பார்த்து விட்டார்கள்.அது ஒளியில் மினுங்கியது.இருளிலும் மினுங்கியது.அந்த மினுக்கம் தன் மேனியிலும் ஒட்டிக் கொண்டது.அது சாமி வந்து ஒட்டிக் கொள்வதுதான்.முதலில் எதுவெல்லாம் கடினமாக இருக்கிறதோ அதுவெல்லாம் பின்னர் சுயேட்சை.முதலில் சொகுசாக உள்ளதெல்லாம் பிறகு அடிமைத்தனம்.ஏளனத்தைக் கடப்பதுதான் முதல் அடி.

பனையேற்று கடுமையான வேலையே,எவ்வளவு தினாவெட்டு பேசினாலும் நெஞ்சுக்கூடு நொறுங்கிவிடும்.முதுமையில் வாதம் வரும்.ஆனால் சுயேட்சையானது.பனையேறியை கொஞ்சம் கீழிறங்கி வராமல் வரமாட்டான்.பனையை வைத்திருந்தால் தானா ஏறமுடியும் ? மிரட்டி பதனீர் கேட்டால் பாதிப்பதனீர் அவன் மோண்டு வைத்ததுதான் கிடைக்கும்.அதற்கென்று தனிக் கலசம் அவனிடமுண்டு.அவனை மிரட்டிப் பதனீர் குடிக்கும் ஊர் சண்டிகள் உண்மையாகவே நிஜ பதனீரின் சுவை அறியமாட்டார்கள்.பனையின் கீழே போய் நின்றால் பட்டை வரவேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.ஆனால் அவர்கள் குடித்த திரவம் வேறு என்பது அறியார்கள்.சண்டிகளின் அறிவு அவ்வளவுதான்.குறைவின் காரணமாகத் தானே,எல்லோருக்கும் தன்னளவே என்று கருதுவதன் காரணமாகத்தானே அவன் சண்டியாகவே இருக்கிறான் ? விபரமுள்ள சண்டி இனம் என்று ஒன்று எந்த ஊரிலாவது இருக்கிறதா? பனையேற்றுக் காரனிடம் விரோதம் செய்தால் பகை பாராட்டினால் ,மேலாதிக்கம் காட்டினால் மாலைக் கள்ளில் வைத்து உன்னைப் பற்றியறிந்த சொற்களைக் கலந்து உனது வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டுப் போய்விடுவான்.

.நம்மை இழந்து செய்கிற வேலைகள் எதில் செய்தாலும் அது தன்னுடைய பண்பை நமக்குத் தருகிறது.தேர்வு செய்தவை உயர்ந்தவையாக இருக்குமானால் உயர்ந்த பண்புகள் வந்து சேர்ந்து விடும்.அவை வருவதுதான் கடினம்,வந்துவிட்டால் பின் எளிதில் திரும்பிச் செல்லாது.உயர்ந்த பண்புகள் அத்தனையையும் அதனாலேயே செல்வம் என்று சொல்கிறோம்.பனை அது தன் பண்புகளை ,வளையாமலிருப்பதை,நிமிர்ந்து நிற்பதை முதலில் ஏறுகிறவனுக்குத் தரும்.அது பதனீரில் கலந்து எந்த வடிவில் பருகினாலும் அதன் வழியே நுழைந்து பருகியவனுக்குள் புகுந்து விடும்.பனையின் பண்பு தலைவணங்காதது.ஆனால் எதனையும் எதிர்பாராமல் அனைத்தையும் தருவது. ஒரு விஷயம் என்னவென்றால் பனையேறுவதாக இருக்கட்டும்,விவசாயமாக இருக்கட்டும்,காடு திருத்தி களனி உண்டாக்குவதாக இருக்கட்டும்.இந்த விஷயங்கள் அதில் ஈடுபடுபவனை வெளி உலகத்தில் இருந்து முற்றிலுமாகத் துண்டித்து விடக் கூடியவை.வெளியுலகை அறிய துணை தேவையாக இருப்பவை.வெளியில் என்ன நடக்கிறது ? என்பதையே அறியவிடாமல் செய்து விடும்.பிராமணன் நிலத்தைக் கைவிட்ட பிறகுதான் வெளி நாடு சென்றான்.பற்றிக் கொண்டிருப்பவன்,இங்கேயே சுருங்கி இருக்க வேண்டியதுதான்.பூர்வீகத் தொழில்கள் அனைத்துமே ஒருவிதத்தில் சொல்லப்போனால் அடிமைத் தொழில்களே

பிராமணர்களுக்கு நிலத்தின் மீது பற்றில்லை.நிறைய இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருந்து சென்றுகொண்டேயிருந்தது.முதலில் நிலத்தை இழந்தவர்கள் அவர்களே.நிலத்தில் மீது பிராணனை விடாமல் கையில் நிலத்தை வைத்திருக்க வழியே கிடையாது.விட்டுப் போய்விடும்.இருந்தபடியே வைத்திருக்க வழியில்லை.விட விருப்பமில்லாமல் விட்டவர்கள் வெள்ளாளர்கள்.

###

பொன்னு நாடாரை அவருடைய தகப்பனார் இந்த நிலத்தில் கொண்டுவந்து போட்டார்.எத்தனை வயதில் இங்கு வந்து சேர்ந்தோம் என்பதெல்லாம் பொன்னுவுக்கு நினைவில் இல்லை.உச்சு வெயில் சூடுதான் தனது உடலாக மாறியிருக்கிறது என சமயங்களில் அவர் நினைத்துக் கொள்வதுண்டு.உச்சு வெயிலுக்கு ஒதுங்கி நின்னாத்தான் என்ன ? பாசமாக அன்பாக இருக்கையில் அவர் கேட்கும் கேள்வி இது.வெயிலாளும் அவருக்கு ஒத்தாசை செய்வதுண்டு.பகிரமாக "இனி சித்த அந்த பன மூட்டுல வெயிலுக்கு ஒதுங்கி நின்னாத்தான் என்ன புள்ள ? பொடிச் சூடு தாங்குவியா நீ...என்பார்.

[ தொடரும் ]

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"